Share via:
வியாழக்கிழமை தோறும் பத்திரிகையாளர்களை சந்தித்து வருகிறார் பா.ம.க.
தலைவர் ராமதாஸ். சமீபத்திய கூட்டங்களில் எல்லாம் அன்புமணி குறித்து அதிரடி குற்றச்சாட்டுகளை
கூறிவந்த ராமதாஸ், நேற்றைய தினம் கப்சிப் என அமைதியாகியிருக்கிறார். டெல்லியில் இருந்து
மிரட்டல் வந்ததா என்ற கேள்விக்குப் பதில் தெரியாமல் தடுமாறுகிறார்கள் ராமதாஸ் ஆதரவாளர்கள்.
பாமகவில் அரங்கேறி வரும் உட்கட்சி பூசல்கள் குறிப்பாக ராமதாஸ்,
அன்புமணி இடையிலான மோதல் போக்கால் நிர்வாகிகள் மாற்றம் இரன்உ பக்கமும் சூடுபிடித்து
வருகிறது. விரைவில் தேர்தல் நெருங்குவதால் இருவரும் ஒன்று சேர்வார்களா? யார் உண்மையான
பா.ம.க. யாருடைய நியமனம் செல்லுபடியாகும் என்றெல்லாம் கேள்வி மேல் கேள்வி எழுப்பப்பட்டுவருகிறது.
நேற்றைய ராமதாஸ் சந்திப்பில் இதற்கெல்லாம் விடை கிடைக்கும் என்று
நினைத்தார்கள். ஆனால், வழக்கத்துக்கு மாறாக அமைதியாக காட்சியளித்தார் ராமதாஸ். மேலும்,
அவர், ‘’அரசு பள்ளிகளில் ஆங்கிலத் திறனை வளர்க்க தமிழக அரசு மேற்கொண்டுள்ள டெவலப் திட்டத்தை
பாட்டாளி மக்கள் கட்சி வரவேற்கிறது. ஆறு முதல் எட்டாம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு
ஆங்கில மொழி புலைமையை வளர்த்தெடுக்க தமிழக அரசு கொண்டு வந்துள்ள இந்த திட்டத்தை வரவேற்கிறேன்.
இந்த திட்டத்தை ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு மாணவர்களுக்கும் விரிவு படுத்த வேண்டும்.
மழைக்காலம் தொடங்கி இருக்கிறது. சாலை பாதுகாப்பு என்பது முக்கியமானது.
குண்டும் குழியுமான சாலைகள் விபத்துக்கு வழி வகுக்குகிறது. சென்னை முழுவதும் நடைபெறும்
மெட்ரோ மணிகள் நடைபெறுவதால் சாலைகள் முறையாக இல்லை. தமிழக அரசு இது குறித்து நடவடிக்கை
எடுக்க வேண்டும். விருதுநகர் பட்டாசு ஆலை வெடி விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை
9ஆக அதிகரித்துள்ளது. உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு பட்டாசு ஆலை நிர்வாகம் தலா
10 லட்சம் ரூபாய் கேட்டு போராட்டம் நடத்துகின்றனர். கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தவர்களின்
குடும்பத்திற்கு அரசு வழங்கும் தொகையை விட இது குறைவானது தான். போராட்டத்தில் ஈடுபடுபவர்களை
விருதுநகர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மிரட்டுவதை ஏற்றுக்கொள்ள முடியாது.
நகை திருட்டு புகாரில் போலீஸார் விசாரணையின் போது கொடூரமாக கொல்லப்பட்ட
அஜித் குமார் குடும்பத்திற்கு ஆழ்ந்த அனுதாபங்கள் தெரிவித்த ராமதாஸ், அஜித் குமாரின்
குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலையும், ஒரு கோடி ரூபாயும் தர வலியுறுத்தினேன். அரசு
வேலை வந்துள்ளது, ஒரு கோடி ரூபாய் எப்போது வழங்கப்படும்’ என்றெல்லாம் கேள்வி எழுப்பினார்.
பா.ம.க.வின் எம்.எல்.ஏ. அருள் நீக்கப்பட்டது குறித்து, ‘’பாமக
எம்.எல்.ஏ.வை நீக்கும் அதிகாரம் அன்புமணிக்கு இல்லை. நீக்க வேண்டுமென்றால் பாமக நிறுவனர்,
தலைவராகிய நான் மட்டுமே நீக்க வேண்டும். அவர் பாமகவின் கொறடாவாக உள்ளார். பாமக சட்டமன்றக்
குழு தலைவர் ஜிகே மணி சபாநாயகருக்கு கடிதம் கொடுத்து தான் நீக்க முடியும்…’’ என்றார்.
திமுக வன்னியர் விரோத கட்சி என்று அன்புமணி கூறியிருப்பது பற்றி
கேள்வி எழுப்பப்பட்டது. ஆக்ரோஷமான பதில் எதிர்பார்க்கப்பட்ட நிலையில், “இது பற்றி நான்
கருத்து கூற விரும்பவில்லை” என்று நழுவிக்கொண்டார். இந்த நழுவலே பெரும் கேள்வியாக மாறியிருக்கிறது.
அன்புமணியுடன் நெருக்கம் காட்ட வேண்டும், தேவையில்லாத பிரச்னைகளை வெளியே பேசக்கூடாது
என்று டெல்லியில் இருந்து மிரட்டப்பட்டதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
ராமதாஸை மிரட்டும் அளவுக்கு பாஜக வளர்ந்துவிட்டதா..?