Share via:
ஸ்டாலின் தொடர்ந்து இரண்டு முறை வெற்றி பெற்றிருக்கும் கொளத்தூர்
தொகுதியில் 1 லட்சத்துக்கும் அதிகமான வாக்குகள் நீக்கப்பட்டுள்ளது. கடந்த தேர்தலில்
ஸ்டாலின் 70 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருந்தாலும், அதற்கு 2011
தேர்தலில் சைதை துரைசாமியுடன் மோதியபோது 3 ஆயிரம் ஓட்டுக்கள் மட்டுமே அதிகம் பெற்றிருந்தார்.
இதற்கான வழக்கு இன்னும் உச்ச நீதிமன்றத்தில் நடந்துவருகிறது.
இப்போது 1 லட்சத்துக்கும் மேற்பட்ட வாக்குகள் விடுபட்டிருப்பதால்
வெற்றி பெறுவது சிரமம் என்ற முடிவுக்கு வந்திருக்கிறார். கொளத்தூர் தொகுதியை விட்டு
பாதுகாப்பான தொகுதி தேடும் வேலை நடக்கிறது.
அதேபோல் உதயநிதி தொகுதியில் கிட்டத்தட்ட 90 ஆயிரம் வாக்குகள் நீக்கப்பட்டுள்ளன
என்றாலும், அதே தொகுதியில் நின்று ஜெயிப்பதற்குத் தயாராக இருக்கிறார். இவர்கள் இருவருடைய
தொகுதியிலும் வாக்குகள் ஒட்டுமொத்தமாக நீக்கப்பட்டிருக்கும் சமயத்தில் எடப்பாடி பழனிசாமியின்
எடப்பாடி தொகுதியில், 26 ஆயிரத்து 375 பேர் மட்டுமே நீக்கப்பட்டுள்ளனர். அதனால் பாஜக
கைவண்ணம் இருக்கிறதா என்று ஒட்டுமொத்த கட்சிகளும் அதிர்ந்து நிற்கின்றனர்.
மு.க.ஸ்டாலின் கொளத்தூர் தொகுதியில் மொத்தம் 1,03,812 வாக்காளர்கள்
வாக்காளர் பட்டியலிலிருந்து நீக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. துணை முதல்வர்
உதயநிதி ஸ்டாலினின் சேப்பாக்கம் – திருவல்லிக்கேணி தொகுதியில் 89,241 வாக்காளர்கள்
நீக்கப்பட்டுள்ளனர்.
அமைச்சர் மா.சுப்பிரமணியன் பிரதிநிதித்துவம் வகிக்கும் சைதாப்பேட்டை
தொகுதியில் 87,228 வாக்காளர்களின் பெயர்கள் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளன. சென்னை
நகரில் உள்ள இந்த மூன்று முக்கிய தொகுதிகளிலும் நீக்கப்பட்ட எண்ணிக்கை அதிகமாக இருப்பது
குறிப்பிடத்தக்கதாக பார்க்கப்படுகிறது.
பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரனின் நெல்லை தொகுதியில்
42,119 வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளனர். அதேபோல், முன்னாள் அமைச்சர் அப்பாவுவின் ராதாபுரம்
தொகுதியில் 40,020 வாக்காளர்கள் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர்.
திமுக அமைச்சரான கே.என்.நேருவின் திருச்சி மேற்கு தொகுதியில்
57,339 வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அமைச்சர் பொன்முடியின் திருக்கோவிலூர்
தொகுதியில் 31,378 வாக்காளர்கள் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக தகவல்
வெளியாகியுள்ளது.
ஆளும் கட்சியினர் தொகுதியில் அதிக வாக்குகளும் எதிர்க்கட்சியினர்
தொகுதிகளில் குறைவான எண்ணிக்கையில் வாக்குகள் குறைந்திருப்பதும் கடும் சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது.