Share via:
நடிகர் விஜய்யின் மக்கள் சந்திப்பு மிகப்பெரும் அரசியல் மாற்றத்தை
தமிழகத்தில் உருவாக்கப்போகிறது என்று இப்போதே போஸ்டர்கள் தமிழகம் முழுக்க கலக்க ஆரம்பித்துவிட்டன.
மக்கள் கூடும் இடங்களில் பேசுவதற்கு விஜய் அனுமதி கேட்ட காரணத்தால்
தொடர்ந்து மறுக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் திருச்சி மரக்கடை எம்ஜிஆர் சிலை முன்பு
நாளை விஜய் பேசுவதற்கு 23 நிபந்தனைகளுடன் போலீஸார் அனுமதி வழங்கியுள்ளனர்.
அதாவது, விஜய் 30 நிமிடங்கள் மட்டுமே பேச வேண்டும். சென்னை புறவழிச்சாலை,
டிவிஎஸ் டோல்கேட், தலைமை தபால் நிலையம், பாலக்கரை, காந்தி மார்க்கெட் வழியாக மரக்கடை
வரும் விஜய், மீண்டும் காந்தி மார்க்கெட், அரியமங்கலம் பால்பண்ணை வழியாக சென்னை புறவழிச்சாலைக்கு
சென்றுவிட வேண்டும். ஆனால், ‘ரோடு ஷோ’ நடத்த அனுமதியில்லை. விஜய்யின் வாகனத்துடன் மொத்தம்
5 வாகனங்கள் மட்டுமே அனுமதிக்கப்படும்.
மருத்துவ வசதிகள், ஆம்புலன்ஸ், தீயணைப்பு வாகனங்கள் அனைத்தும்
அக்கட்சியினரே ஏற்பாடு செய்து கொள்ள வேண்டும். குழந்தைகள், கர்ப்பிணிகள், மாற்றுத்திறனாளிகளை
அழைத்து வரக்கூடாது. கட்சித் தொண்டர்கள் மிக நீளமான குச்சிகளில் கொடியை கட்டி எடுத்து
வரக் கூடாது. உயரமான கட்டிடங்கள், மரங்களில் ஏறி நிற்க தொண்டர்களுக்கு அனுமதி இல்லை.
விஜய் வரும்போது பட்டாசு வெடிக்கக் கூடாது. மேளதாளங்கள் இசைக்கக்
கூடாது. அனுமதியின்றி பிளக்ஸ் பேனர்கள் வைக்கக் கூடாது. பார்க்கிங் வசதிகளை அவர்களே
ஏற்பாடு செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட 23 நிபந்தனைகளை திருச்சி மாநகர காவல்துறையினர்
விதித்துள்ளனர். இதற்கு தவெக நிர்வாகிகள் ஒப்புக்கொண்டு கையெழுத்திட்டுள்ளனர்.
இதையெல்லாம் விஜய் ஒப்புக்கொண்டாலும் விஜய் ரசிகர்கள் கண்டுகொள்வார்களா
அடுத்தடுத்து டூர் நடக்குமா என்பதே சந்தேகத்தைக் கிளப்புகிறது.
தமிழகம் முழுக்க சுற்றுப்பயணம் செய்வார் என்று எதிர்பார்க்கப்பட்ட
நிலையில், .விஜய்யின் சுற்றுப் பயணம் செப்டம்பர் 13-ஆம் தேதி தொடங்கி டிசம்பர் 20-ஆம்
தேதி முடிவடைகிறது. கிட்டத்திட்ட மூன்றரை மாதங்கள் உள்ள இந்த காலகட்டத்தில், விஜய்யின்
பயணம் வெறும் 16 நாட்கள்தான். அதிலும், ஒவ்வொரு வாரத்தின் இறுதி நாளான சனிக்கிழமை மட்டும்தான்
பயணத்தை திட்டமிட்டுள்ளார் விஜய். ஒரே நாளில் இரண்டு அல்லது மூன்று மாவட்டங்களுக்கு
செல்லும் வகையில் பயணம் திட்டமிடப்பட்டுள்ளது.
விஜய் தொகுதி வாரியாக வருவார், வீதி வீதியாக வருவார் என்றெல்லாம்
முதலில் தகவல்கள் கசிந்தன. ஆனால், விஜய் ரொம்பத் தெளிவாக சனிக்கிழமைக்கு மட்டும் உறுதியாக
இருக்கிறாஅர்.
அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி ‘மக்களை காப்போம்; தமிழகத்தை
மீட்போம்’ என்ற பெயரில் தொகுதி வாரியாக மக்களை சந்திக்கிறார். இதுவரை சுமார் 150 தொகுதிகளுக்கு
சுற்றுப் பயணம் மேற்கொண்டிருக்கிறார் அவர். தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த்தும்
தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். அன்புமணியும் சுற்றிக்கொண்டு இருக்கிறார்.
இப்படி இருக்கையில், ஒரே நாளில் 2 அல்லது 3 மாவட்டங்கள் மட்டுமே
விஜய் செல்வது போதுமானதாக இருக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது. ஒவ்வொரு நாள் பேச்சும்
ஒரு வாரம் வைரலாக இருக்கும் என்று கருதப்படுவதால் நடப்பதை வேடிக்கை பார்க்கலாம்.