Share via:
டிடிவி தினகரன் என்.டி.ஏ. கூட்டணியில் இணைக்கப்பட்ட பிறகு பல்வேறு
மாற்றங்கள் நடைபெற்று வருகின்றன. திமுகவில் இணைந்துவிடாமல் பன்னீரைத் தடுத்த தினகரன்
அடுத்ததாக செங்கோட்டையனை விஜய் கட்சியிலிருந்து வெளியேற்றும் முயற்சி எடுத்திருக்கிறார்.
செங்கோட்டையனுக்கு நெருக்கடி கொடுக்கும் வகையிலே தினகரன், ‘’அதிமுகவை
ஊழல் கட்சி என்று விஜய் சொல்கிறார். கடந்த 2021 வரை அதிமுக ஆட்சியில் அமைச்சராக இருந்த
செங்கோட்டையனை தவெகவில் எதற்காக அவர் சேர்ந்துகொண்டார்?’’ என்று கேள்வி எழுப்பியிருக்கிறார்.
செங்கோட்டையன் பற்றி டிடிவி தினகரன், “நானும் செங்கோட்யைனும் கடந்த 1986-ம் ஆண்டிலிருந்தே
நண்பர்களாக பழகி வருகிறோம். அவர் தவெகவுக்கு போவதற்கு முன்பே என்னிடம் கூறிச் சென்றார்.
அந்த அடிப்படையில் நான் தவெக கூட்டணிக்கு வருவேன் என்று உறுதியாக நம்பினார்.
ஆனால் ஜெயலலிதா ஆட்சி அமைய வேண்டும் என்பதால் நான் என்.டி.ஏ. கூட்டணியில்
இணைந்தேன். பழனிசாமியும், நான் இந்தக் கூட்டணிக்கு வர வேண்டும் என்று விருப்பப்பட்டார்.
பன்னீரும் வரவேண்டும்..’’ என்று கருத்து தெரிவித்திருக்கிறார்.
மூன்று முறை முதல்வராக இருந்த ஓபிஎஸ் திமுக கூட்டணிக்குப் போகமாட்டாரென்று
கூறியிருக்கும் தினகரன் அவருக்கு வரவேற்பு கொடுக்கும் வகையில் பேசியிருப்பதைப் பார்க்கையில்,
விரைவில் அவர் என்.டி.ஏ. கூட்டணியில் இணைவதற்கு வாய்ப்பு உண்டு என்பதே தெரிகிறது.
நிறைய வழக்குகள் இருப்பதால் தனிக்கட்சி தொடங்காமல் கூட்டணியில்
பங்கேற்பார் என்கிறார்கள். அதேபோல் செங்கோட்டையனை திரும்பக் கொண்டுவரும் முயற்சிகள்
நடக்கிறது. விஜய் கட்சியில் செங்கோட்டையனுக்கு எந்த பதவியும் உருப்படியாகக் கொடுக்கவில்லை,
மதிப்பும் இல்லை என்பதால் திரும்புவதற்குத் தயார் என்கிறார்கள்.
கூட்டணி தலைமை அதிமுக இருக்கும் நிலையில், டிடிவி தினகரன் இதுபோன்ற
முயற்சிகளை தன்னிச்சையாக எடுப்பதற்குப் பின்னணியில் பாஜக இருப்பதாகச் சொல்கிறார்கள்.