Share via:
மாற்றம் கொண்டுவரப் போகிறோம் என்று டார்ச் லைட் வைத்து கலைஞர்
கொடுத்த டி.வி.யை உடைத்த கமல்ஹாசனை தேர்தல் நேரத்தில் மிகச்சரியாக ஒழித்துக் கட்டிவிட்டார்
ஸ்டாலின். ஒரே ஒரு சீட், அதுவும் உதயசூரியன் சின்னத்தில் நிற்க வேண்டும் என்று கூறியதை
அடுத்து, தேர்தலே வேண்டாம் என்று ஒதுங்கிவிட்டார் கமல்.
கடந்த 2021 தேர்தலில் திமுகவுக்கு எதிராகப் போட்டியிட்ட கமல்ஹாசனின்
மக்கள் நீதி மய்யம் கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் திமுகவுடன் சேர்ந்தது. அதற்கு பரிசாக
அவருக்கு ராஜ்யசபா சீட் கொடுக்கப்பட்டது.
இந்த தேர்தலில் மநீம 12 தொகுதிகளை திமுகவிடம் கேட்டுவந்த நிலையில்,
அதில் உடன்பாடு ஏற்படவில்லை. இந்த நிலையில்
அண்ணா அறிவாலயத்திற்கு வருகை தந்த கமல்ஹாசன், “2026 சட்டமன்றத் தேர்தலில் மநீம போட்டியிடவில்லை.
இது தியாகம் அல்ல; கடமை. சுய நலம் அல்ல; பொறுமை” என நீண்ட அறிக்கையை வெளியிட்டு ஒதுங்கிவிட்டார்.
இதையடுத்து முதல்வர் மு.க.ஸ்டாலின், ‘’அன்பும் பண்பும் கொண்ட எனது
நண்பரும் மநீம தலைவருமான கமல் ஹாசன், இன்று அண்ணா அறிவாலயத்தில் என்னைச் சந்தித்து,
நடைபெற இருக்கும் சட்டமன்றத் தேர்தலில் நேரடியாகப் போட்டியிடவில்லை என்றும், திராவிட
முன்னேற்றக் கழகத்தின் தலைமையிலான கூட்டணியின் வேட்பாளர்களை நிபந்தனையின்றி ஆதரிப்போம்
என்றும் தெரிவித்தார்.
இரண்டு அரசியல் இயக்கங்களின் தலைவர்களாக மட்டுமல்ல, நல்ல நண்பர்களாக
நாங்கள் இருவரும் இருதரப்புக் கருத்துகளையும் பரிமாறிக் கொண்டோம்.
“இது தியாகம் அல்ல, கடமை” என்று அவர் சொன்னார். உண்மையில்
அவர் செய்திருப்பது தியாகம்தான். அவருக்கு நான் எப்படி நன்றி சொல்வது எனத் தெரியவில்லை.
அவரது முடிவு என்னை மிகவும் நெகிழ வைத்துவிட்டது. அவருக்கும் அவரது மக்கள் நீதி மைய
உறுப்பினர்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
தமிழ்நாடு முழுவதும் அன்புச் சகோதரர் கமல்ஹாசன் வலம் வர வேண்டும்
என்பது எனது அன்பான வேண்டுகோள். அமைய இருக்கும் திராவிட மாடல் 2.0 அரசு அவரது அன்பினாலும்
ஆனது என்பதை இப்போதே தெரிவித்துக் கொள்கிறேன். பேருள்ளத்துடன் தன்னலத்தைப் பின்னுக்குத்
தள்ளி, தமிழ்நாட்டு நலனை முன்னிறுத்தியிருக்கும் அவரது பெருந்தன்மையான முடிவை வரலாறு
பாராட்டும்” எனத் தெரிவித்துள்ளார்.
திமுகவினரோ, ‘’கலைஞரை விட தலைவர் எங்கேயோ போய்விட்டார். வம்பு
செய்த கமல்ஹாசன் கட்சியின் கதையை முடித்துவிட்டார். இனி, அப்படியொரு கட்சிக்கு அவசியமே
இருக்காது’’ என்கிறார்கள்.
