Share via:
பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸுக்கும், அவரது மகன் அன்புமணிக்கும்
இடையிலான விரிசல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அம்மாவை கொலை செய்ய முயற்சி செய்தார்
அன்புமணி, 35 வயதில் எம்.பி. பதவி கொடுத்து தவறு செய்துவிட்டேன், தலைமைக்குத் தகுதியானவர்
இல்லை என்றெல்லாம் அடுத்தடுத்த் குற்றச்சாட்டுகளை அடுக்கிவருகிறார்.
ராமதாஸின் பேச்சு பாட்டாளிகளிடம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
அன்புமணிக்கு இப்படி ஒரு முகம் இருக்கிறதா என்று அதிர்ந்து நிற்கிறார்கள். அதேநேரம்
அன்புமணி ஆதரவாளர்கள், ‘’வீட்டுக்குள் பேசி முடிக்க வேண்டியதை பொதுவெளியில்
பேசிவிட்டாரே’’ என்று வருந்துகிறார்கள்
இந்நிலையில் பொருளாளர் திலகபாமாவை ராமதாஸ் நீக்கி நடவடிக்கை எடுத்த
கொஞ்ச நேரத்தில் அவர் கட்சியில் நீடிக்கிறார் என்று அன்புமணி அறிக்கை வெளியிட்டார்.
தொடர்ந்து நிர்வாகிகளிடம் ஆலோசனை நடத்திவருகிறார் அன்புமணி. மூத்த தலைவர்கள் தவிர வேறு
யாரும் ராமதாஸிடம் இல்லை. இந்த நிலை நீடிப்பது பா.ம.க.வின் எதிர்காலத்துக்கு ஆபத்து
என்று அனைவரும் கருதுகிறார்கள்.
ராமதாஸ் கேள்விகளுக்கு எந்த பதிலும் சொல்லாமல் சென்னை சோழிங்கநல்லூரில்
ஒரு திருமண மண்டபத்தில் பாமக மாவட்டச் செயலாளர்கள், பொறுப்பாளர்களை அன்புமணி சந்தித்துப்
பேசிவருகிறார். இன்னமும் எந்த இடத்திலும் ராமதாஸ் குறித்து அன்புமணி எதிர்மறையாக பேசவில்லை.
ராமதாஸ் அரசியலில் இருந்து வெளியேறிவிட்டார் என்று ஒரு அறிவிப்பை அன்புமணி அறிவிப்பார்
என்று சொல்லப்படுகிறது.
இத்தனை பிரச்னைகளுக்கும் பா.ஜ.க.வே காரணம் என்று குற்றம் சாட்டுகிறாகள்.
இதுகுறித்து தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரனிடம் கேட்டபோது, ‘’பாமக நிறுவனர்
ராமதாஸ் மற்றும் அன்புமணி ஆகியோருக்கு இடையிலான மோதலுக்குப் பின்னால் பாஜக இருப்பதாக
கூறப்படுவது வேடிக்கையாக இருக்கிறது. பாஜகவுக்கும், பாமகவின் உட்கட்சிப் பிரச்சினைக்கும்
எந்த சம்பந்தமும் கிடையாது. இது முழுக்க முழுக்க அவர்களின் உட்கட்சி சார்ந்த பிரச்சனை.’’
என்று தெரிவித்தார்.
ஆயிரக்கணக்கான குடிசைகளைக் கொளுத்திய ராமதாஸ் வீடு இப்போது பற்றி
எரிகிறது என்று விடுதலை சிறுத்தைகள் பதிவிட்டு வருகிறார்கள்.