Share via:
கடந்த தேர்தலில் பாஜக முறைகேடு செய்தே வெற்றி அடைந்திருக்கிறது
என்பதை எதிர்க்கட்சித் தலைவர் ஆதாரபூர்வமாக நிரூபித்து இருக்கிறார். ஆனால், இந்த விவகாரத்தை
விசாரிக்கும் உச்ச நீதிமன்றத்தில், “பீகாரில் நீக்கப்பட்ட 65 லட்சம் வாக்காளர்களின்
விவரங்களை தர முடியாது” என்று தேர்தல் ஆணையம் பதிலளித்துள்ளது.
இது குறித்து பேசுபவர்கள், ‘’தேர்தல் ஆணைய அறிவிப்பு ஜனநாயக விரோதமும்,
இந்திய அரசியலமைப்பை மீறும் செயலும் ஆகும். அரசியலமைப்பு என்ன சொல்கிறது? பிரிவு
32 & 142: உச்ச நீதிமன்றத்திற்கு, எந்த அமைப்பிடமும் — தேர்தல் ஆணையம் உட்பட —
தேவையான ஆவணங்கள், தகவல்கள் கேட்டு பெறும் அதிகாரம் உண்டு. பிரிவு 324: தேர்தல் ஆணையம்,
உச்ச நீதிமன்றத்தின் விசாரணைக்கு உட்பட்டது. அதனால், வாக்காளர் பெயர்கள் நீக்கப்பட்டுள்ள
விவகாரத்தில், தேர்தல் ஆணையம் தேவையான ஆதாரங்களை சமர்ப்பிக்க வேண்டும் என்பது சட்டப்பூர்வ
கடமை. அப்படியிருக்க… யார் கொடுத்த தைரியத்தில் , எந்த அடிப்படையில், எந்த சட்டத்தின்
பெயரில், தேர்தல் ஆணையம் “விவரங்கள் தர முடியாது” என்று இந்த அளவுக்கு ஆணவமாக
பதில் அளிக்கிறது?’’ என்று கேள்வி எழுப்புகிறார்கள்.
அரசியலுக்கும், அதிகாரத்துக்கும் அப்பாற்பட்டு இருக்க வேண்டிய
சுதந்திரமான அமைப்பாக இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின்படி உருவாக்கப்பட்டது இந்தியத்
தேர்தல் ஆணையம். ஆனால், அதன் செயல்பாடுகள் சந்தேகத்துக்குரிய வகையில் இருப்பது ஜனநாயகத்துக்கு
உகந்தது அல்ல. இந்தச் சந்தேகங்களை உறுதி செய்யும் வகையில், வெளிப்படையான குற்றச்சாட்டை
இந்தியாவைப் பல்லாண்டுகள் ஆட்சி செய்த கட்சியும், தற்போதைய எதிர்க் கட்சியுமான காங்கிரஸ்
கட்சியின் இளந்தலைவரும், நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தி அவர்கள்
ஆதாரங்களுடன் முன்வைத்திருக்கிறார்.
7.8.2025 அன்று காங்கிரஸ் கட்சியின் தலைமை யகத்தில் நடைபெற்ற செய்தியாளர்
சந்திப்பின் போது, பெங்களூரு மத்திய நாடாளுமன்றத் தொகுதியின் ஒரு பகுதியான மகாதேவ்புரா
சட்டப்பேரவைத் தொகுதியின் வாக்காளர் பட்டியலில் செய்யப்பட்டுள்ள மோசடியைக் காட்சிப்
பட விளக்கத்துடன் தெளிவுபடுத்தினார் ராகுல்காந்தி. அந்த ஒரு தொகுதியில் மட்டுமே
1,00,250 வாக்குகள் திருடப்பட்டிருப்பதாக (Vote chori) அவர் வெளிப்படையாகக் குற்றம்
சாட்டியுள்ளார். யாரும் வசிக்காத வீட்டில் அதிக வாக்குகள் வந்தது எப்படி? ‘‘புதிய வாக்காளர்கள்
என்ற பெயரில் போலி வாக்காளர்களைச் சேர்த்தல், ஒரே அறை கொண்ட முகவரியில், யாரும் வசிக்காத
வீட்டில் எண்ணற்ற வாக்குகள் பதிவு, ஒளிப்படங்கள் இல்லாமல் வாக்காளர் பதிவு, ஒரே நபருக்கு
ஒன்றுக்கும் மேற்பட்ட வாக்குச் சாவடிகளில் வாக்கு, ஒரே வாக்குச்சாவடியில் ஒருவருக்கு
இரண்டு வாக்கு, ஒரே நபருக்கு வெவ்வேறு மாநிலங்களில் வாக்கு – இப்படி பல்வேறு வகைகளில்
முறைகேடுகள் செய்யப்பட்டுள்ளன’’ என்று அவர் இந்திய ஜனநாயகத்துக்குப் பேராபத்து விளைவிக்கும்
அணுகுண்டை அம்பலப்படுத்தியுள்ளார். ஆட்சிக்கே காரணமான வாக்கு மோசடி! இந்தியாவில் ஆட்சியைப்
பிடிக்க எல்லா தொகுதிகளிலும் இத்தகைய மோசடிகளைச் செய்ய வேண்டியதில்லை. தங்களுக்கு முழு
ஆதரவு உள்ள தொகுதிகளை விட்டுவிடலாம். கடுமையான எதிர்ப்பு கொண்ட தொகுதிகளிலும் இத்தகைய
மோசடிகளைச் செய்தால் அம்பலப்பட்டுவிடுவோம் என்று கருத இடம் உண்டு. ஆனால், வெற்றியை
முடிவு செய்ய இயலாத தொகுதிகளை கடும் போட்டி நிலவும் தொகுதிகளை முன்கூட்டியே அறிந்து,
அதில் இத்தகைய மோசடிகளைச் செய்தாலே போதும் என்று பா.ஜ.க. கணக்கிட்டிருக்கக் கூடும்.
தேர்தல் முன் கணிப்புகளின் அடிப்படையில் ஆட்சி அமைக்க இரண்டு கட்சிகளின்
வேறுபாடுகளைக் கடக்க எவ்வளவு தொகுதிகள் தேவையோ அவற்றில் மட்டும் ‘தனிக் கவனம்’ செலுத்தி,
வாக்காளர் பட்டியலில் மோசடி செய்தாலே போதுமானது என்பதே பா.ஜ.க.வினரின் கணக்கு! இதைத்
தான் ராகுல் காந்தி அவர்களும் சரியாக வெளிப்படுத்தியுள்ளார். (2019-இல் தங்கள் ஆட்சியைத்
தக்க வைக்க வேண்டிய சூழலில் 22 தொகுதிகளுக்கு நடந்த இடைத் தேர்தலில், தி.மு.க. 13 தொகுதிகளில்
வெற்றி பெற்றாலும் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்த முடியவில்லை என்பதையும், அ.தி.மு.க. தங்கள்
ஆட்சியைக் காப்பாற்றத் தேவையான 9 தொகுதிகளில் மட்டும் கவனம் செலுத்தி அவற்றில் வெற்றி
பெற்றதன் மூலம் ஆட்சியில் தொடர்ந்ததையும் நினைவில் கொள்க) தேர்தல் ஆணையம் உடந்தையா?
பாரதிய ஜனதா கட்சி, இத்தகைய கணக்குகளை ஆட்சியின் கண்களையும், காதுகளையும் பயன்படுத்தி
அறிந்து, அவற்றில் மட்டும் ‘கவனம்’ செலுத்துவதைத் தனது தேர்தல் உத்தியாக வைத்துள்ளது.
இதை உடைக்கும் வரை ராகுலின் வெற்றிக்கு வாய்ப்பு இல்லை.