Share via:
பா.ஜ.க.வில் பல்வேறு மாற்றங்கள் திடுதிப்பென்று நடந்துவருகின்றன.
பிரதமர் நரேந்திர மோடியை 75 வயதில் ஓய்வு பெற வைக்கும் முயற்சிகள் நடக்கும் அதே நேரத்தில்
தமிழகத்தில் அண்ணாமலை புதுக் கட்சி தொடங்கும் வியூகத்தில் இருப்பதாகவும் செய்திகள்
வெளியாகின்றன.
ஆர்.எஸ்.எஸ்.தலைவர் மோகன் பகவத் சமீபத்தில், ‘75 வயது ஆனதும் மோடி
ஓய்வு பெற்று விடவேண்டும். பின்னால் வருபவர்களுக்கு வழி விட வேண்டும்’ என்று வெளிப்படையாகத்
தெரிவித்திருந்தார். பாஜகவில் எல்.கே.அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, ஜஸ்வந்த் சிங் உள்ளிட்ட
தலைவர்களை பிரதமர் நரேந்திர மோடி வயது முதிர்வை காரணம் காண்பித்து ஓய்வு பெறச் செய்தார்.
இதே விதியை பிரதமர் நரேந்திர மோடியும் பின்பற்ற வேண்டும் என்று ஆர்.எஸ்.எஸ். கண்டிப்பு
காட்டுகிறது.
ஆனால், இட்தனை ஏற்பதற்கு மோடி தயாராக இல்லை எனவும் அப்படி ஓய்வு
பெற வைக்கும் முயற்சி எடுத்தால் கடுமையான மோதல் ஏற்படும் என்றும் சொல்லப்படுகிறது.
இந்த விவகாரம் தொடர்பாக மீண்டும் பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ் இடையே அதிகார போட்டி எழுந்துள்ளது.
தேசிய அளவில் மோடியும் தமிழக அளவில் அண்ணாமலையும் பேசுபொருளாகியுள்ளனர்.
தமிழக பாஜகவில் அண்ணாமலையின் செயல்பாடு கடும் சர்ச்சையை ஏற்படுத்தும் வகையில் இருக்கின்றன.
அவரது ஆதரவாளர்கள் இப்போதும் நயினார் நாகேந்திரனை கடுமையாக விமர்சனம் செய்துவருகிறார்கள்.
தனிக் கட்சி தொடங்கவேண்டும் என்று பலரும் வற்புறுத்துவதாக செய்திகள் வெளியாகின்றன.
இது குறித்தும் விஜய் போராட்டம் குறித்தும் பாஜக மாநிலத் தலைவர்
நயினார் நாகேந்திரனிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அவர், ‘’ஜனநாயக நாட்டில் யார்
வேண்டுமானாலும் ஆர்ப்பாட்டம் நடத்தலாம். சிவகங்கை காவல் நிலைய மரணம் மட்டுமின்றி இதுவரை
நடந்த அத்தனை காவல்நிலைய மரணங்களுக்கும் சிபிஐ விசாரணை வேண்டும் என்றும், முதல்வர்
வருத்தம் தெரிவிக்க வேண்டும் என்றும் முதலில் கூறியது நான்தான்.
விடுதலை சிறுத்தை கட்சிகளுக்கு அமைச்சரவையில் இடம் கொடுப்பீர்களா,
கூட்டணி ஆட்சியா, தனித்த ஆட்சியா என முதல்வர் ஸ்டாலினிடம் கேளுங்கள். திமுகவினர்தான் அடிமை மாடலும், பாசிச அரசியலும் செய்கிறார்கள்.
முன்னாள் மத்திய அமைச்சராக இருந்த ஆ.ராசா பெண்களை கேவலமாக பேசுகிறார். பல பள்ளிகளில்
அடிப்படை வசதிகள் இல்லை. வகுப்பறையில் ப வடிவில் இருக்கைகள் இருக்க வேண்டும் என்பது
என்ன அடிப்படையில் என்பது தெரியவில்லை. படிக்கும் மாணவர்களுக்கு அடிப்படை வசதிகளை செய்துகொடுப்பதுதான்
முக்கியம். அண்ணாமலை புதிய கட்சி தொடங்கப்போவதாக வெளிவரும் தகவல் பலர் கிளப்பி விடும்
வதந்தி’’ என்று கூறியிருக்கிறார்.
இந்த தகவல் அண்ணாமலைக்குத் தெரிந்தும் இதுவரை எந்த பதிலும் சொல்லவில்லை
என்பதால், இதில் உண்மை இருக்குமோ என்று பாஜகவினர் பதறிவருகிறார்கள்.