Share via:
ஆசிய விளையாட்டு போட்டியில் இந்தியாவுக்கு துப்பாக்கி சுடுதலில் மேலும் ஒரு தங்கம் மற்றும் வெள்ளிப் பதக்கங்கள் கிடைத்துள்ளது.
சீனாவில் உள்ள ஹாங்ஸு நகரில் 19வது ஆசிய விளையாட்டு போட்டிகள் கடந்த செப்டம்பர் மாதம் 23ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகின்றன. இப்போட்டியில் இந்திய அணி சார்பில் பங்கேற்றுள்ள வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் தங்களது விளையாட்டு போட்டிகளில் சிறப்பாக செயல்பட்டு பதக்கங்களை வாரி குவித்து வருகின்றனர்.
அதன் ஒரு பகுதியாக இன்றைய போட்டியில் ஆடவர் துப்பாக்கி சுடுதல் போட்டியில் 50 மீட்டர் ரைபிள் பிரிவில் இந்தியா ஒரு தங்கப்பதக்கத்தை பெற்றுள்ளது. ஐஸ்வர்பிரதாப், ஸ்வப்னில் சுரேஷ், அகில் ஆகியோர் அடங்கிய இந்திய ஆடவர் துப்பாக்கி சுடுதல் அணி தங்கப்பதக்கத்தை பெற்று இந்திய நாட்டிற்கு பெருமை சேர்த்துள்ளது.
அதேபோன்று இந்திய மகளிருக்கான துப்பாக்கி சுடுதல் போட்டியில் ஈஷா சிங், பாலக், திவ்யா ஆகியோர் அடங்கிய அணி வெள்ளி பதக்கத்தை வென்றுள்ளது. அதன்படி பார்த்தால் இந்தியாவுக்கு துப்பாக்கிசுடுதல் போட்டியில் 5 தங்கம், 5 வெள்ளி, 5 வெண்கலம் என மொத்தம் 15 பதக்கங்கள் கிடைத்துள்ளன. மேலும் ஆசிய விளையாட்டுப் போட்டியில் பதக்கப் பட்டியலில் 5வது இடத்தை வகித்து வருகிறது. இதுவரை 7 தங்கம் உள்ளிட்ட 27 பதக்கங்களை பெற்று வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் இந்தியாவிற்கு பெருமை சேர்த்துள்ளனர்.

