Share via:
ஆட்சியில் பங்கு வேண்டும் என்று ஆளும் திமுக கூட்டணியில் உள்ள
காங்கிரஸ் தலைவர்கள் சிலர் வலியுறுத்தி வரும் நிலையில், டெல்லியில் காங்கிரஸ் மூத்த
தலைவர் ராகுல் காந்தியை, திமுக துணைப் பொதுச் செயலாளர் கனிமொழி நேற்று சந்தித்துப்
பேசி சமாதானம் செய்ததாகக் கூறப்படுகிறது. அதேநேரம், மதுரையில் திமுகவின் தளபதி பற்ற
வைத்த தீ போஸ்டர் யுத்தமாக மாறியிருக்கிறது.
தமிழக சட்டப்பேரவைக்கான தேர்தல் குறித்து காங்கிரஸ் மேலிடப் பொறுப்பாளர்
கிரிஷ் சோடங்கர், ‘‘கூட்டணி பேச்சு தொடர்பாக திமுகவின் பதிலுக்கு 2 மாதமாக காத்திருக்கிறோம்.
கூட்டணிப் பேச்சு இதுவரை தொடங்கவில்லை. திமுக தரப்பில் ஏன் இவ்வளவு தாமதம் என தெரியவில்லை’’
என்று கூறியிருந்தார்.
இந்நிலையில் மதுரையில் நடைபெற்ற திமுக மாணவர் அணி சார்பில் மொழிப்போர்
தியாகிகளுக்கு வீரவணக்க நாள் பொதுக்கூட்டத்தில் பேசிய அக்கட்சி மாநகர செயலாளரும் சட்டமன்ற
உறுப்பினருமான கோ.தளபதி, காங்கிரஸ் கட்சியை, குறிப்பாக மாணிக்கம் தாகூர், ஜோதி மணி
ஆகியோரை கடுமையாக விமர்சனம் செய்தார்.
காங்கிரஸ் கட்சிக்கு ஒரு தொகுதிக்கு 3000 முதல் 4000 ஓட்டுதான்
இருக்கிறது. அந்த கட்சியில் ‘பூத் கமிட்டி போட ஆள் இல்லையெனவும் விமர்சித்திருந்தார்.
இதனால் அதிருப்தியடைந்த மாணிக்கம் தாகூர், ’சமூகவலைதளத்தில் வெளியிட்ட பதிவில், இந்த முறை மதுரை வடக்கு தொகுதியில் காங்கிரஸ்
வேட்பாளர் நிற்க வேண்டும் என்று காங்கிரஸ்
தலைமைக்கு கோரிக்கை வைப்பேன். தன்மானம் காக்க சிலருக்கு பாடம் புகட்ட வேண்டும். அதிகார
திமிருடன் இருந்தால் தோழமை கட்சிகள் அமைதியாக இருக்கும் காலம் முடிந்துவிட்டது’ என
பதிவிட்டிருந்தார்.
இந்நிலையில் மதுரை வடக்கு தொகுதியில் காங்கிரஸ் கட்சிக்கு கை சின்னத்தில்
ஓட்டுப் போடுங்கள் என்று போஸ்டர் ஒட்டி பரபரப்பைக் கிளப்பியிருக்கிறார்கள். இதற்கு
திமுகவினர் எதுவும் செய்யவேண்டாம் என்று உத்தரவு போடப்பட்டிருக்கிறதாம்.
காங்கிரஸ் கட்சி எதற்காகவும் தவெக பக்கம் போய்விடக் கூடாது என்றும்
தேர்தல் கூட்டணி உறுதி செய்ய இன்னும் சில வாரம் பொறுமையாக இருக்கவேண்டும் என்றும் சமாதானப்படுத்துவதற்கு
கனிமொழி நேற்று ராகுலை சந்தித்துப் பேசினார்.
கடந்த தேர்தலில் 25 தொகுதிகள் ஒதுக்கப்பட்ட நிலையில், இந்த முறை
கூடுதல் தொகுதிகள் ஒதுக்க வேண்டும் என்று ராகுல் காந்தி வலியுறுத்தியதாக கூறப்படுகிறது.
அதற்கு கூட்டணி பேச்சுவார்த்தைக்கான திமுக குழு விரைவில் அமைக்கப்பட்டு, தொகுதி பங்கீடு
பேச்சுவார்த்தை தொடங்கப்படும். கருத்து வேறுபாடுகளை மறந்து 2 கட்சிகளும் தமிழகத் தேர்தலில்
இணைந்து பணியாற்ற வேண்டும் என்று ராகுலிடம் கனிமொழி கேட்டுக்கொண்டதாகவும், அதை ராகுலும்
ஏற்றுக்கொண்டதாகவும் சொல்லப்படுகிறது.
சென்னையில் கனிமொழி இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசுவார் என்கிறார்கள்.
பார்க்கலாம்.