Share via:
ரிதன்யாவின் தற்கொலை ஒட்டுமொத்த தமிழகத்தையும் அதிரவைத்திருக்கிறது.
ஆசை ஆசையாகப் பாசம் பாசமாக வளர்த்த பிள்ளையை ஜாதிப் பெருமை, சமுதாய அந்தஸ்து காட்டி
பெற்றோரே கொலை செய்துவிட்டதாக மக்கள் அதிர்ந்து நிற்கிறார்கள்.
திருப்பூர் மாவட்டம் அவிநாசி கைகாட்டி புதூர் பகுதியைச் சேர்ந்தவர்
அண்ணாதுரை. இவர் பனியன் நிறுவனம் நடத்தி வருகிறார். இந்து திராவிட மக்கள் கட்சியின்
மாநில ஒருங்கிணைப்பாளராக இருக்கிறார். மேலும் ஈரோடு இடைத்தேர்தலில் இக் கட்சியின் சார்பில்
ஆட்டோ சின்னத்தில் போட்டியிட்டு உள்ளார். இவரது மகள் ரிதன்யா (வயது 27). இவருக்கும்
திருப்பூர் வேலம்பாளையம் பகுதியைச் சேர்ந்த கவின் குமார் (வயது 28) இவர் திருப்பூர்
மாநகர் மாவட்ட காங்கிரஸ் கட்சித் தலைவர் கிருஷ்ணனின் மூத்த மகன் வழி பேரன். இவர்களுக்கு
இரண்டு மாதங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது.
இரண்டு நாட்களுக்கு முன்பு அவிநாசி பகுதியில் ரிதன்யா கணவர் மற்றும்
அவர் குடும்பத்தாரின் வரதட்சணை கொடுமை மற்றும் உடல் ரீதியாக மன ரீதியான துன்புறுத்தல்
காரணமாக காரிலேயே விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்டு இறந்தது இந்த பகுதியில் பெரும்
அதிர்வலைகளை உருவாக்கி உள்ளது. இந்தப் பகுதியில் வசிக்கும் மேட்டுக்குடி மற்றும் உயர்
நடுத்தர வர்க்க குடும்பங்களில் இதுதான் இன்றைய பேசு பொருளாக இருக்கிறது.
ரிதன்யா தன் தந்தைக்கு கடைசியாக அனுப்பிய வாட்ஸ் அப் வாய்ஸ் மெசேஜை
கேட்பவர்களின் மனம் உடைந்து போகும்.கண்களில் கண்ணீர் வரும். அவ்வளவு உருக்கமான இயலாமையில்
பரிதாபகரமான அழுகுரலிலான அந்த பேச்சு காதில் ஒலித்துக் கொண்டே இருக்கிறது. மிகுந்த
மனவேதனை அந்த வாய்ஸ் மெசேஜ் தருகிறது. வள்ளி கும்மி நடத்தி பெண்களிடம் உறுதி மொழியை
மிரட்டி வாங்குவதுபோல் வாங்கும் நபர்கள், அந்தப் பெண்களுக்கு சம உரிமை கொடுக்கவும்
சக மனுஷியாக மதிக்கவும், தோழமையுடன் நடத்தவும் அங்கு குழுமி இருந்த இளைஞர்களிடம் உறுதிமொழி
ஏன் வாங்குவதில்லை ?
இந்த விவகாரத்தில் பெண் உரிமைக்குப் போரிடுபவர்கள் கேட்கும் கேள்விகள்
இங்கே….
1) ஒருத்தனுக்கு ஒருத்திதான். வாழ்க்கையில் ஒரு முறை தான் திருமணம்
நடக்க வேண்டும்.
2) இன்னொரு வாழ்க்கை தேர்வு செய்வது அசிங்கம்.
3) என் தலையெழுத்து படி தானே நடக்கும்? அந்தப் பெண்ணின் இந்த பிற்போக்குத்தனமான
கருத்துக்களுக்கு எல்லாம் யார் பொறுப்பு ? இதையெல்லாம் உண்மை என்று அவரை நம்ப வைத்து
அவர் மூளையில் ஏற்றியது யார் ?
மத மூடநம்பிக்கைகளும், ஜாதிய இறுக்கங்களும் ,கற்பு குறித்த கற்பிதங்களும்,
தலையெழுத்து, கடவுள் செயல் போன்ற மூடநம்பிக்கைகளையும் இந்தப் பெண்ணிற்கு சிறு வயது
முதல் அவரைச் சுற்றி இருக்கும் குடும்ப அமைப்பும் அவரைச் சுற்றிய சமுதாய சொந்தங்களும்
ஜாதிப் பெருமிதம் மிகுந்த பெரிய மனிதர்களும் தான் இதற்கு முழுப் பொறுப்பு, ரிதன்யாவுக்கு
மன உறுதியை கொடுத்து ஆறுதல் சொல்லி தைரியத்தை வரவழைத்து பிரச்சனையை எதிர்கொள்ளும் துணிச்சலை
கற்றுக் கொடுத்திருந்தால் அந்த பெண்ணிற்கு இப்படியொரு முடிவு நேர்ந்திருக்காது.
எனவே, வாழ்வின் எந்த சூழ்நிலையிலும், என்ன தவறு செய்திருந்தாலும்
நீ எங்களிடம் வரலாம், ‘நாங்கள் இருக்கிறோம்’ என்ற நம்பிக்கையை பெற்றோர் தொடர்ந்து தரவேண்டியது
அவசியம்.