Share via:
கடந்த சட்டமன்றத் தேர்தலில் அதிமுகவில் இருந்து விரட்டப்பட்ட பிரேமலதா,
இப்போது முன்கூட்டியே உஷாராகி ஒரே நேரத்தில் மூன்று பக்கமும் பேசிவருகிறார். அதாவது
திமுக, அதிமுக, விஜய் கட்சியினரிடம் எத்தனை சீட் என்று கேட்பது அரசியல் வில்லங்கமாகிவருகிறது.
தேமுதிக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் அக்கட்சியின் பொதுச் செயலாளர்
பிரேமலதா விஜயகாந்த் தலைமையில் கோயம்பேட்டில் உள்ள கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது.
இதில் மாவட்டச் செயலாளர்களிடம், யாருடன் கூட்டணி அமைக்க வேண்டும் என்பது குறித்து ஒரு
படிவம் கொடுக்கப்பட்டு, அதில் திமுக, அதிமுக, தவெக, மற்றவை என ஆப்ஷன்கள் கொடுக்கப்பட்டு
அதில் ஒன்றை தேர்வு செய்து அதற்கான காரணத்தையும் குறிப்பிட்டு சமர்பிக்க வேண்டும் கேட்டுக்கொள்ளப்பட்டது.
இதையடுத்து பேசிய பிரேமலதா விஜயகாந்த், தேமுதிக யாருடன் கூட்டணி
வைக்க வேண்டும் என்று மாவட்டச் செயலாளர்களிடம் கருத்துகளை கேட்டுள்ளோம். அவர்களின்
கருத்து ஒவ்வொரு மாவட்டத்தில் உள்ள அனைத்து நிர்வாகிகளின் கருத்தாக இருக்கும். தொண்டர்கள்
விரும்பும் கூட்டணியை தேமுதிக அமைக்கும். ராஜ்ய சபா சீட் என்பது ஏற்கெனவே பேசப்பட்டது.
அது ஒரு புறம் இருக்கட்டும். இப்போது நடைபெறுவது சட்டப்பேரவை தேர்தல் என்பதால் எங்களுடைய
முழு கவனமும் சட்டப்பேரவை தேர்தலை நோக்கித் தான் இருக்கும்.
ஓய்வூதிய அறிவிப்பு குறித்து அரசு ஊழியர்களின் கருத்து தான் தேமுதிக-வின்
கருத்து. இடைநிலை ஆசிரியர்கள், செவிலியர்கள், தூய்மைப் பணியாளர்கள் தொடர் போராட்டத்தில்
ஈடுபட்டுள்ளனர். தமிழக அரசு அதில் கவனம் செலுத்தி அவர்களின் பிரச்சினைக்கு தீர்வுகாண
வேண்டும்.
திமுக கொடுத்த வாக்குறுதியில் 50 சதவீதம் நிறைவேற்றி உள்ளனர்,
இன்னும் 50 சதவீதம் நிறைவேற்றவில்லை. சட்டம் – ஒழுங்கு கேள்விக்குறியாக உள்ளது. இதை
யாரும் மறுக்க முடியாது. இந்த ஆட்சியை மதிப்பிட வேண்டியவர்கள் மக்கள் தான்.
அனைத்துக் கட்சிகளும் தேமுதிக-வுக்கு தோழமைக் கட்சிகள் தான். அனைவரும்
தேமுதிக-வுடன் கூட்டணி வைக்க விரும்புகிறார்கள்; வரவேற்கிறார்கள். உரிய நேரத்தில் சரியான
முடிவை நாங்கள் எடுப்போம். ஆட்சியில் பங்கு என்ற கருத்து ஓங்கி ஒலிக்கிறது. கூட்டணி
கட்சிகளும் அமைச்சரவையில் அங்கம் வகிக்க வாய்ப்பு உள்ளது.
இந்த நிமிடம் வரை எந்தக் கூட்டணியும் உறுதியாகவில்லை. தற்போது
கூட்டணியில் உள்ளவர்கள் வெளியேறலாம், புதிய கட்சிகள் கூட்டணிகள் அமைக்கலாம்…’’ என்று
கூறினார்.
இந்த நிலையில் திமுக மற்றும் அதிமுக கூட்டணியில் 6 சீட்களும் விஜய்
கட்சியில் 10 சீட்களும் கொடுப்பதற்கு விருப்பம் காட்டுவதாகத் தெரிகிறது. அதேநேரம்,
பிரேமலதா ஆசையோ எக்கச்சக்கமாக இருக்கிறது. என்ன நடக்கிறது என்று வேடிக்கை பார்க்கலாம்.