Share via:
இத்தனை காலம் டிடிவி தினகரனுக்கு நெருக்கடி ஏற்பட்ட காலங்களில்
எல்லாம் அவருக்கு உறுதுணையாக இருந்தவர் மாணிக்கராஜா. அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின்
துணைப் பொதுச் செயலாளராக மாணிக்கராஜா இன்று சென்னையில் அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர்
மு.க.ஸ்டாலினை சந்தித்து தன்னை திமுகவில் இணைத்துக்கொண்டார்.
அவருடன் அமமுகவின் 3 மாவட்ட செயலாளர்களும் திமுகவில் இணைந்தனர்.
கடம்பூர் ஜமீன்தார் குடும்பத்தைச் சேர்ந்த எஸ்.வி.எஸ்.பி. மாணிக்கராஜா, சசிகலாவின்
கணவர் நடராஜன் காலத்தில் இருந்தே அக்குடும்பத்துக்கு நெருக்கமானவர்.
டிடிவி.தினகரனின் தென் மண்டலத் தளபதியாகத் திகழ்ந்த மாணிக்கராஜாவுடன்
ஆலோசிக்காமல் பாஜக-அதிமுக கூட்டணியில் சேர்ந்ததால் அதிருப்தியிலிருந்தார். எடப்பாடியை
எதிரி என்று சொல்லிவிட்டு அங்கே போய் எப்படி நிற்க முடியும் என்று கேள்வி கேட்டே பிரிந்திருக்கிறார்.
அவருக்கு கோவில்பட்டி சட்டமன்றத் தொகுதி ஒதுக்குவதாக உறுதி கொடுக்கப்பட்டதாகச்
சொல்லப்படுகிறது. ஸ்டாலினை சந்தித்த மாணிக்கராஜாவுடன் எம்.பி., கனிமொழி, அமைச்சர்
கீதா ஜீவன் ஆகியோர் உடனிருந்தனர்.
அமமுக தொடங்கியதிலிருந்தே தினகரனுடன் செயல்பட்டு வருகிறார் மாணிக்கராஜா.
இவர் தென் மாவட்டங்களில் அரசியல் செல்வாக்கு கொண்டவர். தூத்துக்குடியை பூர்வீகமாக
கொண்டவர். கோவில்பட்டியில் ஒருமுறை தினகரன் போட்டியிட்ட போது அவருக்காக கடுமையாக
வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டிருந்தார். இவர் கடம்பூர் இளைய ஜமீன்தாராவார். மேலும் கயத்தாறு
ஒன்றிய முன்னாள் தலைவராகவும் இருந்து வந்தார்.
எடப்பாடி பழனிசாமியை முதல்வர் வேட்பாளராக ஏற்றுக் கொள்வது தற்கொலைக்குச்
சமம் என பேசிய தினகரன், திடீரென அந்தர்பல்டியாக என்டிஏ கூட்டணியில் இணைந்ததால் அமமுகவில்
சலசலப்பு ஏற்பட்டுள்ளது. அமமுகவின் தூண் என்று கருதப்பட்ட மாணிக்கராஜா திமுகவில் சேர்ந்திருப்பது,
மிகப்பெரும் அரசியல் மாற்றமாகப் பார்க்கப்படுகிறது. திமுகவுக்கு கூல் செய்தி.
