Share via:
மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் செய்து தருவதாக விஜய் கொடுத்த வாக்குறுதிகளை
நிறைவேற்றாமல் எஸ்கேப் ஆவதற்கே வெள்ளை அறிக்கை வெளியிட்டுள்ளதாக எதிர்க்கட்சிகள் பொளந்து
கட்டுகிறார்கள். சட்டசபை ஆரம்பிக்க இருக்கும் நிலையில், எதிர்க்கட்சிகள் கத்தியைத்
தீட்டிக்கொண்டு இருக்கிறார்கள்.
இதுகுறித்து மத்திய அமைச்சர் எல்.முருகன், ‘’தமிழக பெண்களுக்கு
ஜூன் மாதத்திலும் அதே ரூ.1,000 மட்டுமே பயனாளிகளின் கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ளது.
ரூ. 2.500 எப்போது தரப்படும் என்ற கேள்விக்கு தவெக அரசிடம் பதில் இல்லை.
மேற்குவங்கத்தில் பாஜக ஆட்சி அமைந்தால் மாதம் தோறும் பெண்களுக்கு
ரூ. 3000 வழங்கப்படும் என வாக்குறுதி அளித்தோம். அதன்படி பாஜக ஆட்சி பொறுப்பேற்றவுடன்
அறிவித்தபடி அன்னபூர்ணா யோஜனா திட்டம் செயல்பட்டது. அதன்படி பெண்களுக்கு மாதம் ரூ.
3,000 உதவித்தொகை வழங்கப்படுகிறது. பெண்களுக்கு ரூ.3000 வழங்குவதாக கொடுத்த வாக்குறுதியை
நிறைவேற்றியது பாஜக. ஆனால் தமிழகத்தில் நடப்பது என்ன?
தேர்தல் காலத்தில் அண்ணன், தம்பி, மாமா என்ற உணர்வுபூர்வமான பேச்சுகளால்
மக்களின் நம்பிக்கையைப் பெற்ற முதலமைச்சர் ஜோசப் விஜய் அவர்கள், இன்று அந்த மக்களின்
நியாயமான கேள்விகளுக்கு பதில் சொல்ல வேண்டிய கட்டாயத்தில் உள்ளார். பெண்களுக்கு மாதந்தோறும்
ரூ.2,500 வழங்கப்படும் என்ற தேர்தல் வாக்குறுதியை தவெக அரசு உடனடியாக நிறைவேற்ற வேண்டும்…’’
என்று கேட்டுள்ளார்.
அதேபோல் வானதி சீனிவாசன், ‘’விஜய் தலைமையிலான த.வெ.க. அரசு, பதவியேற்ற
37வது நாளில் நிதி நிலைமை குறித்த வெள்ளை அறிக்கையை வெளியிட்டுள்ளது. மின் வாரியம்,
போக்குவரத்து கழகங்கள், நுகர்பொருள் வாணிபக் கழகம் போன்ற பொதுத்துறை நிறுவனங்களின்
கடன்களையும் சேர்த்து, தமிழ்நாட்டின் மொத்த கடன் ரூ. 13 லட்சத்து 18 ஆயிரம் கோடியை
தாண்டியுள்ளது. கடந்த 2021 முதல் 2026 வரை ஐந்து ஆண்டு திமுக ஆட்சியில் மட்டும் சுமார்
ரூ. 5 லட்சம் கோடி கடன் வாங்கப்பட்டுள்ளது. இப்போது தமிழ்நாட்டில் உள்ள ஒவ்வொரு குடிமகன்
மீதும் ரூ. 1,28,934 கடன் சுமை உள்ளது. இந்த புள்ளி விவரங்கள் அனைத்தும், ஏற்கனவே எல்லோரும்
அறிந்த ஒன்றுதான்.
200 யூனிட் இலவச மின்சாரம், பயிர்க் கடன் தள்ளுபடி போன்ற சில வாக்குறுதிகளை
முழுமையாக நிறைவேற்றாமல் தந்திரமாக மக்களை த.வெ.க. அரசு ஏமாற்றி வருகிறது. இது தமிழ்நாட்டு
மக்களிடையே பெரும் அதிருப்தியையும், கோபத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இதிலிருந்து மக்களை
திசை திருப்புவதற்காக வெள்ளை அறிக்கை நாடகத்தை த.வெ.க. அரசு அரங்கேற்றியுள்ளது என்பதில்.சந்தேகம்
இல்லை…’’ என்று கேட்டுள்ளார்.
இந்த நிலையில் விஜய் அறிவித்தபடி 1.31 கோடி பேருக்கு மாசம் ரூ2,500
கொடுத்தால் மாசத்துக்கு ரூ.3,275 கோடி ஒதுக்க வேண்டியிருக்கும். இப்போது அதற்கு பணம்
இல்லை என்று சொல்லியிருக்கிறார்கள்.
வேறு என்ன வழி என்று கேட்டதற்கு, “ஸ்மார்ட் மீட்டர் திட்டம், திருவான்மியூர் – உத்தண்டி
மேம்பால செலவு ரூ.2,100 கோடியை நிறுத்தலாம்’’ என்று சொன்னபடியே அந்த திட்டங்கள் கிடப்பில்
போடப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.
அடுத்த மாதமாவது 2500 ரூபாய் குடுங்க புரோ…. தாய் மாமன் சீர் குடுங்க
சி.எம். சார். மின்சாரம் நிஜமாகவே 200 யூனிட் ஃப்ரீயாக்குங்க விஜய் என்றெல்லாம் சட்டசபையில்
திமுகவும் அதிமுகவும் மிரட்டப் போகிறார்கள். விஜய் எப்படி தாக்குப்பிடிப்பார் என்று
பார்க்கலாம்.
