Share via:
அமித்ஷாவை சந்தித்துப் பேசி சென்னை திரும்பியிருக்கும் எடப்பாடி
பழனிசாமியை இன்றைய தினம் நயினார் நாகேந்திரன் சந்தித்துப் பேசுவது பரபரப்பாகிவருகிறது.
இன்று அதிமுகவில் விருப்பமனு தாக்கல் செய்தவர்களை சந்தித்துப் பேச திட்டமிட்டிருக்கும்
இபிஎஸ்க்கு நெருக்கடி தரும் வகையில் பாஜக அவசரம் காட்டுவதாக அதிமுகவினர் குற்றம் சாட்டுகிறார்கள்.
நேற்றைய தினம் அமித்ஷாவை சந்தித்துப் பேசினார் இபிஎஸ். இதையடுத்து
பாஜக 60 சீட் கேட்பதாகவும் மூன்று அமைச்சர் பதவி கேட்பதாகவும் செய்திகள் வெளியானது.
இதுகுறித்து பேசிய நயினார், ‘’பாஜக 56 தொகுதிகள், 3 அமைச்சர்கள் என்பதெல்லாம் வதந்தி
எங்களுக்கு சீட்டு முக்கியமல்ல, திமுகவை விரட்டியடிக்க வேண்டும் என்பதே எங்கள் எண்ணம்..’’
என்று பேசியிருந்தார்.
இந்நிலையில் இன்று காலை எடப்பாடி பழனிசாமியை நயினார் நாகேந்திரன்
டீம் சந்தித்துப் பேசினார்கள். இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்தவர், ‘’பிரதமர் வருகையைப்
பற்றி ஆலோசித்தோம். கூட்டம் சென்னையிலா அல்லது மதுரையிலா என்பது பற்றி ஆலோசித்து முடிவுசெய்ய
இருக்கிறோம்.
பிரதமர் வரும் தேதியை இன்னும் முடிவு செய்யவில்லை. முடிவு செய்ததும்
சொல்கிறேன். இம்மாத இறுதியில் பிரதமர் வருவார். பேச்சுவார்த்தையில் எத்தனை தொகுதிகள்
முடிவாகி உள்ளன என்பதைப் பற்றி அப்புறம் சொல்கிறேன்…’’ என்று முடித்துக்கொண்டார்.
இந்நிலையில் பாஜக தேசிய செயல் தலைவர் நிதின் நிபின் நாளை தமிழகம்
வருகை தருகிறார். கோவையில் இரண்டு நாட்கள் தங்கியிருந்து தேர்தல் ஆலோசனை நடத்த இருக்கிறார்.
இதையடுத்து இம்மாதம் இறுதியில் மோடி வருகிறார்.
ஆக, எடப்பாடிக்கு நெருக்கடி அதிகரிக்கிறது. இம்மாதத்திற்குள் கூட்டணியை
முடிவு செய்யவேண்டிய கட்டாயம் நேர்ந்துள்ளது. எப்படி சமாளிக்கிறார் என்று பார்க்கலாம்.