Share via:
அரசியலில் மாபெரும் மாற்றத்தைக் கொண்டுவரப் போகிறோம், கூட்டணி
ஆட்சி அமைக்கப்போகிறோம் என்றெல்லாம் வீரம் பேசிய விஜய் இப்போது, மற்ற அரசியல் கட்சிகளால்
கைவிடப்பட்ட ராமதாஸ், பிரேமலதாவுக்காக வெயிட் பண்ண வேண்டிய பரிதாப நிலைக்கு ஆளாகியிருக்கிறார்.
திமுகவும், அதிமுகவும் பலமான கூட்டணியாக மாறியிருக்கும் நிலையில்,
தனியே நிற்பது தவெகவுக்கு ஆபத்து என்பதை உணர்ந்து தடுமாறுகிறார் விஜய். காங்கிரஸ் மற்றும்
விடுதலை சிறுத்தைகள் கட்சியினரை கூட்டணிக்குக் கொண்டுவந்துவிடலாம் என்று விஜய்யை நம்பவைத்த
ஆதவ் அர்ஜூனாவும், ஜான் ஆரோக்கியசாமியும் இப்போது ராமதாஸ், பிரேமலதாவையாவது கொண்டுவரத்
துடிக்கிறார்கள்.
தே.மு.தி.க பொதுச்செயலாளர் பிரேமலதாதான். தே.மு.தி.க-வின் கடலூர்
மாநாட்டிலேயே தன்னுடைய கூட்டணி நிலைப்பாட்டை அறிவிப்பதாகச் சொல்லியிருந்தார் பிரேமலதா.
ஆனால், இதுவரை எந்த முடிவும் எட்டப்படவில்லை. அதனால் பிப்ரவரி 2ம் வாரம் என்று தள்ளிப்போட்டிருக்கிறார்.
இதுகுறித்து பேசும் தேமுதிகவினர், “2021 சட்டப்பேரவைத் தேர்தலில்,
60 சீட்டுகளில் போட்டியிட்டு இரண்டு லட்சம் வாக்குகள் மட்டுமே கிடைத்தது. ஆனால், விஜயகாந்த்
மறைவுக்குப் பிறகு கட்சியின் செல்வாக்கு பெருமளவு உயர்ந்திருக்கிறது. ஐந்து சதவிகித
வாக்குவங்கி இருப்பதால் 30 சீட்டுகளும், ஒரு மாநிலங்களவை எம்.பி பதவியும் கேட்கிறோம்.
ஆனால், எட்டு சீட்டுகளுக்கு மேல் ஒதுக்க அதிமுக தயாராக இல்லை. திமுகவில் 6 சீட் மட்டுமே
சொல்கிறார்கள். எனவே, விஜய் கட்சியிடம் இணைந்து வாக்கு சதவீதத்தை உயர்த்திக் காட்டுவோம்’’
என்கிறார்கள்.
அன்புமணிக்கு எதிராக கடும் கோபத்திலிருக்கும் ராமதாஸ் தி.மு.க
கூட்டணியில் 18 தொகுதிகள் எதிர்பார்த்தார். அவருக்கு 3 தொகுதிகள் மட்டுமே உறுதி செய்யப்பட்டது.
எனவே ராமதாஸ் கடும் கோபத்திற்கு ஆளாகிவிட்டார். விஜய் பக்கம் போய்விடலாம் என்றே அவரும் கணக்கு போடுகிறார்.
இவர்கள் இருவரையும் வரவேற்கவும், கேட்கும் தொகுதிகள் கொடுக்கவும்
விஜய் தயாராக இருக்கிறார். ஆனால், இருவரையும் எப்படியும் என்.டி.ஏ. கூட்டணியில் இவர்களை
இணைத்தே தீர்வது என்று பாஜக சீரியஸ் பேச்சுவார்த்தை நடத்திவருகிறது. ஜெயிக்கப்போவது
விஜய்யா, பாஜகவா என்பது விரைவில் தெரிந்துவிடும்.
