Share via:
அப்பாவுக்கும் மகனுக்கும் இடையிலான அதிகாரப் போராட்டத்தில் அன்புமணி
அடுத்தகட்ட நடவடிக்கையாக இன்று டெல்லிக்குப் போயிருப்பது பல்வேறு கேள்விகளை எழுப்பியிருக்கிறது.
ராமதாஸ் – அன்புமணி இடையேயான நேரடி மோதல் பாமக பொதுக்குழு கூட்டத்தில்
வெட்ட வெளிச்சமானது. அதன் பிறகு, பாமகவுக்கு இனி தானே தலைவர் என்றும், அன்புமணி செயல்
தலைவராகச் செயல்படுவார் எனவும் அறிவித்த ராமதாஸ், பின்னர் மற்றொரு செய்தியாளர் சந்திப்பில்,
தனது உயிர் மூச்சு இருக்கும் வரை தானே பாமக தலைவராக செயல்படுவேன் என அறிவித்தார்.
மேலும், அன்புமணிக்கு ஆதரவான நிர்வாகிகளை கட்சிப் பொறுப்புகளில்
இருந்து நீக்கி வரும் ராமதாஸ், அந்த பொறுப்புகளுக்கு தனது ஆதரவாளர்களை நியமித்து வருகிறார்.
தைலாபுரத்தில் ராமதாஸ் தொடர்ந்து கட்சிக் கூட்டங்களை நடத்தினாலும், அதில் பெரும்பாலான
நிர்வாகிகள் பங்கேற்காத நிலையில், அன்புமணி நடத்தும் கூட்டங்களில் பெரும்பாலான நிர்வாகிகள்
கலந்து கொள்கின்றனர்.
இதை சுட்டிக்காட்டி, கட்சியில் 99 சதவீத நிர்வாகிகள் தன் பக்கமே
இருப்பதாகவும், பொதுக்குழுவால் தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவரான தனக்கே முழு அதிகாரம் இருப்பதாகவும்
அன்புமணி உறுதிபடக் கூறி வருகிறார். இதனிடையே, வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் பாமக
வேட்பாளர்கள் யார் என்பதை தான்தான் முடிவு செய்வேன் என ராமதாஸ் தெரிவித்துள்ளதால்,
தேர்தல் நேரத்தில் பாமகவில் சிக்கல் ஏற்படக்கூடும் என கூறப்படுகிறது. இதனால், கட்சியில்
உண்மையான அதிகாரம் ராமதாஸுக்கா… அன்புமணிக்கா… என்ற குழப்பம் நிர்வாகிகள் மற்றும்
தொண்டர்கள் மத்தியில் நிலவி வருகிறது.
இந்த குழப்பமான சூழலுக்கு மத்தியில் டெல்லி சென்றுள்ள பாமக தலைவர்
அன்புமணி, இன்று மதியம் 12.30 மணியளவில் தேர்தல் ஆணைய அதிகாரிகளை சந்திக்க இருப்பதாக
தகவல் வெளியாகியுள்ளது. கட்சியில்
தனக்கே அதிகாரம் இருக்கிறது என்பதை உறுதி செய்யவும், தேர்தல் நேரத்தில் வேட்பாளர் தேர்வு
தொடர்பாக எந்தப் பிரச்சினையும் ஏற்படாமல் இருக்கவும் தேர்தல் ஆணைய அதிகாரிகளை சந்தித்து
அன்புமணி மனு அளிக்க இருப்பதாகக் கூறப்படுகிறது.
அதேபோல் இன்றைய தினம் அமித்ஷாவை சந்திக்க இருப்பதாகவும் தெரிகிறது.
இந்த சந்திப்புக்குப் பிறகு பாஜக கூட்டணியில் இருப்பது உறுதி செய்யப்படும் என்றும்
கூறப்படுகிறது. கட்சித் தலைமையை கைப்பற்றிவிட்டால் தேர்தல் நேரத்தில் சிக்கலாகிவிடாமல்
தடுத்துவிட முடியும் என்பதற்காகவே அன்புமணி இந்த முடிவு எடுத்திருக்கிறார்.
ராமதாஸ் நடவடிக்கை என்னவாக இருக்கும் என்பது இன்று தெரிந்துவிடும்.