Share via:
திமுக பொதுக்குழுக் கூட்டத்தில் புதிதாக இரண்டு அமைப்புகளுக்கு ஒப்புதல் வழங்கப்பட்டது. கல்வியாளர்கள் அணி, மாற்றுத்திறனாளிகள் அணி என இரண்டு உதயமாகின. நடிகர் விஜய்யைப் பார்த்து காப்பியடித்ததாக கடுமையான விமர்சனங்கள் எழுந்தன. இந்நிலையில் மாற்றுத்திறனாளிகளுக்கு ஒரு நல்ல செய்தி வந்திருக்கிறது.
அதாவது, உள்ளாட்சி அமைப்புகளில் நியமன உறுப்பினர்களாக மாற்றுத்திறனாளிகளை நியமிக்கும் மசோதாவுக்கு ஆளுநர் ஒப்புதல் அளித்திருக்கிறார். தமிழ்நாடு சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட இரண்டு சட்ட மசோதாக்களுக்கு தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளித்தார். ஊரக உள்ளாட்சி அமைப்புகளில் மாற்றுத் திறனாளிகளுக்கு பிரதிநிதித்துவம் வழங்குவது தொடர்பான இரண்டு மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளன.
ஊரக உள்ளாட்சி அமைப்புகளில் தேர்தலில் போட்டியிடாமல் மாற்றுத்திறனாளிகளை நேரடியாக நியமிக்கும் வகையில் தமிழ்நாடு சட்டமன்றத்தில் இரண்டு மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டன. இந்த மசோதாக்களுக்கு ஒப்புதல் வேண்டி தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு அனுப்பப்பட்டது. தற்போது இந்த இரண்டு மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல் அளித்தார்.
இதனால் உள்ளாட்சி அமைப்புகளில் 14 ஆயிரம் மாற்றுத் திறனாளிகளுக்கு பிரதிநிதித்துவம் கிடைக்க உள்ளது. நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் 650 மாற்றுத் திறனாளிகளும், கிராம பஞ்சாயத்துகளில் 12, 913 மாற்றுத் திறனாளிகளும், ஊராட்சி ஒன்றியம் 388 மாற்றுத் திறனாளிகளும், மாவட்ட ஊராட்சியில் 37 மாற்றுத் திறனாளிகளும் நியமிக்கப்படுவார்கள்.
இந்த பதவிகள் எல்லாமே நியமனம் என்பதால் திமுகவுக்கு ஆதரவானவர்களே நியமனம் செய்யப்படுவார்கள் என்றும் இதனால் தேர்தலில் ஓட்டு வேட்டைக்கு பெரும் லாபம் என்றும் சொல்லப்படுகிறது.