Share via:
கொளத்தூர் தொகுதியில் தோல்வி, சட்டமன்றத் தேர்தலில் திமுக படு
தோல்வி அடைந்த நிலையில் தனது முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்திருக்கிறார் ஸ்டாலின்.
அதோடு இன்று அவர் உருக்கமான அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
அதில் ஸ்டாலின், ‘இப்போது வரை கிடைத்துள்ள புள்ளிவிபரங்களின்படி
தி.மு.க. கூட்டணிக்கு 1 கோடியே 54 லட்சத்து 82 ஆயிரத்து 782 வாக்குகள் கிடைத்துள்ளன.
இம்மக்கள் அனைவருக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றியை நான் தெரிவித்துக் கொள்கிறேன். கூடுதல்
தொகுதிகளில் வெற்றி பெற்ற கட்சியானது, நம்மை விட 17.43 இலட்சம் வாக்குகளை மட்டுமே கூடுதலாகப்
பெற்றுள்ளது. நமக்கும் அவர்களுக்குமான வாக்கு விழுக்காடு வேறுபாடு என்பது 3.52 விழுக்காடு
மட்டுமே.
மக்களாட்சியில் மக்களே நம் வணக்கத்துக்குரியவர்கள். அவர்களுக்காகவே
நாம் கட்சி நடத்துகிறோம். அவர்களுக்காகவே நாம் அரசியலில் இயங்குகிறோம். எனவே, அனைத்து
மக்களுக்கும் நன்றி தெரிவிக்க நேரில் செல்லுமாறு அனைத்து வேட்பாளர்களையும் கேட்டுக்
கொள்கிறேன்.
திராவிட முன்னேற்றக் கழகம் ஆறு முறை ஆட்சியில் இருந்துள்ளது. நாம்
பார்க்காத வெற்றியும் இல்லை; நாம் சந்திக்காத தோல்வியும் இல்லை. அரசியல் பொதுவாழ்வில்
கொள்கையைக் காக்கும் பயணத்தில் நமது கொள்கை தோல்வி அடைந்துவிடக் கூடாது என்பதில்தான்
நாம் எப்போதும் கவனமாக இருப்போம். வெற்றியாக இருந்தாலும், தோல்வியாக இருந்தாலும் அதனைச்
சமமாகக் கருதி தனது இலட்சியப் பயணத்தை நடத்துபவர்கள்தான் கழக உடன்பிறப்புகள். அதனால்தான்
முக்கியமான மாநாடுகள், பொதுக்கூட்டங்களில் பேசும்போதெல்லாம், தமிழ்நாடு முழுமைக்குமான
தொண்டர்கள் அனைவருக்கும் வணக்கம் வைத்து விட்டுத்தான் நான் தொடங்குவேன்.
இயக்கத்தின் இரத்த நாளங்கள்,
வேர்கள் நீங்கள்தான். எனக்கு ஆறுதல் சொல்லி பலரும் குறுஞ்செய்தி அனுப்பி வைத்து வருகிறீர்கள்.
உங்களால் உருவாக்கப்பட்ட எனக்கு, உங்களது வலிமையால் வலிமை பெற்ற எனக்கு நீங்கள் உடனிருக்கும்
வரை என்ன கவலை? நாம் அனைவரும் தலைவர் கலைஞரின் உயிரினும் மேலான அன்பு உடன்பிறப்புகள்.
அந்த உணர்வோடு தொடர்ந்து நாம் பயணிப்போம். உங்கள் உழைப்பால் விளைந்த அறுவடைதான்
1.54 கோடி வாக்குகள்.
உங்கள் உழைப்புக்கு நான் என்ன கைம்மாறு செய்யப்போகிறேன்? தலைமைத்
தொண்டன் என்ற உணர்வோடு நாம் தொடர்ந்து பயணிப்போம். ஆளும் கட்சியாக இருந்தால் மக்களுக்கான
திட்டங்களைத் தீட்டுவோம். எதிர்க்கட்சியாக இருந்தால் மக்களுக்கான கோரிக்கைகளுக்காகவே
போராடுவோம். அந்த வகையில் இப்போது வலிமையான எதிர்க்கட்சியாக இருந்து மக்களுக்கான அரசியலை
நாம் தொடர்வோம்..’’ என்று தெரிவித்திருக்கிறார்.
இந்த நிலையில் திமுகவை உடைக்க வாய்ப்பு இருக்கிறதா என்று விஜய்
டீம் அலசிக்கொண்டு இருக்கிறார்கள். அதற்கு வாய்ப்பு இல்லை என்பதால் குறைந்தபட்சம் திமுகவிடம்
இருந்து கூட்டணிகளை எல்லாம் பிரிக்கும் வேலை நடக்கிறது.
இது, சாத்தியப்படுமா என்பது இரண்டு நாட்களுக்குள் தெரிந்துவிடும்.
