Share via:
ரஷ்யா மற்றும் உக்ரைன் நாடுகளுக்கு இடையில் நீண்ட நாட்களாக போர்
நிலவி வருகிறது. இந்நிலையில் இந்தியாவில் இருந்து ரஷ்யாவில் படிக்கச் செல்லும் மாணவர்களை,
ரஷ்ய நாடு வம்படியாக ராணுவத்தில் சேர்த்து பணிபுரிய அனுப்புவதாக அதிர்ச்சித் தகவல்
வெளியாகியுள்ளது. அப்படி சிக்கியிருக்கும் தமிழ் மாணவரை மீட்கும்படி பிரதமர் மோடியிடம்
முறையிட்டிருக்கிறார் துரைவைகோ எம்.பி.
ரஷ்யாவுக்குப் படிக்கச் சென்ற மாணவன் கிஷோர் கடந்த 31.07.2025
அன்று அவரது குடும்பத்தினரை தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு, தன்னை ஆகஸ்ட் 2 அன்று போர்முனைக்கு
அழைத்துச் செல்லப்பட உள்ளதாக தெரிவித்துள்ளார். ஏற்கனவே உக்ரைன் கட்டுப்பாட்டில் இருந்து,
இப்போது ரஷ்யப் படைகளின் கட்டுப்பாட்டில் உள்ள மரியுபால் என்ற பகுதியில் பயிற்சி பெற்று
வருவதாகவும் கூறியுள்ளார். மேலும், தனக்கு ஸ்டெராய்டுகள் மற்றும் அறியப்படாத மருந்துகள்
செலுத்தப்பட்டதாகவும் அவர் தனது பெற்றோரிடம் கவலைப்பட்டுள்ளார். இந்த தகவல் துரை வைகோ
எம்.பி.யிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து பிரதமரை சந்தித்த துரை வைகோ எம்.பி., ‘’ரஷ்யாவில் போர்
முனையில் சிக்கித் தவிக்கும் தமிழ்நாட்டைச் சேர்ந்த மருத்துவ மாணவர் கிஷோர் சரவணன்
உள்ளிட்ட நூற்றுக்கணக்கான இந்தியர்களை பத்திரமாக மீட்டு இந்தியாவுக்கு அழைத்து வர,
15 அரசியல் கட்சிகளைச் சார்ந்த, 68 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்ட கடிதத்தை
மாண்புமிகு பிரதமர் நரேந்திர மோடி அவர்களிடம் அவரது அலுவலகத்தில் நேரில் சந்தித்து
வழங்கினேன். அக்கடிதத்தில், தாமதத்தால் ஏற்படக்கூடிய ஆபத்துகளை எடுத்துரைத்து, அவர்களை
உடனடியாக மீட்க துரித நடவடிக்கைகள் மேற்கொள்ளுமாறு வலியுறுத்திக் கேட்டுக்கொண்டேன்.
கிஷோர் சரவணன் மட்டுமல்ல, அதிகாரப்பூர்வமாகவே 126 இந்தியர்கள்
ரஷ்யா-உக்ரைன் போரில் பங்கேற்கச் செய்ய வலுக்கட்டாயமாக ராணுவத்தில் சேர்க்கப்பட்டுள்ளதை
சுட்டிக்காட்டினேன். பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த மக்கள் கல்வி மற்றும் வாழ்வாதாரத்தைத்
தேடிச் சென்று, இவ்வாறு பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும், இந்தியர்களை போருக்கு அனுப்புவது,
இந்தியா-ரஷ்யா இடையேயான வெளியுறவுத்துறை ஒப்பந்தங்களுக்கு எதிரானது. இவ்வாறு இந்தியர்களுக்கு
கட்டாய ராணுவப் பயிற்சி அளித்து போருக்கு அனுப்புவது முற்றிலும் தவறான செயல் என்பதையும்
அழுத்தமாக எடுத்துரைத்தேன்.
இதுகுறித்து, நான் ஏற்கனவே வெளியுறவுத்துறை அமைச்சரைச் சந்தித்ததையும்,
நாடாளுமன்றத்தின் கவனத்தை ஈர்க்க குரல் கொடுத்ததையும், வெளியுறவுத்துறை செயலாளரைச்
சந்தித்து விரிவான விளக்கம் அளித்ததையும் தெரிவித்தேன். அனைத்தையும் கேட்டுக்கொண்ட
பிரதமர் அவர்கள், ரஷ்யாவில் சிக்கிக்கொண்டுள்ள அனைத்து இந்தியர்களை மீட்கும் பணிகள்
ஏற்கெனவே தொடங்கப்பட்டுள்ளதாகவும், அவை மேலும் துரிதப்படுத்தப்படும் என்றும் நம்பிக்கை
தெரிவித்தார்.
உடனடியாக மாணவன் மீட்கப்பட வேண்டும்.