Share via:
கூவத்தூரில் உண்மையில் நடந்தது என்ன என்பது குறித்து 8 வருடங்கள் கழித்து அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் அளித்துள்ள பேட்டி தற்போது பேச்சுப்பொருளாக மாறியுள்ளது.
2026 தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் 7 மாதங்களே உள்ள நிலையில் அரசியல் களம் சூடுபிடித்துள்ளது. யார் யாருடன் கூட்டணி என்பதையும் தாண்டி யார் தலைமையில் எந்த கூட்டணி என்ற வாதமே முன்னிலைப்படுத்தப்பட்டு வருகிறது. மேலும் புதிதாக தொடங்கப்பட்ட தமிழக வெற்றிக்கழகமும் தமிழக திராவிட வரலாற்றில் மிகப்பெரிய திருப்புமுனையாக அமையும் என்றும் வாக்குகள் சிதறும் என்றும் ஆரூடம் சொல்லி வருகிறார்கள் அரசியல் நோக்கர்கள்.
இந்தநிலையில் அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசும்போது, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் ஆட்சியை காப்பாற்றியது பா.ஜ.க. கிடையாது. அதிமுக எம்எல்ஏக்கள் தான் என்று விளக்கம் அளித்துள்ளார்.
கட்சியில் இருந்து விலக்கப்பட்டவர்கள், விலகிச் சென்றவர்களை மறுபடியும் கட்சியில் சேர்க்கும் வேலைகளில் இறங்கிய முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் கட்சியில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்டார். அதை சரி என்கிற ரீதியில் எடப்பாடி பழனிசாமி பேசியதோடு மட்டுமல்லாமல், ஜெயலலிதா மறைவுக்கு பிறகு ஆட்சியை சிலர் கவிழ்க்கப் பார்த்தார்கள். அதை தடுத்து ஆட்சியை காப்பாற்றியது பா.ஜ.க. தான். எனவே நன்றி மறவாமல் நாங்கள் இருக்கிறோம். கட்சியை கவிழ்க்க நினைத்தவர்களை மன்னித்து துணை முதல்வர் பதவி கொடுத்தோம் என்று பேசியுள்ளார்.
இதற்கு பதில் அளிக்கும் வகையில் பேசிய டிடிவி தினகரன், கடந்த 2017ம் ஆண்டு பழனிசாமி தலைமையிலான அதிமுக ஆட்சியை காப்பாற்றியது பாஜக கிடையாது. 122 எம்எல்ஏக்கள்தான். கூவத்தூரில் தங்கவைக்கப்பட்ட 122 எம்எல்ஏக்கள் வாக்களித்ததால்தான் பழனிசாமி தமிழக முதல்வர் ஆனார். ஆனால் தற்போது அப்பட்டமாக பொய் பேசி வருகிறார்.
அந்த வகையில் 122 எம்எல்ஏக்கள் சசிகலாவின் பேச்சைக் கேட்டு பழனிசாமிக்கு வாக்களித்தார்கள். எனவே சாத்தான் வேதம் பேசுவது போல எடப்பாடி பழனிசாமி பேசி வருகிறார். அவருக்கு துரோகத்தை தவிர வேறு எதுவுமே தெரியாது. தோல்வி பயத்தால் உளரும் பழனிசாமியை நம்புவதற்கு தமிழக மக்கள் முட்டாள்கள் கிடையாது. எனவே நிச்சயம் அவர் தேர்தலில் தோற்கடிக்கப்படுவார் என்று சாபம்விடும் அளவிற்கு டிடிவி தினகரன் கொந்தளித்துப் போய் பேசியிருக்கிறார்.
********