Share via:
பிரதமர் வருகைக்கு முன்பாக தேர்தல் கூட்டணிக்கு முழு வடிவம் கொடுத்துவிடுவோம்
என்று பியூஷ் கோயல் கூறியிருக்கும் நிலையில், ஒரே பேனரில் எடப்பாடி பழனிசாமியும் டிடிவி
தினகரனும் வைக்கப்பட்டிருப்பது கடும் சர்ச்சையாகியுள்ளது.
வரும் 23-ம் தேதி பிரதமர் மோடி தலைமையில் மதுராந்தகம் அருகே தேசிய
ஜனநாயகக் கூட்டணிக் கூட்டம் நடக்கிறது. இந்தக் கூட்டத்தில் கலந்து கொள்ள வருகை தரும்
பிரதமர் மோடியை வரவேற்று மதுராந்தகத்தில் வைக்கப்பட்ட பேனரில் அதிமுக – பாஜக கூட்டணியில்
இடம்பெற்றுள்ள தலைவர்களின் படங்களோடு, அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் படமும்
இடம்பெற்றுள்ளது.
இன்னமும் கூட்டணி முடிவை அறிவிக்காத டிடிவி தினகரன் தேசிய ஜனநாயகக்
கூட்டணியில் இணைகிறாரா… ஒன்றாக மேடையேற எடப்பாடி பழனிசாமி ஒப்புக்கொண்டாரா என்று கேள்விகள்
எழுந்துள்ளன.
இது குறித்து பேசிய பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா, ‘’பிரதமர் மோடி
இந்திய மக்கள் அனைவருக்கும் பொதுவானவர். அதிமுக, பாஜக இணைந்து தேசிய ஜனநாயக கூட்டணியில்
யார் இடம் பெற வேண்டும் என்பதை முடிவு செய்வார்கள்.திமுகவை வீழ்த்த டிடிவி.தினகரன்
தேசிய ஜனநாயக கூட்டணியில் இடம் பெற வேண்டும் என விரும்புகிறோம். அதை பிரதிபலிக்கும்
விதமாக தான் பிரதமரை வரவேற்கும் பேனரில் டிடிவி.தினகரனின் புகைப்படம் இடம் பெற்றிருக்கலாம்’’
என்று எஸ்கேப் ஆகியிருக்கிறார்.
இந்நிலையில் டாக்டர் கிருஷ்ணசாமி, ஜான்பாண்டியன், ஜிகே வாசன் ஆகியோரும்
பிரதமர் வருகைக்கு முன் தங்கள் நிலை உறுதியாகவேண்டும் என்று ஆசைப்படுகிறார்கள்..
பியூஷ்கோயல் தாக்குப்பிடிப்பாரா எடப்பாடி ஜெயிப்பாரா என்பது விரைவில்
தெரிந்துவிடும்.