Share via:
ஆட்சி அதிகாரத்தில் பங்கு கொடுக்காத திமுக
கூட்டணியில் இருந்து வெளியேறி விஜய்யுடன் சேர்ந்து தமிழகத்தில் ஆட்சியைப் பிடிக்க காங்கிரஸ்
கட்சியில் ஒரு கும்பல் முயற்சி செய்துவருகிறது. அவர்களுக்கு வழிகாட்டும் மாணிக்கம்
தாகூருக்கு திமுகவினர் அடி மேல் அடி கொடுக்க, அவரும் செமையாக பதிலடி கொடுத்துவருகிறார்.
லயோலா கல்லூரி வெளியிட்ட ஐபிடிஎஸ் தகவலை
பரப்பும் திமுகவினர் காங்கிரஸ் கட்சிக்கு மொத்தமே 3.10% வாக்குகளே உள்ளன என்று கூறுகிறார்கள்.
அதோடு, ஆட்சியில் பங்கு என்றாலே அது ஆர்.எஸ்.எஸ். குரல் என்றும் எச்சரிக்கை செய்கிறார்கள்.
இது குறித்து பேசும் காங்கிரஸ்காரர்கள்,
‘’ஆட்சியில் பங்கு என்பதே ஆர்.எஸ்.எஸ். குரல் என்பது புது புரளியா இருக்குது..?? அப்போ
மத்தியில் காங்கிரஸிடம் திமுக அதிகாரத்தில் பங்கு வாங்கியதே.. அப்போ திமுகவும் ஆர்.எஸ்.எஸ்.
அமைப்பும் ஒன்றாக இருக்கிறதா..?
எதற்கெடுத்தாலும் பிஜேபி உள்ள பூந்துரும்
என்பது என்ன வகையான உருட்டு.?? கூட்டணிக் கட்சிகளுக்கு அதிகார பகிர்வு தந்தும் கூட
பாஜக’வை எதிர்க்கலாமே..! ஒட்டுமொத்த அதிகாரத்தையும் தனக்குள் மட்டுமே வைத்துக் கொண்டு
தான் பாஜகவை எதிர்க்க வேண்டும் என்ற வரையறை ஏதும் இருக்கின்றதா என்ன.?’’ என்று கேட்கிறார்கள்.
இந்த ஐபிடிஎஸ் தரவு குறித்து மாணிக்கம் தாகூர்,
‘’தமிழ்நாட்டில் கூட்டணியே அரசியல் உண்மை. ஒவ்வொரு கட்சிக்கும் தங்களுக்கான வாக்கு
ஆதரவு உள்ளது. இந்த தரவு காங்கிரஸ் மட்டுமல்ல, மற்ற கட்சிகளின் எண்ணிக்கைகளும் முழுமையாக
பிரதிபலிக்கப்படவில்லை என நினைக்கிறேன். ஆனால் கூட்டணி இல்லாமல் தமிழ்நாட்டில் யாரும்
வெல்ல முடியாது. அதே நேரம், இப்போது அதிகாரம் மட்டும் அல்ல – அதிகாரப் பகிர்வும் விவாதிக்க
வேண்டிய நேரம் வந்துவிட்டது’’ என்கிறார்.
அதோடு ஆர்.எஸ் பாரதிக்கும், ‘’அண்ணன் ஆர்.எஸ்.
பாரதி அவர்கள் சொன்னது இரண்டு கருத்துகள். ஒன்று: மக்களவை எதிர்கட்சி தலைவர் அவர்களும்
தமிழக முதல்வர் அவர்களும் சகோதரர்களைப் போல இருப்பவர்கள்; முடிவுகளை அவர்கள் இருவரும்
சேர்ந்து எடுப்பார்கள். ஆனால் இரண்டாவது கருத்து: “எம்பி தேர்தல் முடிந்துவிட்டது;
எம்எல்ஏ யாரும் ஆட்சியில் பங்கு பற்றி யாரும் கேட்கவில்லை” என்பது சரியான கூற்று அல்ல.
எம்பி தேர்தலில் தமிழகத்தில் ஆட்சியில் பங்கு கேட்பது அவுட் ஆஃப் செலபஸ். ஏனெனில்,
எங்கள் சட்டமன்ற காங்கிரஸ் தலைவர் நேற்று ஆட்சியில் பங்கு கேட்ட செய்தி’’ என்று ராஜேஷ்குமார்
பேசியதை எடுத்துக் காட்டியிருக்கிறார்.
ப.சிதம்பரத்தை எதிர்ப்பதற்காகவே இப்படி கலகக்குரல் எழுப்புகிறார்
மாணிக்கம் தாகூர். இவரை உடனே கட்சி கட்டுப்படுத்தவில்லை என்றால் கூட்டணிக்குச் சிக்கல்தான்
என்கிறார்கள்.
அடங்குவாரா அல்லது ஆட்டம் போடுவாரா என்று பார்க்கலாம்.