Share via:
மதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட மல்லை சத்யாவிற்கு மாமல்லபுரத்தில்
அவருடைய ஆதரவாளர்கள் உற்சாக வரவேற்பு கொடுத்துள்ளார்கள். “ஆரம்பிக்கலாமா
” என்று எழுதப்பட்ட கேக்கினை குடும்பத்தாருடனும் ஆதரவாளர்களுடனும் இணைந்து வெட்டி
கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.
மதிமுக பொதுச் செயலாளர் வைகோ சத்யாவை கட்சியில் இருந்து நீக்குவதாக
அறிவித்திருப்பது மிகப்பெரிய வரலாற்றுப் பிழை என்றே மதிமுகவின் அத்தனை தலைவர்களும்
கருதுகிறார்கள்.
மல்லை சத்யாவுக்கும், வைகோ மற்றும் முதன்மைச் செயலாளர் துரை வைகோவுக்கும்
இடையே நீண்ட காலமாக கருத்து மோதல் இருந்து வந்தது. இதுதொடர்பாக, “தன்னுடன் பல
போராட்டங்களில் பங்கேற்ற மல்லை சத்யா தனக்கு துரோகம் செய்துவிட்டார்” என வைகோ
பகிரங்கமாக குற்றம் சாட்டினார். இதற்குப் பதிலளித்த மல்லை சத்யா, “என்னை துரோகி
என்று அழைப்பதற்குப் பதிலாக, விஷம் கொடுத்திருந்தால் அதை குடித்துவிட்டு இறந்திருப்பேன்”
என்று வேதனையுடன் கூறினார்.
இதனைத் தொடர்ந்து, தன்னை துரோகி என்று கூறிய வைகோவுக்கு எதிராக
நீதிகேட்டு, மல்லை சத்யா கடந்த மாதம் சேப்பாக்கத்தில் தனது ஆதரவாளர்களுடன் உண்ணாவிரதப்
போராட்டத்தில் ஈடுபட்டார். இதையடுத்து, கட்சியின் கட்டுப்பாட்டை மீறியதாகவும், தலைமைக்கு
எதிராகச் செயல்பட்டதாகவும் கூறி, மல்லை சத்யாவை தற்காலிகமாக நீக்குவதாக வைகோ அறிவித்தார்.
மேலும், இந்த ஒழுங்கு நடவடிக்கையை கைவிட 15 நாட்களுக்குள் எழுத்துப்பூர்வமாக விளக்கம்
கேட்கப்பட்டது.
இதற்கு மல்லை சத்யா, “32 ஆண்டுகளாக எங்கள் உழைப்பை உறிஞ்சி,
சக்கையாக தூக்கி எறியத் துடிக்கும் உங்கள் பூர்ஷ்வா அரசியலை நாடு பார்க்கிறது. அதற்கான
விலையை நாட்டு மக்கள் நிச்சயம் உங்களுக்கு வழங்குவார்கள்” என்று கடுமையாக விமர்சித்திருந்தார்.
இந்நிலையில், மல்லை சத்யா மீது கட்சி விரோத செயல்களில் ஈடுபட்டது
உறுதியானதால், அவரை கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்துப் பொறுப்புகளிலிருந்தும்
நிரந்தரமாக நீக்குவதாக ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில்
தெரிவித்துள்ளார். மேலும், கட்சி உடமைகள் மற்றும் ஆவணங்களை உடனடியாக
ஒப்படைக்குமாறு மல்லை சத்யாவுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.இந்த நடவடிக்கை, ம.தி.மு.க.வில்
உட்கட்சி பிளவை மேலும் தீவிரப்படுத்தியுள்ளது.
இந்த அறிவிப்பு தனக்கு அதிர்ச்சியை கொடுக்கவில்லை என்றும், இதுதான்
நடக்கும் என்பது எதிர்பார்த்த ஒன்றுதான் என மல்லை சத்யா கூறி உள்ளார். அதோடு அவருக்கு
அதிமுகவில் இருந்து அழைப்பு வந்துள்ளது என்றும் இது குறித்து செப்டம்பர் 15 அன்று ஒரு
நல்ல முடிவு எடுப்பார் என்றும் கூறப்படுகிறது.