Share via:
எந்த காலகட்டத்திலும் தன்னைவிட்டு பிரியவே மாட்டார் என்று தர்மர்
மீது அசைக்க முடியாத நம்பிக்கை வைத்திருந்தார் ஓபிஎஸ். ஏனென்றால், யாரென்றே தெரியாத
ஒருவரை எம்.பி.யாக்கி அடையாளம் கொடுத்தார். அப்படிப்பட்ட ஆதராளரே இன்று எடப்பாடி பக்கம்
தாவி வந்துவிட்டார்.
அது சரி, யார் அந்த தர்மர்..?
அதிமுகவின் அவைத்தலைவர் தமிழ்மகன் உசேன் தொடங்கி 2021 சட்டமன்றத்
தேர்தலில் தோல்வியடைந்த மூத்த தலைவர்கள் முன்னாள் அமைச்சர்கள் என பலர் ராஜ்யசபா வேட்பாளராக
தங்களை அறிவிக்க வேண்டும் என கட்சித் தலைமையிடம் கோரிக்கை வைத்தனர்.
அப்போது அதிமுகவின் ஒருங்கிணைப்பாளராக ஓ.பன்னீர்செல்வமும், இணை
ஒருங்கிணைப்பாளராக எடப்பாடி பழனிசாமியும் பதவி வகித்து வந்த அக்காலத்தில் ஜெயக்குமார்
மற்றும் சி வி சண்முகம் ஆகிய இருவருக்கே அந்த ராஜ்யசபா பதவி கிடைக்கும் சூழல் இருந்தது.
தன்னுடைய ஆதரவாளர் ஒருவர் ராஜ்யசபா உறுப்பினராக வேண்டும் அவர்
எளிமையான பின்னணியில் இருந்து வந்திருக்க வேண்டும் என ஓ.பன்னீர்செல்வம் முடிவெடுக்க
இறுதியில் ஆளுக்கு ஒரு வேட்பாளர் என்ற முடிவு எடுக்கப்பட்டது. எடப்பாடி பழனிசாமி தரப்பில்
சி வி சண்முகம் முன்மொழியப்பட்டார். ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் பல்வேறுகட்ட ஆலோசனைகளுக்கு
பிறகு தர்மர் முன்மொழியப்பட்டார்.
அதிமுகவின் மூத்த நிர்வாகிகள் பலர் இருக்கும் போது தன்னுடைய கோட்டாவை
பயன்படுத்தி தர்மருக்கு பதவியை பெற்றுத் தந்த ஓ.பன்னீர்செல்வத்தின் மீது அப்போதே எதிர்ப்பு
அலை தொடங்கியது. எடப்பாடி பழனிசாமிக்கும் ஓ பன்னீர்செல்வத்திற்கும் ஏற்பட்ட மோதலுக்கு
பல காரணங்கள் உண்டு. இருந்தாலும் இருவருக்குமான மோதல் தொடங்கியது இந்த தர்மரால் தான்.
அந்த தர்மர் தான் எடப்பாடி பழனிசாமியின் தலைமையை ஏற்று இணைந்துள்ளார்.
இப்போது தர்மர் மட்டுமின்றி, அந்த பகுதியைச் சேர்ந்த ஒட்டுமொத்த
அதிமுகவினரும் இபிஎஸ் பக்கம் வந்திருக்கிறார்கள்.
இப்போது சசிகலா மட்டுமே தனியே மிச்சமிருக்கிறார். டிடிவி தினகரன்
பாணியில் அவரையும் கூட்டணிக்குள் கொண்டுவந்தால் அதிமுக வெற்றி உறுதி என்று நினைக்கிறார்
எடப்பாடி. அதற்கு டிடிவியும் கை கொடுக்கிறார். ஆக, அதிமுகவில் உற்சாகம் தொற்றிக் கொண்டது.
