Share via:
மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா வரும் 4ம் தேதி புதுக்கோட்டைக்கு
வருவதை ஓ.பன்னீர்செல்வம் ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்துக்கிடக்கிறார். அதேநேரம்,
இபிஎஸ் கூட்டணி பேச்சுவார்த்தையை பொங்கலுக்குப் பிறகே தொடர நினைக்கிறார். எனவே, அமித்
ஷா பயணம் பயன் தருவது உறுதியில்லை என்றே தெரிகிறது.
பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் நடத்தி வரும், “தமிழகம்
தலைநிமிர தமிழனின் பயணம்” என்ற யாத்திரைக்கு புதுக்கோட்டையில் நடைபெறும் நிறைவு விழாவில்
அமித் ஷா கலந்துகொண்டு உரையாற்றுகிறார். இந்த பொதுக்கூட்டத்தில் சுமார் 2 லட்சம்
பேர் பங்கேற்கும் வகையில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.
அன்று இரவு அமித் ஷா திருச்சியில் தங்குவதற்கு ஏற்பாடுகள்
செய்யப்பட்டுள்ளன. இதையடுத்து 5ம் தேதி திருச்சி ஸ்ரீரங்கம் கோயிலில் சுவாமி தரிசனம்
செய்யும் அமித் ஷா, தொடர்ந்து மன்னார்புரம் ராணுவத்திடலில் 2 ஆயிரம் பெண்கள் பங்கேற்கும்
“மோடி பொங்கல்” விழாவில் கலந்து கொள்கிறார். பின்னர், திருச்சியில் இருந்து டெல்லி
புறப்பட்டுச் செல்கிறார்.
தேர்தல் வருவதையொட்டி இனி தொடர்ந்து, பாஜக தேசியத் தலைவர்கள்
அடுத்தடுத்து தமிழகம் வரவுள்ளனர். பிரதமர் மோடியும் தமிழகம் வரவுள்ளார் என்கிறார்கள்.
இந்நிலையில் இந்த முறை அமித்ஷாவை இபிஎஸ்,ஓபிஎஸ் ஆகிய இருவரும்
தனித்தனியே சந்திக்க இருப்பதாகத் தெரிகிறது. தனக்கு ஒரு தெளிவான வழியைக் காட்ட வேண்டும்
என்று அமித்ஷாவுக்கு பன்னீர் கோரிக்கை வைக்கிறார்.
அதேநேரம், பன்னீரை கட்சிக்குள் சேர்க்க மறுக்கும் இபிஎஸ், இப்போது
கூட்டணி பேச்சுவார்த்தைக்குத் தயாராக இல்லை என்றே தெரிகிறது. முதலில் பாமகவை கூட்டணியில்
இணைத்துவிட்டு, அதன்பிறகே தொகுதி உடன்பாடு குறித்து பேசுவதற்கு இபிஎஸ் விரும்புகிறார்.
இபிஎஸ் பேசுவதை வழக்கம்போல் அமித்ஷா கேட்டுக்கொள்வாரா அல்லது இழுத்துப்
பிடிப்பாரா என்பது இரண்டு நாட்களில் தெரிந்துவிடும்.