Share via:
காலாண்டு தேர்வு விடுமுறையில் நடத்தப்பட உள்ள என்.எஸ்.எஸ். முகாம் குறித்து பள்ளிக்கல்வித்துறை முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் கடந்த 19ம் தேதி தொடங்கப்பட்ட காலாண்டு தேர்வு வருகிற 27ம் தேதி வரை நடக்கிறது. அதோடு 11 மற்றும் 12ம் வகுப்புகளுக்கு கடந்த 15ம் தேதி தொடங்கிய தேர்வு வருகிற 27ம் தேதிக்கு முடிகிறது. அதைத்தொடர்ந்து 5 நாட்கள் விடுமுறையும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த 5 நாட்களில் செப்.28ம் தேதி மிலாடி நபி, செப். 30 சனிக்கிழமை, அக்டோபர் 1ம் தேதி ஞாயிற்றுக்கிழமை, அக்டோபர்-2 காந்தி ஜெயந்தி, மீதியுள்ள செப்.29ம் தேதி வெள்ளிக்கிழமை மட்டுமே காலாண்டு தேர்வு விடுமுறை என்று பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் காலாண்டு தேர்வு விடுமுறை நாட்களில் நாட்டு நலப்பணித் திட்டம் தொடர்பாக பள்ளிக்கல்வித்துறை முக்கிய முடிவு ஒன்றை எடுத்துள்ளது. இது குறித்த சுற்றறிக்கையில், தமிழக பள்ளிக் கல்வி இயக்கக கட்டுப்பாட்டில் செயல்பட்டு வரும் அரசு, அரசு உதவி பெறும் பள்ளி, சுயநிதி, தனியார் மேல்நிலைப் பள்ளிகளில் செயல்பட்டு வரும் என்.எஸ்.எஸ். (நாட்டு நலப்பணித் திட்டம்) சிறப்பு முகாம் நடத்த ஏற்பாடு செய்ய வேண்டும்’’ என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.
காலாண்டு விடுமுறையான 5 நாட்கள் உள்ளிட்ட 7 நாட்களில் இம்முகாமை நடத்திட உரிய திட்டமிடலை மேற்கொள்ள வேண்டும். அதற்குரிய மாவட்ட தொடர்பு அலுவலருக்கு முதன்மை கல்வி அலுவலர்கள் அறிவுரை வழங்க வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.
அதைத்தொடர்ந்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் தலைமையில் அமைக்கப்படும் குழு, பள்ளிகள் சார்பில் சிறப்பு முகாம் நடைபெறுவதை உறுதி செய்ய வேண்டும் என்று அந்த சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சுற்றறிக்கையின் நகல் அனைத்து திட்ட அலுவலர்களுக்கும், சம்பந்தப்பட்ட பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. மேலும் ஒன்று முதல் 3ம் வகுப்பு ஆசிரியர்களுக்கான எண்ணும் எழுத்தும் சிறப்பு பயிற்சி இன்று முதல் (செப்.25) 27ம் தேதிவரை நடக்கிறது. அதோடு 6ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரையிலான ஆசிரியர்களுக்கு மதிப்பீட்டு பயிற்சியும் இந்த நாட்களில் நடத்தப்படும் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.