Share via:
பா.ம.க.வில் அப்பா – மகன் பஞ்சாயத்து யாரும் எதிர்பார்க்க முடியாத
அளவுக்குப் போயிருக்கிறது. இந்நிலையில், வீட்டில் ஒட்டுக்கேட்பு கருவி பொருத்தப்பட்ட
விவகாரம் விஸ்வரூபம் எடுக்கிறது.
பாமக நிறுவனர் ராமதாஸ் செய்தியாளர்களிடம் பேசுகையில், “தைலாபுரத்தில்
எனது வீட்டில் எனது நாற்காலிக்கு அருகே அதிநவீன ஒட்டுகேட்புக் கருவி பொருத்தப்பட்டுள்ளது.
லண்டனில் இருந்து வாங்கப்பட்ட, விலை மதிப்புமிக்க இக்கருவியை 2 நாட்களுக்கு
முன்புதான் கண்டுபிடித்தோம். யார் வைத்தது, எதற்காக வைத்தார்கள் என ஆய்வு
நடைபெறுகிறது” என்றார். சமீபத்தில் அன்புமணி வந்து போனதை குறிப்பிட்டே அவர் சந்தேகம்
எழுப்பியிருக்கிறார்.
இதையடுத்து இந்த ஒட்டுகேட்பு கருவியை ஆய்வு செய்தவற்காக தனியார்
நிறுவனத்தைச் சேர்ந்த 5 துப்பறியும் நிபுணர்கள் நேற்று வந்தனர். இக்குழுவினர்
3 மணி நேரம் ஒட்டுகேட்பு கருவியை ஆய்வு செய்தனர்.
அவர்கள் சென்றதும் ராமதாஸ்,
“என்னை சந்திக்க பாட்டாளி சொந்தங்கள் வந்து கொண்டே இருக்கிறார்கள். இதனால் நான்
கூடுதல் மகிழ்ச்சியுடன் இருக்கிறேன். எனது வீட்டில் வைக்கப்பட்ட ஒட்டுகேட்புக்
கருவியை தனியார் நிறுவன துப்பறியும் குழுவினர் ஆய்வு செய்து வருகின்றனர். அவர்கள்
அளிக்கும் ஆய்வு அறிக்கையின் அடிப்படையில் அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தைலாபுரத்துக்கு வந்து தாயை மகன் (அன்புமணி) சந்தித்துள்ளார். பாமக பொதுக்குழு
கூட்டத்தை கூட்டுவதற்கான காலம் இன்னும் வரவில்லை” என்றார்.
இந்த விஷயத்தில் ராமதாஸ் நிச்சயமாக அன்புமணி மீது குற்றம் சுமத்துவார்
என்றும் அவர் மீது சட்ட நடவடிக்கைக்கு ஏற்பாடு செய்வார் என்றும் சொல்லப்படுகிறது. வெட்டு,
குத்துன்னு போகிற அளவுக்கு பாமக நிலைமை மோசாகியுள்ளது.