Share via:
தேர்தல் வருகிறது என்றாலே நடைப்பயணம் செய்வது முக்கியத்துவம் பெறுகிறது.
அந்த வகையில், ‘மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம்’ என்ற ஸ்லோகனுடன் அதிமுக பொதுச்
செயலாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி தனது சட்டமன்ற தேர்தல்
பிரசாரத்தை கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் தொகுதியில் இருந்து இன்று தொடங்கியிருக்கிறார்.
ராசியான கோமேட்டுப்பாளையத்தில் உள்ள வனபத்ரகாளியம்மன் கோயிலில்
வழிபாடு நடத்தி தனது சுற்றுப்பயணத்தை தொடங்கினார் இ.பி.எஸ். எந்த ஒரு புதிய தொடக்கமாக
இருந்தாலும் வனபத்ரகாளியம்மன் கோயிலில் இருந்து தொடங்கினால் கைகூடும் என்பது இப்பகுதி
மக்களின் நம்பிக்கை. அதன்படியே திமுக அரசை வீட்டுக்கு அனுப்பும் உன்னத நோக்கத்தில்
சுற்றுப்பயணம் தொடங்கப்படுவதால் இந்த கோயிலை இ.பி.எஸ் தேர்வுசெய்திருக்கிறார்.
காலை 9 மணி முதலே கோயிலுக்கு பக்தர்களும், அதிமுகவினரும் சாரை
சாரையாக வரத் தொடங்கினர். முன்னாள் அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, ஆர்.பி.உதயகுமார்,
பா.வளர்மதி, அக்ரி கிருஷ்ணமூர்த்தி, எம்.எஸ்.எம்.ஆனந்தன்,
திண்டுக்கல் சீனிவாசன், நத்தம் விஸ்வநாதன், எம்.எல்.ஏ பொள்ளாச்சி ஜெயராமன், எம்.எல்.ஏ
அம்மன் அர்ஜூனன், சிங்கை எம்.எல்.ஏ ஜெயராமன், மேட்டுப்பாளையம் எம்.எல்.ஏ ஏ.கே.சின்ராஜ்,
கவுண்டம்பாளையம் எம்.எல்.ஏ பி.ஆர்.ஜி.அருண்குமார், சூலூர் எம்.எல்.ஏ கந்தசாமி, மாணவர்
அணித் தலைவர் சிங்கை ராமச்சந்திரன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
சரியாக 9.40 மணியளவில் கோயிலுக்கு வந்த இ.பி.எஸ் அவர்களுக்கு பட்டாசு
வெடித்தும், மேளதாளங்களை இசைத்தும் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. முன்னாள் அமைச்சர்கள்,
எம்.எல்.ஏக்கள், முன்னாள் எம்.எல்.ஏக்கள், நிர்வாகிகள் என பலரும் பூங்கொத்து கொடுத்து
இ.பி.எஸ்ஸை வரவேற்றனர். பக்தர்கள் சிலர் தங்களது பிள்ளைகளுடன் வந்து ஆசீர்வாதம் வாங்கிச்
சென்றனர். வழிபாடு நடத்தி முடித்த பின்னர், கோயில் பிரகாரத்தில் பக்தர்களுக்கு சிறப்பு
அன்னதானம் வழங்கினார் இ.பி.எஸ்.
அத்திக்கடவு-அவிநாசி நீர்ப்பாசன திட்டத்தின் முதல் கட்டத்தை தனது
ஆட்சிக்காலத்தில் நிறைவேற்றிய முன்னாள் முதல்வர் எடப்பாடி கே. பழனிச்சாமிக்கு, கோவை
மாவட்ட விவசாயிகள் நன்றியைத் தெரிவித்துப் பாராட்டினர். விவசாயிகள் பேசியபோது,
“இந்த திட்டம் எங்களுக்குப் பல நன்மைகளைத் தந்துள்ளது. நீரின் ஆதாரமாக இருந்து,
நம்முடைய சாகுபடிக்குப் பெரிதும் உதவியுள்ளது. எனவே, தற்போது நிறைவடைந்திருக்க வேண்டிய
இரண்டாம் கட்டப் பணிகளை, திமுக அரசு நிறைவேற்றவில்லை. நீங்கள் மீண்டும் ஆட்சிக்கு வந்து
விரைந்து செயல்படுத்த வேண்டும்” என்றார்கள்.
மேலும், வனவிலங்குகள் தாக்குதலால் விளையும் சேதங்களை தவிர்க்க
அரசு நடவடிக்கை எடுக்கவில்லை, அதையும் இம்பி.எஸ் அரசு அமைந்த பிறகு நடவடிக்கை வேண்டுமெனவும்
அவர்கள் கோரிக்கை வைத்தனர். கோவை மாவட்ட நெசவாளர் சங்கம் சார்பில் பல கோரிக்கைகள் வைக்கப்பட்டன.
அதில், நெசவாளர்களுக்கான ஊதியம் உயர்த்தப்பட வேண்டும். மருத்துவ காப்பீடு மற்றும் இன்சூரன்ஸ்
திட்டங்களை மீண்டும் அமல்படுத்த வேண்டும். அம்மா ஆட்சியில் வழங்கப்பட்ட பசுமை வீடுகள்
திட்டத்தை மீண்டும் நடைமுறைப்படுத்த வேண்டும் எனத் தெரிவித்தனர்.
செங்கல் சூளை தொழிலாளர்கள் தரப்பில், தற்போதைய அரசு அமைந்ததும்
சமூக ஆர்வலர்கள் என்ற பெயரில் சிலர் வழக்குத் தொடர்ந்து, செங்கல் சூளைகளை மூடிவிட்டனர்.
நாங்கள் சட்டத்துக்கு கட்டுப்பட்டு செங்கல் சூளைகளை இயக்க தயாராக இருக்கிறோம். இ.பி.எஸ்
அவர்கள் முதல்வரானதும் இதனை செவிசாய்த்திட வேண்டும் என்று கோரினர்.
இந்த ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய எடப்பாடி பழனிசாமி, ‘’நான் விவசாயி
என்பதால் விவசாயிகளின் வலிகளை நன்கு புரிந்திருக்கிறேன். சொட்டுநீர் பாசனத்துக்கு மானியம்
அளித்து திட்டத்தை செயல்படுத்தியது அதிமுக ஆட்சியே. அதேபோல் கால்நடை மருத்துவக் கல்லூரி,
பசுமை வீடுகள், வனவிலங்குகளால் பாதிப்புக்கான இழப்பீடு, மற்றும் இலவச மின்சாரம் போன்ற
பல திட்டங்களை நாங்கள் செயல்படுத்தியுள்ளோம்.
தற்போதைய திமுக ஆட்சியில் விவசாயிகள், நெசவாளர்கள், செங்கல் தொழிலாளர்கள்
உள்ளிட்ட பலரும் உரிய ஆதரவு இல்லாமல் துன்பப்படுகிறார்கள். மீண்டும் அதிமுக ஆட்சி வந்தால்
விவசாயிகளுக்கும் பொதுமக்களுக்கும் தேவையான அனைத்து திட்டங்களும் அமல்படுத்தப்படும்”
என உறுதியளித்தார். இந்தக் கூட்டத்தில் முன்னாள் அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி நாடாளுமன்ற
உறுப்பினர் தம்பிதுரை மற்றும் சட்டமன்ற, நாடாளுமன்ற முன்னாள் மற்றும் இந்நாள் உறுப்பினர்களும்,
அதிமுக நிர்வாகிகளும் கலந்துகொண்டனர்.
முதல் நாளில் பா.ஜ.க.வை சேர்ந்த தலைவர்கள் கலந்துகொள்ள வேண்டும்
என்று அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. ஆனால், அவர்கள் யாரும் வரவில்லை. எனவே, கூட்டணி
இருக்கிறதா இல்லையா என்ற குழப்பத்தில் இருக்கிறார்கள். இதுகுறித்து பேசும் பாஜகவினர்,
‘’பல்வேறு இடங்கள்ல் இபிஎஸ்ஸை எங்கள் தலைவர்கள் சந்தித்துப் பேசுவதற்குத் திட்டமிட்டுள்ளனர்.
எனவே, விரைவில் சந்திப்பு நடக்கும், மக்களின் குழப்படும் தீரும் என்கிறார்கள்.