Share via:
பதவிச் சண்டை எந்த அளவுக்குப் போகும் என்பதற்கு உதாரணமாக மாறியிருக்கிறது
டாக்டர் ராமதாஸ் மற்றும் அன்புமணிக்கு இடையிலான மோதல். இதன் உச்சகட்டமாக, ‘என் பெயரை
பயன்படுத்தாமல், இன்சியல் மட்டும் போட மட்டுமே உரிமை உள்ளது’; என்று அன்புமணிக்கு,
ராமதாஸ் உத்தரவிட்டுள்ளார். அதோடு மகள் காந்திமதியை மேடையில் ஏற்றியது பல்வேறு கேள்விகளை
எழுப்பியிருக்கிறது.
பாமகவில் தங்கள் குடும்பத்தைச் சேர்ந்த பெண்கள் யாரும் கலந்து
கொள்ளக்கூடாது என்று ராமதாஸ் கூறிவந்தார். அதனாலே செளமியா அன்புமணி தேர்தலில் நின்றதை
எதிர்த்ததாகச் சொன்னார். இந்த நிலையில் ராமதாஸின் மூத்த மகள் காந்திமதி செயற்குழு கூட்டத்தில்
கலந்து கொண்டு மேடைக்கு வந்திருக்கிறார். இது குறித்து கேட்டதற்க், ‘’இந்த செயற்குழு
கூட்டம் மட்டும் இல்லை, எப்போதோ கூட்டங்களில் கலந்து கொள்ள துவங்கி விட்டார்’ என்று
தெரிவித்திருக்கிறார்.
அதோடு காந்திமதிக்கு கட்சியில் முக்கிய பதவி வழங்கப்படுமா என நிருபர்கள்
கேட்டதற்கு, ‘தற்சமயம் இல்லை.. ஆனால் போக… போக… தெரியும்…’ என்று கூறியிருக்கிறார்.
இதுகுறித்து பேசும் பாமகவினர், ‘’ராமதாஸ்க்கு இப்போது அவரது மூத்த
மகள் காந்திமதி ஆறுதல் கூறி வருவதோடு, நான் இருக்கிறேன் என தைரியமும் ஊட்டி வருகிறார்.
இதனால் மூத்தமகள் காந்திமதி மீது ராமதாசுக்கு முழு நம்பிக்கை ஏற்பட்டுள்ளது. இதனால்
பரசுராமன் முகுந்தனுக்கு பதிலாக நேரடியாக காந்திமதியை கட்சியின் முக்கிய பதவியில் விரைவில்
அமர்த்துவதற்கான வாய்ப்பு உள்ளதாகத் தெரிவிக்கின்றனர்.
கும்பகோணத்தில் நடந்த பொதுக்குழுவில் பங்கேற்ற பாமக நிறுவனர் ராமதாஸ்,
‘’கடந்த 8ம் தேதி நடந்த மாநில செயற்குழுவில் 2500 பேர் பங்கேற்றனர். 800க்கும் மேற்பட்ட
கார், வேன்களில் பிரம்மாண்டமாகவும் உற்சாகத்துடனும் தொண்டர்கள் வந்தனர். எனவே நாங்களே
உண்மையான பா.ம.க.’’ என்று கூறியிருக்கிறார். நடக்கும் நிலவரத்தைப் பார்த்தால் இனி,
இருவரும் ஒன்று சேர்வதற்கு வாய்ப்பே இல்லை என்பதே தெரிகிறது. இது, பாமகவினரை பதற வைத்துள்ளது.