Share via:
அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி இன்று டைம்ஸ் ஆஃப்
இந்தியா நாளிதழுக்கு அளித்துள்ள பேட்டியில், நடிகர் விஜய், சீமான் ஆகியோருடன் கூட்டணி
பேச்சுவார்த்தை நடக்கிறதா என்ற கேள்விக்குப் பதில் கூறியிருக்கிறார். தொடங்கியிருக்கும் தமிழக வெற்றிக் கழகத்துடன் கூட்டணி
குறித்து பேசியிருக்கிறார். அந்த பேட்டியில் இருந்து சில கேள்விகள் மட்டும் இங்கே கொடுக்கப்பட்டுள்ளன.
2026 சட்டமன்ற தேர்தலில் அதிமுகவின் வெற்றி வாய்ப்பு
எப்படி உள்ளது?
2026 தேர்தலில் அதிமுக தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும்.
திமுக ஆட்சியில் கடந்த 50 மாதங்களில் அனைத்து தரப்பு மக்களும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த ஆட்சியில் போதை மருந்து கடத்தல், கள்ளச்சாராய சாவுகள், கொலை, திருட்டு, பாலியல்
வன்முறைகள், விலைவாசி, வரி என மக்களுக்கு பாதகமான எல்லா விஷயங்களும் அதிகரித்துள்ளன.
ஸ்டாலின் மாடல் அரசின் மீது மக்களுக்கு வெறுப்பு ஏற்பட்டுள்ளது. தமிழக வரலாற்றிலேயே
இதுபோன்ற ஊழல் அரசு இருந்ததில்லை. ஜூலை 7-ம் தேதி நான் தொடங்கிய ‘மக்களைக் காப்போம்
– தமிழகத்தை மீட்போம்’ பயணத்துக்கு எல்லா இடங்களிலும்
மிகப்பெரிய ஆதரவு கிடைத்துள்ளது.
சட்டமன்ற தேர்தலுக்குப் பிறகு அதிமுகவுக்கு மெஜாரிட்டி
கிடைத்தாலும், கிடைக்காவிட்டாலும் தமிழகத்தில் முதல் முறையாக கூட்டணி ஆட்சியை அமைக்க
வாய்ப்பு உள்ளதா?
ஊகத்தின் அடிப்படையிலான கேள்விக்கு நான் எப்படி பதில் சொல்ல முடியும்?
அதிமுக தனி பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும்
பாஜகவின் மாநில தலைவராக அண்ணாமலை தொடராமல் இருப்பதற்கும்,
அதிமுக – பாஜக கூட்டணி அமைந்ததற்கும் ஏதாவது தொடர்பு இருக்கிறதா?
மற்ற கட்சிகளின் விவகாரங்களில் அதிமுக எப்போதும் தலையிடுவதில்லை.
விஜய்யுடன் நீங்கள் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறீர்களா?
எங்கள் தேர்தல் உத்திகளையும், திட்டங்களையும் பற்றி வெளிப்படையாக
கூற முடியாது.
விஜய் இறங்கி வந்தால் பாஜகவுடன் கூட்டணியை முறித்து
தவெகவுடன் கூட்டணி அமைப்பீர்களா?
ஊகத்தின் அடிப்படையிலான கேள்விக்கு பதில் சொல்ல முடியாது.
பாஜக – தவெக இரண்டு கட்சிகளில் எது வலிமையான கூட்டணி
கட்சியாக இருக்கும்?
பாஜக ஒரு தேசியக் கட்சி. பல மாநிலங்களில் ஆளும் கட்சி. ஒவ்வொரு
கட்சிக்கும் அதற்கான பலம் இருக்கிறது. நாங்கள் எந்த கட்சிகளையும் ஒன்றோடு ஒன்று ஒப்பிட்டு
பார்ப்பதில்லை. மக்களுக்கு எதிராக செயல்படும் திமுக ஆட்சியை வீழ்த்த, ஒரே மனநிலையில்
உள்ள அனைத்து கட்சிகளும் ஓராணியில் இணையவேண்டும்.
திமுக கூட்டணியில் உள்ள விசிக, இடதுசாரிகள் போன்ற
கட்சிகளுடனும், நாம் தமிழர் கட்சியுடனும் கூட்டணி அமைப்பதைப் பற்றி அதிமுக யோசித்துள்ளதா?
திமுக ஆட்சியை அகற்ற அனைத்து கட்சிகளுடனும் இணைந்து பணியாற்ற நாங்கள்
தயார். இதில் என்ன தவறு இருக்கிறது?
2023-ல் அதிமுக – பாஜக கூட்டணி முறிந்தபோது, அதிமுக
தொண்டர்கள் பல்வேறு இடங்களிலும் பட்டாசு வெடித்து தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
இப்போது அதிமுக மீண்டும் பாஜகவுடன் கூட்டணி வைப்பதால், அது ஓட்டாக மாறுமா?
அதுபோன்ற கொண்டாட்டங்களைப் பற்றி எனக்கு எதுவும் தெரியாது. வெற்றியை ,மனதில் வைத்துதான் தேர்தல் வியூகங்கள் வகுக்கப்படுகின்றன.