Share via:
மோடியின் மேடையில் திருமாவளவன் நிற்பதைப் பார்த்ததும் அவர் திமுக
கூட்டணியில் இருந்து வெளியேறப் போவது உறுதி என்று அதிமுகவினர் கொண்டாட்டம் போடுகிறார்கள்.
அந்த விழா மேடையில் எந்த பதவியிலும் இல்லாத நயினார் நாகேந்திரன் மேடை ஏறியது சர்ச்சையாகியுள்ளது.
மோடியுடன் திருமாவளவன் மேடை ஏறியது குறித்து விடுதலை சிறுத்தைகள்,
‘’சிதம்பரம் நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட ஜெயங்கொண்டம் சோழபுரத்தில் முதலாம் ராஜேந்திர
சோழனின் ஆயிரமாவது பிறந்த நாள் விழாவில் இந்திய ஒன்றிய தலைமை அமைச்சர் என்ற முறையில்
திரு.நரேந்திர மோடி அவர்கள் பங்கேற்றார். நாடாளுமன்ற உறுப்பினர் என்ற முறையில் திருமாவளவன்
பங்கேற்றார். இதில் எந்த அரசியலும் இல்லை.
தொகுதியில் நடக்கும் அரசு விழாக்களில் பங்கேற்பது மரபாகவும் நாகரீக
அரசியலாகவுமே விடுதலைச்சிறுத்தைகள் பார்க்கிறோம். ஆனால்,அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர
பாலாஜி “பிரதமர் மேடையில் திருமாவளவன் பங்கேற்றது அற்புதமான திருப்புமுனை” என்று சொல்லியிருக்கிறார்.
இதில் எந்த திருப்புமுனையும் இல்லை. விடுதலைச்சிறுத்தைகள் எப்போதும் சனாதன எதிர்ப்பில்
சமரசம் செய்யவே மாட்டோம். சனாதனத்தை நிறுவ முயலும் பாஜகவுடன் அரசியல் ரீதியான எந்த
உறவும் வைக்க மாட்டோம் என எமது தலைவர் பிரகடனப்படுத்திய பிறகும் ஒருவித குழப்பம் மற்றும்
நம்பிக்கையற்ற சூழலில் அதிமுக இருப்பதை ராஜேந்திர பாலாஜி உணர்த்துகிறார்.
எந்த மேடையில் நின்றாலும் சிறுத்தை சிறுத்தையாகவே களமாடுவோம்.
2026 ல் ஒரு தொகுதியில் கூட வெல்ல முடியாத அளவுக்கு அதிமுக- பாஜக கூட்டணியை மக்கள்
தொற்கடிப்பார்கள் என்பது உறுதி. தமிழ்நாட்டுக்கும் தமிழ்நாட்டு மக்களுக்கும் துரோகம்
செய்துவரும் அதிமுக- பாஜகவை ஒரு போதும் தமிழ்நாட்டு மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்’
என்கிறார்கள்.
அந்த அரசு விழாவில் விடுதலை சிறுத்தைகள் பங்கேற்றது அரசியல் நாகரிகம்
அல்லது மரபாக இருக்கலாம். என்ன காரணத்துக்காக தமிழக பாஜக தலைவர் பங்கேற்றார் என்பது
கேள்வியாக மாறியிருக்கிறது. பாஜகவினர் கப்சிப் என இருக்கிறார்கள்.