Share via:
கம்பன் கழக விழாவில் கவிஞர் வைரமுத்து பேசுகையில் ராமரை அவமரியாதை
செய்துவிட்டார் என்று பாஜகவினர் உரக்க குரல் கொடுத்துவருகிறார்கள். வைரமுத்து மன்னிப்பு
கேட்கவில்லை என்றால் போராட்டம் வெடிக்கும் என்கிறார்கள்.
இந்த கம்பன் கழக விழா குறித்து கவிஞர் வைரமுத்து, ‘’மறைந்து நின்று
அம்பெய்து கொன்ற ராமனை வால்மீகி மன்னிக்கவில்லை; அம்பு வீசப்பட்ட வாலியும் மன்னிக்கவில்லை;
அந்தப் பழியை உலகமும் மன்னிக்கத் தயாராக இல்லை ஆனால் கம்பன் ராமனைப் பழியிலிருந்து
காப்பாற்றுகிறான்
“தேவியைப் பிரிந்த பின்னர் திகைத்தனை போலும் செய்கை”
என்ற வரியில் மனைவியைப் பிரிந்த ராமன் மதிகெட்டுப் போனான் என்று கம்பன் இரக்கமுறுகிறான்
மதிமயக்கத்தால் மனப்பிறழ்ச்சியால் ஒருவன் செய்யும் செயல் குற்றத்தில் சேராது என்பது
இந்தியத் தண்டனைச் சட்டத்தின் 84ஆம் பிரிவு அந்த வகையில் மதி மாறுபாட்டால் ராமன் வாலியை
மறைந்து நின்று அம்பெய்து கொன்றது குற்றன்று என்று கம்பன் ராமனை மீட்டெடுக்கிறான் கம்பனால்
மன்னிக்கப்பட்ட ராமன் மனிதனாகிறான்; கம்பன் கடவுளாகிறான்” என்று பேசினார். இதுவே
வில்லங்கமாகியுள்ளது
இது குறித்து பாஜகவினர், ‘’அறிவாலயத்தின் நிரந்தர அல்லக்கைகளில்
ஒருவரான வைரமுத்து ஶ்ரீராமரை கொச்சையாக பேசியது கண்டிக்கத்தக்கது. பல கோடி இந்தியர்கள்
வணங்கும் ஶ்ரீராமரை இழிவுப்படுத்த முயற்சித்து, அதில் ஆனந்தம் அடைவதென்பது, புத்திஸ்வாதீனம்
இல்லாதவர்களின் அக்மார்க் அடையாளம். நேரடியாக பேசினால் நீதிமன்றம் தலையில் குட்டும்
என்ற பயத்தில், இது போன்ற கான்ட்ராக்ட் கொத்தடிமைகளை பேசவைத்து வேடிக்கை பார்க்கிறது
கோபாலபுரத்து மாஃபியா.
திகைத்தல் என்ற சொல்லுக்கு புத்திசுவாதீனம் அற்றவர் என்ற பொருளை
புத்தியுள்ள யாரும் சொல்ல மாட்டார்கள். திகைத்தல் என்றால் வியப்படைதல், தடுமாறுதல்,
மயங்குதல் என்றே பொருள். வேண்டுமென்றே ராமரை கொச்சைப்படுத்த வேண்டும் என்ற வன்மத்தோடு
வைரமுத்து அவதூறு பேசியுள்ளார். திகைத்தல் என்ற சொல்லுக்கு கூட பொருள் தெரியாதவர் மன்னிப்பு
கேட்க வேண்டும்’’ என்று பஞ்சாயத்தை ஆரம்பித்து வைத்துள்ளனர்.