Share via:
நாம் தமிழர் கட்சியில் இருந்து விலகிய காளியம்மாள் இன்று எடப்பாடி
பழனிசாமி முன்னிலையில் தன்னை அதிமுகவில் இணைத்துக் கொண்டார். விஜய் கட்சிக்குப் போவார்
என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அதிமுகவில் தன்னை இணைத்துக்கொண்டார்.
இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்துப் பேசினார். அப்போது அவர்,
‘’2026 தேர்தல் நடைபெற இருக்கும் சூழலில் மக்கள் நிறைய பாதிப்புகளுக்கு உள்ளாகி இருக்கிறார்கள்.
விலைவாசி உயர்வு முதல் சட்டம் ஒழுங்கு வரை ஒவ்வொரு நாளும் தொடர்ந்து பிரச்சினைகளை சந்தித்துக்கொண்டே
இருக்கிறார்கள். மக்கள் ஏமாற்றப்பட்ட நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்கள். ஒரு மாற்றம் வராதா
என்று விரும்புகிறார்கள். வரக்கூடிய தேர்தல் அதற்கான பரிசை தரும்.
நான் கட்சியில் இருந்து விலகி கிட்டத்தட்ட ஒரு வருடம் ஆகிவிட்டது.
அரசியல் கட்சியில் இருந்துதான் விலகினேனே தவிர, மக்கள் அரசியலில் இருந்து ஒருபோதும்
விலகவில்லை. விவசாயிகள் போராட்டம், கடலோர மக்களின் போராட்டம் என்று பல்வேறு போராட்டங்களில்
கலந்துகொண்டுதான் இருந்தேன். எனக்கு கொஞ்சம் ஓய்வு தேவைப்பட்டது. என் குழந்தைகள் என்னிடம்
இல்லாமல் இருந்தார்கள். இந்த ஒரு வருடமாகத்தான் அவர்களை என்னுடன் கூட்டிவந்து வைத்திருக்கிறேன்.
அதேநேரத்தில் மக்களுடன் கலந்து யாருடன் சேர்ந்தால் மக்களுக்கு நல்லது செய்யலாம் என்று
ஆலோசனை செய்துகொண்டே இருந்தேன். அதனால்தான் இந்த தாமதம்.
நான் தேர்தலில் எந்த தொகுதியில் போட்டியிடுவது என்பது குறித்து
கட்சியின் தலைமை முடிவு செய்யும். எங்களுக்கான பங்கேற்பை கேட்டிருக்கிறோம். எங்கள்
பிரச்சினைகளை சொல்லியிருக்கிறோம். ஐயா அவர்கள் அதை சரிசெய்வதாக சொல்லியிருக்கிறார்கள்.
அதற்கான எல்லா வேலைகளும் நடந்துகொண்டு இருக்கிறது.
நான் ஏற்கெனவே அதிமுகவில் 2010-ல் மாவட்ட பொறுப்பில் இருந்தவள்தான்
காளியம்மாள். நாகை மாவட்டச் செயலாளரான ஓ.எஸ்.மணியன், ஒரு பட்டிமன்றத்தில் நான் பேசியதைக்
கேட்டு என்னை அதிமுகவில் இணைத்தார். அப்போது குழந்தைப் பேறு உள்ளிட்ட காரணங்களால் நான்
தொடர்ச்சியாக கட்சிப்பணி ஆற்றவில்லை…’’ என்று கூறியிருக்கிறார்.
காளியம்மாள் வரவு அதிமுகவினரை உற்சாகப்படுத்தியிருக்கிறது. இவருக்கு
மகளிர் அணியில் புதிய பதவி கொடுக்கப்படும் என்று தெரிகிறது.