Share via:
கம்யூனிஸ்ட் கட்சிகள், விடுதலை சிறுத்தைகள், நாம் தமிழர் ஆகிய
கட்சிகள் எல்லாம் தூய்மைப் பணியாளர்கள் போராட்டத்தில் நேரடியாக களம் இறங்கியிருக்கும்
நிலையில், அந்த போராட்டத்தை புதிய டைப்பாக அணுகியிருக்கிறார் நடிகர் விஜய். அரசியல்
சாணக்கியத்தனம் என்று அவரது ரசிகர்கள் சப்பைக்கட்டு கட்டுகிறார்கள்.
அவரது நிர்வாகிகள், ‘’விஜய் நேரில் வர தயாராக இருந்தார். ஆனால்,
தூய்மைப் பணியாளர்கள் அதை விரும்பவில்லை. அதிக கூட்டம் கூடிவிடும், மழை வரும் என்றெல்லாம்
சொல்லி தடுத்து விட்டனர். அதனாலே நேரில் சந்தித்தார்’’ என்று சமாளிக்கிறார்கள்.
அதேநேரம் விஜய்யின் உண்மையான ரசிகர்கள் வருத்தப்படுகிறார்கள்.
‘’போராட்ட களங்களுக்கு ஒரு கட்சியின் தலைவரே நேரில் வருவது நம் மக்களை இன்னும் உறுதியாக்கும்;
நம்பிக்கை ஒளியை கூட்டும். அதைத்தான் மக்களோடு நிற்கக்கூடிய அனைவரும் தலைவர்களிடம்
எதிர்பார்ப்பது. அந்த அடிப்படையில் தான் டாக்டர். திருமாவளவன், நீலம் அமைப்பினர், நாம்
தமிழர் கட்சி, கம்யூனிஸ்ட் தலைவர்கள், பாமக, தேமுதிக, காங்கிரஸ் ஆகியோரை மக்கள் அரவணைத்து
அழைத்தனர். இதில் குறிப்பாக, நாம் தமிழர் கட்சியினர் ஒரு கண்டன ஆர்ப்பாட்டத்தையும்
உணவு வழங்கலையும் மற்றும் போராட்ட களத்தில் தங்கள் நிர்வாகிகளையும் உடனிருக்க செய்திருக்கிறார்கள்.
ஆனால், இவர்கள் யாவருக்கும் நிகழக்கூடிய (அதிகம் சீமானுக்கு) *செய்தி தீண்டாமை* தமிழகத்தில்
மற்றவர்களுக்கு நடப்பது கிடையாது. அதிலும், குறிப்பாக விஜய் அவர்களுக்கு அது நடக்க
வாய்ப்புகளே இல்லை.
இப்படிப்பட்ட பெருவாய்ப்பினை தன்னகத்தில் வைத்திருக்கும் விஜய்
அவர்கள் நேரில் வந்திருந்தால் இன்னும் அதிக ஆறுதலை போராடும் மக்கள் அடைந்திருப்பார்கள்.
அவர் அழைத்து சந்தித்திருந்தாலும் வெளியில் வந்த தோழர்கள் அந்த சந்திப்பின் மீதான விமர்சனம்
விழுவதற்கு முன்பே அதை நியாயப்படுத்தி விட்டார்கள். எனவே, வந்தாரோ அழைத்தாரோ மக்களுக்கான
ஆதரவை தெரிவித்த வரைக்கும் மகிழ்ச்சி. காரணம் இப்போதைய உடனடி தேவை என்பது மக்களுக்கான
நீதி’’ என்கிறாகள்.
அதேநேரம் நடிகர் விஜய் அடுத்து யாரையெல்லாம் அழைத்துப் பேசுவார்கள்
என்று ஒரு பேச்சு வைரலாகியுள்ளது. விஜய் அடுத்தக்கட்டமாக போராட்டத்தை சுமுகமாக முடித்து
வைக்கும் விதமாக முதல்வர் ஸ்டாலின், அமைச்சர் சேகர்பாபு, மேயர் பிரியா உள்ளிட்டோரை
பனையூருக்கு அழைத்து பேச்சு வார்த்தை நடத்த வாய்ப்பு உள்ளது.
இதையடுத்து ஆளுநரை ஆர்.என்.ரவியை அழைத்து பேசவும் வாய்புள்ளதாக
தகவல். இதன் பிறகும் போராட்டம் முடிவுக்கு வரவில்லை என்றால் நீதிபதியை பனையூருக்கு
அழைத்து உத்தரவு போடுவதற்கு ஏற்பாடு செய்வார் என்று சொல்கிறார்கள். விஜய்யும் விஜய்
ரசிகர்களும் தனி உலகத்தில் வாழ்கிறார்கள்.