Share via:
விடுதலை சிறுத்தைகள் திமுக பக்கம் இருப்பதால் டாக்டர் ராமதாஸ்
அந்த பக்கம் செல்வதற்கு வாய்ப்பே இல்லை என்று கருதப்பட்ட நிலையில், ஸ்டாலின் சிறப்பாக
ஆட்சி நடத்துகிறார் என்று ராமதாஸ் சர்டிஃபிகேட் கொடுத்திருப்பது அரசியல் பரபரப்பைக்
கிளப்பியிருக்கிறது.
அன்புமணியுடன் எடப்பாடி பழனிசாமி கூட்டணி வைத்திருப்பது செல்லவே
செல்லாது என்று சொல்லும் டாக்டர் ராமதாஸ், ‘’அன்புமணிக்கு கட்சியின் தலைமை பதவியை கொடுத்தேன்.
ஆனால் என்னிடமிருந்து கட்சியை பறிப்பதற்கு சதி திட்டம் தீட்டி சூழ்ச்சியோடு செயல்பட்டதை
நீங்கள் அறிவீர்கள். தேர்தல் ஆணையம் டெல்லி உயர்நீதிமன்றத்தில் தெரிவித்தவாறும் நீதிமன்ற
தீர்ப்பின்படியும் அன்புமணி பாமகவில் இல்லை. இவனுக்கு தலைமை பண்பு கொஞ்சம்கூட இல்லை
என்பதால் செய்ய வேண்டியதுதாயிற்று.
இப்போது கட்சி என்னிடம்தான் உள்ளது. அதற்கு ஆதாரம் நடந்த நிர்வாக
குழு, செயற்குழு, பொதுக்குழு. பாமகவை பொறுத்தவரை தொண்டர்கள் என்னிடம்தான் இருக்கிறார்கள்.
அன்புமணி எங்கே யாரை நிறுத்தினாலும் அவர்களுக்கு பாமகவினர் மட்டுமல்ல மற்றவர்களும்
ஓட்டு போட மாட்டார்கள்.
ஏனென்றால் ஒரு தந்தைக்கே துரோகம் செய்த நபரை, தந்தையிடமிருந்து
கட்சியை அபகரிக்க நினைத்த இந்த கும்பலுக்கா நாம் ஓட்டு போடுவது என்று நினைத்து ஓட்டுபோட
மாட்டார்கள். அன்புமணி வேண்டுமானால் சிவில் நீதிமன்றத்துக்கு போகலாம். இதை டெல்லி உயர்நீதிமன்றமே
சொல்லியிருக்கிறது. அதிமுக-அன்புமணி சார்பில் கூட்டணி நேற்று நடந்த ஒரு தெரு கூத்து
நாடகம். கூட்டணி பேசுவது நீதிமன்ற அவமதிப்பு. அவர் யார்கூட கூட்டணி பேசினாலும் அது
செல்லாது. அன்புமணி ஒரு மோசடி பேர்வழி. அவரிடம் விலைபோய் கூட்டணி அமைப்பார்களா என்பது
சந்தேகம்….’’ என்று கொதித்திருக்கிறார்.
திமுகவுடன் கூட்டணி வைப்பதற்கு வாய்ப்பு உண்டா என்று கேட்கையில்,
‘’கூட்டணி என்பது எல்லோரும் சேர்ந்து, நல்ல கட்சிகள் எல்லாம் சேர்ந்து அமைப்பதுதான்
ஒரு நல்ல கூட்டணி. பொங்கலுக்குள் கூட்டணி குறித்து அறிவிப்போம். அரசியலில் என்ன வேண்டுமானாலும்
நடக்கும். யாருடன் வேண்டுமானாலும் கூட்டணி வைப்போம். நாங்கள் கூடிபேசி ஒரு முடிவை எடுப்போம்.
அப்போது சொல்லுகின்றோம். எடப்பாடி பழனிசாமி எங்களிடம் எந்த தொடர்பும் வைத்துக் கொள்ளவில்லை’
என்று ஒரே போடாகப் போட்டிருக்கிறார்.
இந்த நிலையில் இன்று முதல் பாமக சார்பில் போட்டியிட விருப்பம்
உள்ளவர்கள் விருப்ப மனுக்களை அளிக்கலாம் என ராமதாஸ் அறிவிக்கப்பட்டுள்ளது.