Share via:
சினிமா நகைச்சுவையில் நடிகர் சிங்கமுத்து, ‘தூக்கட்டா…. தூக்கட்டா’
என்று கூறிவிட்டு கடைசியில் எலுமிச்சம்பழத்தைத் தூக்குவது போன்று, விஜய் கட்சியில்
இருந்து சோஷியல் மீடியா பிரபலம் வைஷ்ணவியை திமுகவில் இணைத்துவிட்டு ஜம்பம் காட்டி வருகிறார்கள்.
விஜய் தொடங்கிய தமிழக வெற்றிக் கழகத்தில் ஏராளமான இளைஞர்கள், இளம்
பெண்கள் இணைந்த வண்ணம் உள்ளனர். அதே சமயம் பல இடங்களில் பதவி தரவில்லை என்று குற்றம்சாட்டியும்,
நிர்வாகிகள் ஒரு தலைபட்சமாக நடப்பதாகவும் விமர்சித்தும் கட்சியில் இருந்து வெளியேறினர். கோவை கவுண்டம்பாளையத்தை
சேர்ந்த வைஷ்ணவிவியும்
அப்படியொரு குற்றச்சாட்டை முன்வைத்து கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்தார்.
இது குறித்து அவர், “தமிழக வெற்றிக் கழகத்தில் ஒரு வருடமாக பயணித்து
வந்தேன். தவெகவை பொறுத்தவரை இளைஞர் அரசியலை ஊக்குவிப்பார்கள் என்று நினைத்தே என்னைப்
போன்ற இளைஞர்கள், இளம் பெண்கள் சேர்ந்தோம். ஆனால் எங்களுக்கு அதிருப்திதான் மிச்சமாக
இருந்தது. தவெகவில் இளைஞர்களுக்கான அரசியலை சுத்தமாக ஊக்குவிப்பது கிடையாது.
“நான் ஒருபோதும் பதவிக்கு ஆசைப்பட்டது கிடையாது. தவெகவில் இருந்து
விலகியவுடன் பல கட்சிகளில் இருந்தும் எனக்கு அழைப்பு வந்தது. ஆனால், உடனே எந்த முடிவையும்
எடுக்கவில்லை. 15 ஆண்டுகளாக திமுகவில் களப்பணி செய்து வந்த என் அம்மா, நான் தவெகவில்
இணைந்த பிறகு, எனது அரசியல் பயணத்திற்காக தனது அரசியல் வாழ்க்கையை இழக்க தயாராக இருந்தார்.
நான் தவெகவில் இருந்தபோது திமுக மீது கடும் விமர்சனங்களை வைத்துள்ளேன். ஆனால், ஒருபோதும்
என் மீதோ எனது குடும்பத்தின் மீதோ தனிப்பட்ட முறையில் அவதூறு பரப்புவதோ, மிரட்டுவதோ
என்று எதுவும் நடந்தது கிடையாது. எனது கருத்தை கருத்தியலாகவே எதிர்கொண்டனர். ஆனால்,
சில காலங்களாக ஒரு கட்சியினர் என் மீது என் குடும்பத்தையும் தரக்குறைவாக சமூக வலைதளங்களில்
பேசி வருவதைப் பார்த்தேன். அவர்களுக்கு ஒன்று சொல்லிக் கொள்கிறேன்.. கருத்தை கருத்தால்
எதிர்கொள்வோம்” என்று கூறி இருந்தார்.
மேலும் அவர் விஜய் கட்சியை பிஜேபியின் பி டீம் என்பதாகவும் குறிப்பிட்டு
இருக்கிறார். இப்போது அவர் செந்தில்பாலாஜி தலைமையில் பத்துக்கும் மேற்பட்ட இளைஞர்களுடன்
திமுகவில் இணைந்துள்ளார்.
இந்த நிலையில் தவெகவினர், ‘’வீடியோ போட்டுவிட்டால் உடனே கட்சியில்
முக்கியப் பதவி கொடுக்க வேண்டுமா..? திமுகவில் அவருக்குப் பதவி தரவில்லை என்றால், அங்கேயும்
வம்புக்கு இழுப்பார். அவரது அம்மாவின் கட்சியில் இணைந்திருக்கிறார். ஆனால், அவரது அறிக்கை
முரணாக உள்ளது. அரக்கோணம் திமுக நிர்வாகியால் ஒரு பெண் பாதிக்கப்பட்டு, போராடி வருகிறார்.
ஆனால் குற்றவாளியை தப்பிக்க வைக்க, சட்டத்தின் பிடியை தளர்த்தி திமுக அரசு பதிவு செய்த
வழக்கால், இப்போது அந்த நபர் முன்ஜாமீன் பெற்றுள்ளார். முதல்வரின் சொந்த சகோதரி நடத்திய
கூட்டத்தில் பெண் காவலருக்கே பாதுகாப்பு இல்லை என்கிற போது, பெண்கள் பாதுகாப்பில் திமுக
அரசு சிறந்து விளங்குவதாக சொல்வதை எப்படி எடுத்துக்கொள்வது என்று தெரியவில்லை…’’ என்று
கிண்டல் செய்கிறார்கள்.