Share via:
செங்கோட்டையன் மீது எடப்பாடி நடவடிக்கை எடுத்தால் அதிமுக இரண்டு
துண்டாக உடைந்துபோகும், எக்கச்சக்க பேர் செங்கோட்டையனுக்கு ஆதரவாக வெளியே வருவார்கள்
என்றெல்லாம் கூறப்பட்டது. ஆனால், பெங்களூரு புகழேந்தியைத் தவிர வேறு யாரும் அவரை மதிக்கவில்லை.
தீவிர ஆதரவாளர்கள் ஒருசிலரைத் தவிர மற்றவர்கள் பதவியைத் தூக்கி எறியவில்லை.
இந்நிலையில் சிவி சண்முகம் அடுத்து ஆதரவுக் குரல் கொடுப்பார் என்று
கூறப்பட்டது. ஆனால், அவர் நேற்றைய தினமே தொடர்பு எல்லைக்கு வெளியே போய்விட்டார் என்பதால்
அரசியல் அனாதையாக மாறிவிட்டார் செங்கோட்டையன்.
ஓபிஎஸ்க்கு ஆதரவு கொடுப்பதற்கு முயற்சி செய்து தன்னுடைய பதவியையும்
மதிப்பையும் செங்கோட்டையன் கெடுத்துக்கொண்டார். இதன் மூலம் முக்குலத்தோர் கோபம் அதிகரித்துவிடும்
என்பதை அதிமுகவினரே நம்பவில்லை.
இது குறித்து பேசும் அதிமுகவினர், ‘’முக்குலத்தோர் என முன்னிறுத்தப்படும்
சசிகலா, ஓபீஎஸ் மற்றும் டிடிவி தினகரன் ஆகியோருக்கு முக்குலத்தோரிடம் பெரிய மதிப்பும்
மரியாதையும் இல்லை என்பதே உண்மை. 2021-ல் தேனி மாவட்டத்தில் பத்து தொகுதிகளில் போடிநாயக்கனூரைத்
தவிர எந்த தொகுதியிலும் வெல்ல முடியவில்லையே ஏன்? அப்போது ஏன் முக்குலத்தோர் அண்ணா
திமுகவுக்கு ஆதரவு அளிக்கவில்லை?
தனது சொந்த மண்ணான மன்னார்குடியில் முப்பது ஆண்டுகளாக அண்ணா திமுகவை
ஜெயிக்க வைக்க சசிகலாவுக்கு வக்கில்லையே.. அங்கே முக்குலத்தோர் ஆதரவு அவருக்கு இல்லையா?
ஆர்.கே.நகரில் செய்த பித்தலாட்டத்தால் மீண்டும் அங்கே போட்டியிட்டால் டெபாசிட் இழக்க
நேரிடும் என அஞ்சி முக்குலத்தோர் பெரும்பான்மையாக இருக்கும் தொகுதிகளில் களம் காணாமல்
2026-ல் கடம்பூருக்கு டிடிவி தினகரன் ஓடியது ஏன்?
இப்போது முக்குலத்தோரின் முகங்களாக செல்லூர் ராஜூ, நத்தம் விஸ்வநாதன்,
திண்டுக்கல் சீனிவாசன், ராஜன் செல்லப்பா, ஆர்.பி.உதயகுமார் போன்றவர்கள் உள்ளனர். எல்லாவற்றுக்கும் மேலாக அனைத்திந்திய அண்ணா திராவிட
முன்னேற்றக் கழகம் சாதி, மத பேதங்கள் கடந்த உணர்ச்சிகளின் சங்கமம்! எத்தனை சோதனைகள்
வந்தாலும் அதனைத் தகர்த்தெறிந்து மீண்டும் மீண்டும் தன்னை வலுப்படுத்திக் கொள்ளும்.
கட்சியை உடைப்பதற்கு திமுக, பாஜக என யார் முயற்சி செய்தாலும் அது நடக்கவே நடக்காது’’
என்கிறார்கள்.
இந்நிலையில் செங்கோட்டையன் தரப்பில் இருந்து செல்போன் அழைப்பைக்
கேட்டாலே அதிமுகவினர் அலறி ஓடுகிறார்கள். யார், யார் சொல்வதையோ கேட்டு தன்னுடைய இடத்தை
இழந்துவிட்டார் செங்கோட்டையன் என்பதே நிஜம்.