Share via:
திமுகவை எதிர்க்கும் அனைவரும் ஒன்று சேரவேண்டும் என்று உரக்க குரல்
கொடுக்கும் எடப்பாடி பழனிசாமிக்கு ஓபிஎஸ் என்றால் மட்டும் எட்டிக்காயாக கசக்கிறது.
அதிமுகவில் இணைப்பு அல்லது புதிய கட்சி என்பதற்கு மோடி வருகை விடை கொடுத்துவிடும் என்கிறார்கள்.
பிரதமர் நரேந்திர மோடி இரண்டு நாள் பயணமாக நாளை தமிழகத்திற்கு
வருகிறார். தற்போது இங்கிலாந்தில் இருக்கும் பிரதமர், அங்கிருந்து மாலத்தீவுக்கு செல்கிறார்.
இந்த பயணத்தை முடித்துக்கொண்டு 26ஆம் தேதி இரவு தூத்துக்குடிக்கு வருகிறார். தூத்துக்குடி
விமான நிலையத்தில் நடைபெறும் விழாவில் கலந்துகொள்ளும் பிரதமர், விரிவாக்கம் செய்யப்பட்ட
விமான நிலையத்தை திறந்து வைக்கிறார். அதேபோல மத்திய அரசின் சார்பில் நிறைவேற்றப்பட்டுள்ள
திட்டங்களையும் தொடங்கி வைக்க உள்ளார்.
குறிப்பாக தஞ்சாவூர் – விக்கிரவாண்டி தேசிய நெடுஞ்சாலையின் ஒரு பகுதியான சோழபுரம்
– சேத்தியாதோப்பு சாலையை திறந்து வைக்கிறார். ஆறு வழிச் சாலையாக மாற்றப்பட்டுள்ள தூத்துக்குடி
துறைமுகச் சாலையையும் திறந்து வைக்கிறார். மதுரை – போடி நாயக்கனூர் இடையே மின்மயமாக்கப்பட்டுள்ள
ரயில் பாதை, நாகர்கோயில் – கன்னியாகுமரி மற்றும் நெல்லை – மேலப்பாளையம் இடையேயான இரட்டை
ரயில் பாதை ஆகியவற்றையும் தொடங்கி வைக்கிறார். மொத்தமாக ரூ.4518 கோடி மதிப்புள்ள திட்டங்களை
பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார்.
இந்த நிகழ்ச்சியை முடித்துக்கொண்டு விமானம் மூலம் திருச்சி செல்லும்
பிரதமர், அங்கு இரவு தங்குகிறார். மறுநாள் காலை எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட முக்கிய பிரமுகர்களை
சந்திக்கிறார். இதையடுத்து காலை 11 மணியளவில் திருச்சியில் இருந்து ஹெலிகாப்டர் மூலமாக
அரியலூர் மாவட்டம் கங்கை கொண்ட சோழபுரம் செல்லும் பிரதமர், அங்கு ராஜேந்திர சோழன் ஆடி
திருவாதிரை விழாவில் பங்கெடுக்கிறார். பின்னர் அங்கிருந்து புறப்பட்டு தஞ்சை சென்று
பாஜகவின் மையக் குழுக் கூட்டத்தில் கலந்துகொள்கிறார். அனைத்து நிகழ்ச்சிகளும் முடிந்த
பிறகு திருச்சி சென்று அங்கிருந்து விமானம் மூலம் டெல்லி செல்கிறார்.றார்
இந்த சந்திப்பில் தானும் இடம் பிடிக்கவேண்டும் என்பதில் மும்முரமாக
இருக்கிறார் ஓ.பன்னீர்செல்வம்.. இதற்காக வெளிப்படையாக ஒரு கடிதம் எழுதியிருக்கிஆஅர்.
அதில், ‘நீங்கள் தூத்துக்குடி வருவதாக அறிந்து நான் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். இது
ஒரு முக்கியமான சந்தர்ப்பம். இந்த சூழலில் விமான நிலையத்தில் உங்களை வரவேற்கவும்,
வழி அனுப்பவும் எனக்கு அனுமதி கிடைத்தால் அது ஒரு தனி மரியாதை மற்றும் பாக்கியமாக இருக்கும்’
என்று கெஞ்சியிருக்கிறார்.
இது, அரசியலில் முக்கிய கட்டம் என்பதால் பிரதமரை சந்தித்து தனக்கு
ஒரு முடிவு சொல்லுங்கள் என்று கேட்க இருக்கிறார். அதிமுகவில் இணைய வாய்ப்பு இல்லை என்பதால்
தனிக்கட்சி தொடங்கும் எண்ணத்தில் பிரதமரை சந்திக்க இருக்கிறார். அதேநேரம், பாஜகவில்
சேர்ந்துவிடுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
இரண்டு நாட்களில் பன்னீரின் தலையெழுத்து தெரிந்துவிடும்.