Share via:
ஒவ்வொரு தேர்தலையும் நம்பிக்கையுடன் தனித்து சந்தித்துவந்த சீமானுக்கு
இந்த தேர்தல் மிகப்பெரும் அதிர்ச்சி கொடுத்திருக்கிறது. அத்தனை தொகுதிகளிலும் டெபாசிட்
பறிபோயிருக்கிறது.
இந்த நிலையில் விஜய்க்கு வாழ்த்து தெரிவித்திருக்கும் சீமான்,
‘’சட்டமன்றப் பொதுத்தேர்தலில் நாம் தமிழர் கட்சிக்கு வாக்களித்த தாய்த்தமிழ் உறவுகள்
அனைவருக்கும் என்னுடைய உளப்பூர்வமான நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். வெற்றிபெற்ற
அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களுக்கும், பொறுப்பேற்கவுள்ள தம்பி விஜய் தலைமையிலான தமிழக
வெற்றிக்கழக புதிய அரசுக்கும் என்னுடைய வாழ்த்துகள்!
தமிழர்களின் வரலாற்றுத்தாயகமான தமிழ்நாடு எனும் தாய்நிலத்தின்
நலனுக்காகவும், உயர்வுக்காகவும் தொடர்ச்சியாகக் களப்பணியாற்றுவோம். மண்ணுக்கும், மக்களுக்குமான
ஆக்கப்பூர்வ மாற்று அரசியலை பொறுப்புள்ள எதிர்க்கட்சியாய் நின்று நாம் தமிழர் கட்சி
செயலாற்றும்.’’ என்று தெரிவித்துள்ளார்.
அதேநேரம் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்
காரைக்குடி தொகுதியில் போட்டி இட்டுத் தோல்வியைத் தழுவியது மட்டுமின்றி, அவரும் டெபாசிட்
பெறாதது அக்கட்சியினரிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
காரைக்குடி தொகுதியில் சீமான் 30,000 வாக்குகள் மட்டுமே வாங்கி
நான்காமிடத்தைப் பிடித்திருக்கிறார். கட்சியின் நட்சத்திர முகங்கள் என அறியப்பட்ட இடும்பாவனம்
கார்த்திக், பாத்திமா பர்கானா, மரிய ஜெனிபர், நத்தம் சிவசங்கரன் உள்ளிட்ட பலரும்
10 முதல் 12,000 வாக்குகளே பெற்றிருக்கின்றனர். 85% தொகுதிகளில், 12,000-க்கும் குறைவாக
வாக்குகளைப் பெற்றுள்ளனர். கட்சி வலுவாக இருந்த சிவகங்கை மாவட்டத்தில் மட்டும்
20,000 வாக்குகளை நெருங்கியிருக்கிறது. நா.த.க அடைந்திருக்கும் இந்தப் படுதோல்வியால்,
தலைமை மீதான தங்கள் வருத்தங்களை முணுமுணுக்கத் தொடங்கியிருக்கிறார்கள் தம்பிகள். அதோடு
வேட்பாளராக நின்ற அத்தனை பேரும் காசு போச்சே என்று கதறுகிறார்கள்.
கடந்த 2024 மக்களவைத் தேர்தலில் 8% வாக்குகளைப் பெற்று, தமிழகத்தின்
மூன்றாவது பெரிய சக்தியாக உருவெடுத்த நாம் தமிழர் கட்சியின் வாக்கு வங்கி, இந்தத் தேர்தலில்
4% சுருங்கியுள்ளது. இதன் விளைவாக, அந்தக் கட்சி தனது மாநிலக் கட்சி என்ற அங்கீகாரத்தையும்
இழக்கும் சூழல் உருவாகியுள்ளது.
இனி, கூட்டணி சேர்ந்தால் மட்டுமே வெற்றி பெற முடியும் என்பதை உணர்வாரா
அல்லது தொடர்ந்து கட்சியை இப்படித்தான் வழி நடத்துவாரா என்பதுதான் தம்பிகளின் கேள்வியாக
இருக்கிறது.
