Share via:
மருத்துவமனையில் இருக்கும் விஜய் ரசிகர் காவல் நிலையத்தில் அளித்திருக்கும்
புகாரை அடுத்து விஜய் மற்றும் அவரது பவுன்சர்களுக்கு கைதாகும் சிக்கல் உருவாகியிருக்கிறது.
கடந்த 21ஆம் தேதி மதுரையில் நடந்த விஜய் மாநாட்டில் லட்சக்கணக்கான
தொண்டர்கள் கலந்து கொண்டனர். 30 மீட்டர் தூரத்திற்கு போடப்பட்டிருந்த ராம்ப் வாக் மேடையில்
விஜய் நடந்த வந்த போது, இளைஞர்கள் பலரும் ராம்ப் வாக் மேடையில் ஏறி விஜய்க்கு துண்டை
அணிவிக்கவும் கட்டிப்பிடிக்கவும் முயன்றனர்.
இந்த ரசிகர்களை பவுன்சர்கள் தடுத்து நிறுத்தினார்கள். அப்படி தடுத்து தூக்கி வீசப்பட்டவர்களில்
ஒருவர் சரத்குமார். பெரம்பலூர் மாவட்டம் குன்னம் அருகே உள்ள பெரியம்மாபாளையத்தை சேர்ந்த
சரத்குமார் ராம்ப் வாக் மேடை மீது ஏறி விஜய்யை பார்க்க ஓடிவந்தார். அவரை பவுன்சர்கள்
கீழே தள்ளிவிட்டதில் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
அவர் இப்போது பெரம்பலூர் குன்னம் காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில்
புகார் மனு அளித்துள்ளார். அதில், விஜய்யை பார்க்க ஆர்வமாக சென்ற போது பவுன்சர்கள்
தன்னை தூக்கி கீழே வீசிவிட்டனர். இதில் தன்னுடைய தலை மற்றும் மார்பில் காயம் ஏற்பட்டுள்ளது.
இந்த விஷயத்தை வெளியே பேசக்கூடாது என்று ரசிகர் மன்றத்தினர் நெருக்கடி கொடுக்கிறார்களே
தவிர, எனக்கு ஆறுதல் கூறவும் நஷ்ட ஈடு வழங்கவும் யாரும் வரவில்லை என்று குறிப்பிட்டுள்ளார்.
இந்நிலையில் விஜய் மற்றும் அவரது பவுன்சர்கள் 10 பேர் மீது பெரம்பலூர்
குன்னம் போலீசார் நேற்று நள்ளிரவு வழக்குப்பதிவு செய்துள்ளனர். ஆபாசமாக திட்டுதல்,
தாக்குதல், தூக்கி வீசுதல் உள்ளிட்ட குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் 3 பிரிவுகளின்
கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
சரத்குமாருக்கு எந்தவித உதவிகளும் தலைமை செய்ய முன்வரவில்லை என்பதாலே
போலீசில் புகார் அளிக்க முன்வந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அவரை சமாதானப்படுத்த
முடியவில்லை என்றால் விசாரணைக்கு ஆஜராகவும் கைது செய்யப்படவும் வாய்ப்பு உள்ளது.