Share via:
தமிழக அரசுக்கு அவ்வப்போது குடைச்சல் கொடுத்துவரும் நாம் தமிழர்
சீமான் வரும் 15ம் தேதி கள் இறக்கும் போராட்டம் அறிவிப்பு செய்திருக்கிறார். இதற்கு
யாரும் எதிர்பார்க்காத வகையில் புதிய தமிழகம் டாக்டர் கிருஷ்ணசாமி கடுமையாக எதிர்ப்பு
தெரிவித்திருக்கிறார்.
இன்று டாக்டர் கிருஷ்ணசாமி, ‘’கள்’ உணவு அல்ல கொடிய விஷம். கள்,
சாராயம், அல்லது பீர், பிராந்தி உள்ளிட்ட மதுபானங்கள் எதுவாயினும் உடலுக்கும் உயிருக்கும்
ஊறு விளைவிக்கக் கூடியது. தமிழகத்தில் ஏறக்குறைய 2750 சில்லறை விற்பனை கடைகள் மூலம்
’மது விற்பனை’ நடைபெறுகிறது. மதியம் 12 மணிக்கு தொடங்கி இரவு 10 மணி வரை மது விற்பனை
செய்ய வேண்டும் என விதிமுறைகள் இருக்கின்றன. ஆனால், சட்ட விரோதமாக அதிகாலை 6:00 மணி
முதல் டாஸ்மாக் பார்கள் திறக்கப்படுகிறது; காலையில் வேலைக்குச் செல்வோர் குடிப்பதை
அத்துறை அமைச்சரே நியாயப்படுத்துகிறார்.
தமிழ்நாட்டில் 60 லட்சம் பேர் மதுப் பழக்க வழக்கங்களுக்கு ஆட்பட்டு
உடல் நலம் பாதிக்கப்பட்டு பெருமளவு உயிரிழப்புகளுக்கு ஆளாகின்றனர் . கட்டிடத் தொழிலாளர்கள்,
விவசாயத் தொழிலாளர்கள், தினசரி கூலித் தொழிலாளர்கள் என அடிப்படை, நடுத்தர வர்க்கத்தினரும்
தங்களது தினசரி வருமானத்தில் பெரும் பகுதியை டாஸ்மாக்கிலேயே தொலைத்து விடுகின்றனர்.
இதனால் பல குடும்பங்கள் வறுமை நிலைக்குத் தள்ளப்படுகின்றன. டாஸ்மாக் நிறுவனத்தில் கூடுதல்
விலைக்கு விற்பனை, கள்ளத்தனமான விற்பனை என ஆண்டொன்றுக்கு ஒரு லட்சம் கோடிக்கு மேல்
ஊழல் நடைபெறுகிறது.
எனவே தமிழக மக்களின் நலன் காக்கப்பட வேண்டுமெனில் டாஸ்மாக் கடைகளை
மூடி, பூரண மதுவிலக்கை அமல்படுத்துவது ஒன்றே நிரந்தர தீர்வாகும். புதிய தமிழகம் கட்சியின்
சார்பாக ‘மது, போதை, புகையில்லா தமிழகம்’ என தொடர் போராட்டம் நடத்தி வருகிறோம். இந்நிலையில்
அண்மைக் காலமாக ‘கள் உணவு’ என்று ஒரு சிலர் கள் இறக்கும் போராட்டத்தில் ஈடுபடப் போவதாக
அறிவித்துள்ளார்கள். கள் மதுவே தவிர, அது உணவாகாது.
பதநீர் வேறு; கள் வேறு. கள் இறக்க அனைத்து கிராமப்புறங்களில் அனுமதி
கொடுத்தால் விவசாயத் தொழிலாளர்கள், பனை, தென்னை தோப்புகளே கதி என மதுவுக்கு அடிமையாகி
வாழ்க்கையைச் சீரழித்துக் கொள்வார்கள். கடந்த காலங்களில் அவ்வாறே நிகழ்ந்தன. கள் உடம்புக்கு
நல்லது என்றும் தொடர்ந்து பொதுமக்கள் மத்தியில் தவறான கருத்து பரப்பப்படுகிறது. ‘உப்பு
கருவாடும் ஒத்த மரக் கள்ளும் உடம்புக்கு நல்லது’ என்று சினிமாவில் தவறாகப் பாடி வைத்துள்ளனர்.
எல்லா மது வகைகளிலும் அடிப்படையாக இருப்பது ஆல்கஹால்.
கள்ளில் 8 முதல் 15 சதவீத வரை ஆல்கஹால் அளவீடு இருக்கும்; பிற
மதுபான வகைகளில் 30 முதல் 40 சதவீதம் வரை ஆல்கஹால் இருக்கும். எனவே போதையை அதிகரிக்க
லிட்டர் கணக்கில் கள்ளைக் குடித்து விடுவார்கள். கள் பிற மதுபானங்களை விட அதிகமான பாதிப்புகளை
உருவாக்கும் மிக மோசமான மதுவாகும். ரத்தக்குழாய்கள்; உணவு ஜீரணத்தை ஒழுங்குபடுத்தவும்,
உடலுக்குத் தேவையான சக்தியைச் சக்தியை சேமித்து வைக்கும் ஈரல்கள் மது குடிப்பதால் பெரும்
பாதிப்படையும். நல்ல திசுக்களுக்கு பதிலாக கொழுப்பு சத்து அதிகமாகி ஈரலின் செயல்பாட்டைக்
குறைத்துவிடும். இன்சுலின் சுரக்கும் கணையத்தை பாதிப்படையச் செய்து சர்க்கரை நோய் மற்றும்
கணைய புற்றுநோயை அதிகரிக்கும். ரத்தக் கொதிப்பு; மூளை நரம்பு மண்டல பாதிப்பு என பலவிதமான
நோய்களையும் வரவழைக்கும் மிகக் கொடிய மது ‘ கள்’ ஆகும்.
‘ ’கள்’ ஒரு உணவு என்று சொல்வதற்கு உண்டான புரோட்டின், விட்டமின்கள்,
மினரல்ஸ் போன்ற எந்த விதமான சத்துக்களும் அதில் இல்லை. கள்ளின் ஆபத்து தன்மையை உணராதவர்கள்
அரசியல் ரீதியாக தவறான பிரச்சாரத்தை மேற்கொள்கிறார்கள். கள் இறக்க அனுமதித்தால் கிராமம்
தோறும் நாட்டுச் சாராயம் காய்ச்சுதல் அதிகரிக்கும். இதன் போக்கு எப்படி, எங்கு போய்
முடியும்? கள் இறக்கும் போராட்டம் நடத்துவது அதை பொது வழியில் குடித்துக் காட்டுவது
அனைத்தும் சட்டவிரோதமே. எனவே, வரும் 15 ஆம் தேதி நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ள கள்
இறக்கும் போராட்டத்தைத் தடை செய்ய வேண்டும்; தமிழகத்தில் பூர்ண மதுவிலக்கை அமல்படுத்த
வேண்டும்’’ என்று கோரிக்கை வைத்திருக்கிறார்.
இனி, நாம் தமிழர் தம்பிகள் டாக்டர் கிருஷ்ணசாமி மீது கடுமையான
தாக்குதலைத் தொடங்குவார்கள் என்று எதிர்பார்க்கலாம்.