Share via:
கடந்த வாரம் ஸ்டாலினை சந்தித்துத் திரும்பிய சிபி ராதாகிருஷ்ணன்
இப்போது துணை ஜனாதிபதியாக நிறுத்துவதற்குத் திட்டமிடப்பட்டிருப்பது தமிழக அரசியலை குலுக்கியிருக்கிறது.
இது குறித்து பேசும் பாஜகவினர், ‘’தமிழ்நாட்டிற்கும் தமிழர்களுக்கும்
உச்சபட்ச அங்கீகாரம் அளிக்கும் பாஜக. பொதுவாழ்வில் அனைவரும் போற்றும் சி.பி.ராதாகிருஷ்ணன்
பாரத நாட்டின் துணை ஜனாதிபதியாக பொறுப்பேற்பது நம் அனைவருக்கும் பெருமை. அரசியல் வேறுபாடுகள்
பாராட்டாமல் தமிழ்நாட்டின் அனைத்து எம்பிக்களும் அவருக்கு ஆதரவு அளிக்க வேண்டியது கட்டாயம்.
மாண்புமிகு அப்துல் கலாம் அவர்களை ஜனாதிபதியாக கொண்டு வந்ததும் பாஜகவே. பிற்படுத்த
வகுப்பை சேர்ந்த ஒருவர் தமிழ்நாட்டில் இருந்து துணை ஜனாதிபதியாக பதவியேற்பது உண்மையான
சமூக நீதி’’ என்று குதூகலம் அடைகிறார்கள். அதோடு கலாமுக்கு பின் மற்றொரு தமிழரை, உயர்
பதவிக்கு அழைத்துச் செல்கிறது பாஜக என்கிறார்கள்.
அதேநேரம் திமுகவினர், ‘’தமிழ்நாட்டின் தேர்தல் அரசியலுக்காக
அரசியலமைப்பு பதவியான குடியரசு துணைத்தலைவர் பதவியை பயன்படுத்துகிறது பா.ஜ.க தமிழ்நாட்டைச்
சார்ந்த சி.பி இராதாகிருஷ்ணனை அப்பதவியில் அமர்த்தினால் ஓட்டுகள் வாங்கிவிடலாம் என்று
கனவு காண்கிறார்கள். தமிழர்களின் நிதி உரிமை, கல்வி உரிமை, பண்பாட்டு உரிமைகளை இவர்கள்
காலில் மிதிப்பது மக்களுக்கு நன்றாகவே தெரியும். தமிழரின் தொன்மைமிகு “கீழடி”
ஆய்வுகளை இருட்டடிக்க சதி செய்வதும் இவர்கள் தான். முதல்வரின் ‘திராவிடமாடல்’ இவர்களை
அச்சுறுத்திக்கொண்டே இருக்கிறது’’ என்கிறார்கள்.
சி.பி.ராதாகிருஷ்ணன் பற்றிய குறிப்புகள். முதலில் அதிமுக, இரண்டாவது
திமுக என இந்த இரண்டு திராவிடக் கட்சிகளால் 1998 & 1999 ல் மக்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டவர்
சி.பி.இராதாகிருஷ்ணன். அதன்பின் 2004, 2014, 2019 தோல்வி அடைந்தார். இவருக்கு இப்போது
இருப்பதிலேயே டம்மி பதவியான துணைக் குடியரசுத் தலைவர் பதவிக்கு தேர்ந்தெடுத்துள்ளனர்.
வெற்றி எளிதில் வாய்க்குமா எனத் தெரியவில்லை.
இப்போது தமிழர் என்பதற்காக திமுக இவரை ஆதரிக்குமா அல்லது கொள்கைக்காக
எதிர்த்து நிற்குமா என்பதே கேள்வி.