News

விஜய் அவசரக் கூட்டம். பனையூரில் விவசாயிகள் சந்திப்பு..?

Follow Us

கொங்கு பகுதியில் அதிமுக ரொம்பவே ஸ்ட்ராங்க் என்பது எல்லோருக்கும் தெரியும். அதேநேரம், தெற்கில் படு வீக் என்பார்கள். அதை மாற்றும் வகையில் தெற்குப் பகுதியில் டூர் அடித்துவருகிறார் எடப்பாடி பழனிசாமி. நேற்றைய தினம் அவர் மழையில் நனைந்துகொண்டு பேசியபோதும் மக்கள் கலையாமல் இருந்ததும் ஊனமுற்ற குழந்தைகளுடன் அவர் கலந்துரையாடியதும் மக்களைக் கவர்ந்துள்ளது.

‘மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம்’ எழுச்சிப்பயணம் மேற்கொள்ளும் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி. நேற்று மாலை திருநெல்வேலி தொகுதிக்குட்பட்ட நெல்லை டவுன் வாகையடி திடல் அருகே வந்துசேர்ந்தார். அப்போது மழை பெய்துகொண்டு இருந்தது.

மழை பெய்தாலும் மக்கள் கூட்டம் கலையாமல் காத்துக்கிடந்தது. எடப்பாடி பழனிசாமி பஸ்ஸுக்குள் அமர்ந்து பேசுவார் என்று எல்லோரும் எதிர்பார்த்த நிலையில், மக்களுடன் சேர்ந்து நானும் நனைவேன் என்று பஸ் கூரை மீது வழக்கம் போல் ஏறி நின்றார். அதை பார்த்ததும் கூட்டம் ஆர்ப்பரித்தது.

அவருடன் வந்த தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன், ‘’நாங்கள் குடை பிடிக்கிறோம் என்று சொன்னதைக் கூட கேட்காமல் உங்களுடன் சேர்ந்து நனைந்தபடி பேசுகிறேன் என்று வந்திருக்கிறார் எடப்பாடி பழனிசாமி. மக்கள் நம்பிக்கையின் மீது எழுப்பப்படும் அஸ்திவாரம்தான் வாக்குரிமை, அந்த வாக்குரிமை மீது எழுப்பப்படும் மாளிகைதான் நல்லரசு. அந்த அரசு வல்லவராக இருந்தால் மட்டும் போதாது, நல்லவராக இருக்க வேண்டும் என்றார் எம்ஜிஆர். ஆனால் இன்றைய திமுக அரசில் படுகொலைகள், பாலியல் வன்கொடுமைகள், போதைப் பொருட்கள் என நாடு மிக மோசமான சூழலில் சென்றுகொண்டிருக்கிறது. அதை தடுத்து நிறுத்தக்கூடிய ஒரே தலைவராக இருப்பவர் அண்ணன் எடப்பாடியார். உங்களுக்காக இன்று குரல் கொடுக்கிறார்கள்” என்றார்.

அவரைத் தொடர்ந்து பேசிய இபிஎஸ், “கொட்டும் மழையிலும் மக்கள் வெள்ளத்தைப் பார்க்கும்போது திருநெல்வேலி தொகுதியில் வெற்றி உறுதியாகிவிட்டது. மக்கள் அதிமுக கூட்டணி பக்கம். இது புனிதமான இடம். வ.உ.சி அவர்களுக்கு இங்கு மணிமண்டபம் கட்டப்பட்டது. வருகின்ற தேர்தலில் உங்கள் பொன்னான வாக்குகளை உங்கள் கூட்டணி வேட்பாளருக்கு செலுத்தி மாபெரும் வெற்றியைத் தேடித் தாருங்கள் என்று இருகரம் கூப்பி வேண்டிக் கேட்டுக்கொள்கிறேன். மழை பெய்துகொண்டிருப்பதால் நீங்களும் நனைகிறீர்கள். நாங்களும் நனைகிறோம். ஆகவே அதிமுகவை பொறுத்தவரை உங்கள் கட்சி, உங்கள் அரசு. அதிமுக பாஜக கூட்டணி மாபெரும் வெற்றி பெறும் அதிமுக ஆட்சியமைக்கும். நன்றி வணக்கம்” என்பதோடு முடித்துக்கொண்டார். மக்கள் அனைவரும் உணர்ச்சிப்பெருக்குடன், ‘பை பை ஸ்டாலின்’’ என்று சொல்லி எடப்பாடியாருக்கு உற்சாகம் கொடுத்தார்கள்.

இதையடுத்து மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கு சிறப்புச் சிகிச்சை வழங்கிவரும் மயோபதி காப்பகம் சென்றார். வீரவநல்லூருக்கும், வெள்ளாங்குளிக்கும் இடையில் உள்ள அண்ணாநகரில்  அமைந்திருக்கும் மயோபதி காப்பகத்தில் சுமார் 290 மாற்றுத்திறனாளி குழந்தைகள் உள் நோயாளிகளாக சிகிச்சை பெற்றுவருகின்றனர். இதன் நிறுவனர் மருத்துவர் ஜெ.ராமசாமி இதுபற்றி தெரிவிக்கையில், “எனது தந்தை இந்தக் காப்பகத்தைத் தொடங்கினார், நான் தொடர்ந்து நடத்திவருகிறேன். சிங்கப்பூர், மலேசியா ஏன் பாகிஸ்தானில் இருந்துகூட இங்கு வந்து தங்கி மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கு சிகிச்சைப் பெற்றுச் செல்கிறார்கள். மயோபதி காப்பகத்தைச் சுற்றியுள்ள 300க்கும் மேற்பட்ட வீடுகளில் உள்ளூர் மக்கள் எவரும் வசிப்பதில்லை, எல்லாம் வெளியூர், வெளி மாநிலம் மற்றும் வெளி நாடுகளில் இருந்து வந்திருக்கும் நபர்கள் தான் தங்கி தினமும் சிகிச்சை பெற்றுவருகிறார்கள்.

நடக்கவே முடியாது என்று பல மருத்துவர்கள் கைவிரித்த நிலையில், இங்கு சிகிச்சைப் பெற்று நடந்திருக்கிறார்கள். அப்படியான குழந்தைகள் தான் இன்று மாண்புமிகு எடப்பாடி பழனிசாமி அவர்களை வரவேற்கிறார்கள். 2018ம் ஆண்டு அவர் முதல்வராக இருக்கும்போதுதான் மாற்றுத்திறன் மிக்க குழந்தைகளுக்கான சிறப்பு சிகிச்சை அளிக்கும் எந்திரமான ஸ்பைனல் கரெக்டர் என்ற எந்திரத்தை முறைப்படி சிகிச்சைக்குத் தொடங்கிவைத்தார். இங்கு மட்டுமின்றி, இதே சிகிச்சையை 15 மாவட்ட மருத்துவமனைகளில் அமல்படுத்தியவரும் இபிஎஸ் அவர்கள் தான். அந்த சிறப்பு எந்திரம் மூலம் இதுவரை 250க்கும் மேற்பட்ட குழந்தைகள் பலனடைந்திருக்கிறார்கள். அப்படி பலனடைந்த இரு குழந்தைகளைத்தான் இன்றைய தினம் நேரில் வந்து சந்தித்திருக்கிறார் இபிஎஸ். முன்னாள் திமுக எம்பியும், நடிகருமான நெப்போலியனின் மகனுக்குக் கூட இங்குதான் சிகிச்சை அளிக்கப்பட்டது!” என்றார்.

குழந்தைகளின் நிலைமையைக் கண்டு எடப்பாடி பழனிசாமி ரொம்பவே நெகிழ்ச்சியுடன் காணப்பட்டார். எடப்பாடி பழனிசாமியின் இந்த செய்கைகள் தென்பகுதி மக்களிடம் மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ளது. இதனால் அதிமுகவுக்கு செல்வாக்கு அதிகரிக்கும் என்கிறார்கள். பார்க்கலாம். 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link