Share via:
சசிகலா, ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரை கட்சிக்குள் சேர்த்துக்கொள்ள
வாய்ப்பே இல்லை என்று அழுத்தம்திருத்தமாக கூறியிருக்கும் எடப்பாடி பழனிசாமி, டிடிவி
தினகரனுக்கு பச்சைக் கொடி காட்டியிருப்பதாக டெல்லி செய்தி தெரிவிக்கிறது.
அமித்சாவை சந்தித்தபிறகு இன்று காலை எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களிடம்
பேசினார். அப்போது அவர், ’’அரசு ஊழியர்கள் போராட்டத்தை கையில் எடுத்தவுடன் திமுக அரசு
ஒரு நாடகத்தை அரங்கேற்றி இருக்கிறது. உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியம் என்ற அறிவிப்பை
வெளியிட்டு அரசு ஊழியர்களை ஏமாற்றி இருக்கிறார்கள். இன்றைக்கு மத்திய அரசு அறிவித்த
ஒருங்கிணைந்த பென்ஷன் திட்டத்தின் அதே வடிவத்தில்தான், திமுக அரசு திட்டமும் இருக்கிறது.
அதோடு இன்றைய தினம், ‘உங்கள் கனவை சொல்லுங்கள்’என்று ஒரு
அறிவிப்பு வெளியிட்டு மக்களை ஏமாற்றுவதற்கு ஒரு நாடகத்தை அரங்கேற்றியிருக்கிறார்.அரசு
பணத்தில் 50 ஆயிரம் தன்னார்வலர்களை வீடு வீடாக அனுப்பி, மக்களின் கனவை சொல்லுங்கள்
என்ற அறிவிப்பை வெளியிட்டு இருக்கிறார். இதற்கு பென் அமைப்பின் மூலம் ஆட்களைத் தேர்வு
செய்து, இதை நடைமுறைப்படுத்துவதாக பரவலான பேச்சு இருக்கிறது என்று போட்டுத் தாக்கியிருக்கிறார்.
அதோடு ஓபிஎஸ் கட்சிக்குள் வருவதற்கு வாய்ப்பில்லை. பல முறை இதைப்பற்றி
சொல்லிவிட்டோம். முதன்முதலாக ஐடிசி கிராண்ட் சோழாவில் எங்கள் கூட்டணி பேச்சுவார்த்தை
நடந்தது. அப்போது உள்துறை அமைச்சரும் நானும் இணைந்து பேட்டி கொடுத்தோம். உள்கட்சி விவகாரத்தில்
தலையிட மாட்டேன் என்று உள்துறை அமைச்சர் அப்போதே சொல்லிவிட்டார். தொடர்ந்து அப்படித்தான்
இருக்கிறது.
அதேபோல் சசிகலாவை மீண்டும் இணைப்பதற்கும் எண்ணம் இல்லை. சசிகலா
இல்லாமலே அதிமுக வலிமையாக இருக்கிறது. உங்களைப்போல ஊடக நண்பர்கள்தான் அதை பில்டப் செய்து
பெரிதாக போட்டுக்கொண்டு இருக்கிறீர்கள். அதிமுக வலிமையாக இருப்பதால்தான் 2021-ல்
75 இடங்களை எங்கள் கூட்டணி பெற்றது. வெறும்
2 லட்சம் வாக்குகளில் 43 தொகுதிகளை இழந்தோம். எங்களுக்கும் அவர்களுக்கும் பெரிய வித்தியாசம்
எதுவுமில்லை. 3 சதவீதம் வித்தியாசம்தான் என்று கூறினார்.
அதேநேரம் டிடிவி தினகரன் குறித்த கேள்விக்கு, ‘’ஹேஸ்யமாக சொல்வதற்கு
எதுவும் இல்லை. சில கட்சிகள் எங்களோடு வரும். பேச்சுவார்த்தை நடத்திக்கொண்டு இருக்கிறார்கள்.
அதையெல்லாம் வெளிப்படையாகப் பேச முடியாது. ஒவ்வொரு கட்சியாக சேரும்போது உங்களையெல்லாம்
அழைத்து நிச்சயமாக தகவல் தெரிவிக்கப்படும்…’’ என்று பேசியிருக்கிறார்.
இதற்கு தினகரன் என்ன சொல்லப்போகிறார் என்று பார்க்கலாம்.