Share via:
இந்த ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தல் வருவதால் தைப் பொங்கலுக்கு
கண்டிப்பாக ரொக்கப்பரிசு வழங்கப்படும் என்ற எதிர்பார்ப்பு மக்களிடம் உள்ளது. இதற்கிடையில்,
பொங்கல் பரிசை 5 ஆயிரமாகத் தர வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி
வலியுறுத்தியுள்ளார். தமிழகம் முழுக்க போஸ்டர் ஒட்டி கேட்கத் தொடங்கியும் இருக்கிறார்கள்.
இந்நிலையில் ரொக்கப்பரிசு பற்றிய தகவல் இல்லாமல் பொங்கல் தொகுப்பு மட்டும் வெளியாகியுள்ளது.
அதன்படி, தமிழகத்தில் உள்ள 2.23 கோடி குடும்ப அட்டைதாரர்களுக்கு
பொங்கல் பரிசுத் தொகுப்பாக அரிசி, சர்க்கரை, முழு நீள கரும்பு வழங்க ரூ.248.66 கோடி
நிதி ஒதுக்கி தமிழக அரசு அரசாணை பிறப்பித்துள்ளது. இதன்படி அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு
பொங்கல் பரிசுத் தொகுப்பாக தலா ஒரு கிலோ பச்சரிசி, சர்க்கரை மற்றும் ஒரு முழு
கரும்பு வழங்கப்படும்.
பெரும் எதிர்பார்ப்பு உள்ளதால், ரொக்கத் தொகை தொடர்பான ஆலோசனைகள்
அரசு தரப்பில் நடைபெற்றாலும், இன்னமும் முழு வடிவம் பெறவில்லை என்கிறார்கள். பொங்கலுக்கு
ஆயிரம் ரூபாய் மட்டுமே வழங்கப்படும் என்று சொல்லப்படுகிறது. ஆனால், இது குறித்த அறிவிப்பு
ஜனவரி 6ம் தேதி நடைபெறும் கூட்டத்தில்தான் முடிவு எடுக்கப்படும் என்கிறார்கள்.
இந்த ஆண்டு நியாயவிலைக் கடைகளுடன் இணைக்கப்பட்டுள்ள குடும்ப
அட்டைகளுக்கு ஏற்ப ஜனவரி 2ம் தேதிக்குள் டோக்கன்கள் அச்சிடப்பட்டு விநியோகத்துக்கு
தயார் நிலையில் வைக்க வேண்டும். குடும்ப அட்டைதாரர்களுக்கு சுழற்சி முறையில்
பொங்கல் தொகுப்பு வழங்க ஏதுவாக குடும்ப அட்டைகள், பிரிக்கப்பட்டு தெருவாரியாக
பராமரிக்கப்பட வேண்டும். அதன் அடிப்படையில் பரிசுத்தொகுப்பு பெற வேண்டிய நாள்,
நேரம் குறிப்பிட்டு டோக்கன்களை விற்பனையாளர்கள் குடும்ப அட்டைதாரர்களின் வீடுகளில்
வழங்க வேண்டும்.
இந்த டோக்கன்களை எக்காரணம் கொண்டும் நியாயவிலைக் கடையை சாராத
வேறு நபர்கள் அரசியல் சார்ந்த நபர்களை கெண்டு விநியோகிக்கக் கூடாது என்பது உள்ளிட்ட
பல்வேறு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன.
இந்நிலையில், தமிழகத்தில் உள்ள அனைத்து நியாய விலைக் கடைகளுக்கும்
குடும்ப அட்டைகளுக்கு வழங்க வேண்டிய வேட்டி, சேலை உள்ளிட்ட தொகுப்பு பொருட்கள்
அனைத்தும் அனுப்பப்பட்டு தயார் நிலையில் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதெல்லாம் சரி, ரொக்கம் எப்போது என்பதே மக்கள் கேள்வி. அல்வா குடுத்துடாதீங்க
ஸ்டாலின்.