Share via:
அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவி மீதான பாலியன் வன்முறையில் சிக்கிய
ஞானசேகரனுக்கு 30 ஆண்டுகள் என கடுமையான தண்டனை கிடைத்திருக்கிறது. ஞானசேகரன் மீது நிரூபிக்கப்பட்ட
11 குற்றச்சாட்டு சட்டப்பிரிவுகளின் கிடைத்திருக்கும் தண்டனை திருப்திகரமாக இருக்கின்றன
என்றாலும், ஞானசேகரன் மட்டும் தான் குற்றவாளியா என்று கேள்வி எழுப்பியிருக்கிறார் எதிர்க்கட்சித்
தலைவர் எடப்பாடி பழனிசாமி.
இன்று ஞானசேகரனுக்கு கிடைத்திருக்கும் தண்டனை விபரம் அறிந்துகொள்வோம்.
329 – மாணவியிடம் விருப்பத்துக்கு மாறாக அத்துமீறி நடத்து கொள்ளுதல் – 3 ஆண்டுகள் சிறை
126(2) – மாணவியை செல்ல விடாமல் சட்டவிரோதமாக தடுத்து நிறுத்துதல் – ஒரு மாதம் சிறை.
87 – வலுக்கட்டாயமாக கடத்தி ஆசைக்கு இணங்க வைத்தல் – 10 ஆண்டுகள், ரூ.10,000 அபராதம்.
127(2) – உடலில் காயத்தை ஏற்படுத்துதல் – 1 ஆண்டு சிறை. 75(2) – விருப்பத்துக்கு மாறாக
பாலியல் வன்கொடுமை செய்தல் – 3 ஆண்டுகள் 76 – கடுமையாக தாக்குதல் – 7 ஆண்டுகள் சிறை,
ரூ.10,000 அபராதம். 64(I) பாலியல் வன்கொடுமை -30 ஆண்டுகள் தண்டனை குறைப்பு இல்லாமல்
ஆயுள்; ரூ.25,000 அபராதம். 351(3) கொலை மிரட்டல் விடுத்தல் – 7 ஆண்டுகள் சிறை, ரூ.10,000
அபராதம். 238(B) பாலியல் வன்கொடுமை தொடர்பான ஆதாரங்களை அழித்தல்; 3 ஆண்டுகள் சிறை,
ரூ.10,000 அபராதம். 66(E) தகவல் சட்டப்பிரிவு: தனிநபர் அந்தரங்க உரிமைகளை மீறுதல்
– 3 ஆண்டுகள் சிறை, ரூ.25,000 அபராதம் கொடுக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து, எடப்பாடி பழனிசாமி, ‘’தொடர் போராட்டத்தால் அண்ணா பல்கலை.
வழக்கின் குற்றவாளி ஞானசேகரனுக்கு தண்டனை கிடைத்துள்ளது பாதிக்கப்பட்ட மாணவியின் குரலாக
அதிமுக தொடர்ந்து ஒலிக்கும் என்ற வாக்குறுதியை இன்றுவரை நிறைவேற்றி வருகிறோம் ஞானசேகரன்
மட்டுமே குற்றவாளி என்று அவசர அவசரமாக இந்த வழக்கை முடிக்க முனைந்தது ஏன்?” என்று
கேள்வி எழுப்பியிருக்கிறார்.
ஞானசேகரனுக்குத் தக்க தண்டனை வழங்கப்பட்டுவிட்டது என்றாலும் அவருக்கு
ஆதரவாக பல்கலைக்கழகத்தில் இருந்த நபர் யார் என்ற கேள்விக்கு இன்று வரையிலும் பதில்
கிடைக்கவே இல்லை என்பதையே அதிமுக சுட்டிக் காட்டுகிறது. அதேபோன்று மாணவி மீது காவல்
துறை அழுத்தம் கொடுத்தது இன்று வழக்கறிஞர் மூலம் உண்மை வெளியாகியுள்ளது.