Share via:

வரும் 2026 தேர்தலில் தி.மு.க. கூட்டணிக் கடசிகள் சிந்தாமல் சிதறாமல்
இருக்கும் நேரத்தில் அ.தி.மு.க.வும் பா.ஜ.க.வும் உறவு வைத்துள்ளன. இப்போது பா.ம.க.வும்
தே.மு.தி.க.வும் அடுத்தகட்ட நகர்வு குறித்து குழப்பத்தில் உள்ளன. இந்நிலையில் மீண்டும்
ராஜ்யசபா சீட் விவகாரத்தை எழுப்பி பரபரப்பை பற்ற வைத்திருக்கிறார் தே.மு.தி.க.வின்
பொருளாளர் சுதீஷ்.
அவர் கொடுதிருக்கும் ஒரு பேட்டியில், ‘’2024 மக்களவைத் தேர்தல்
வரைக்கும் அவர்களோடு கூட்டணியில் இருந்திருக்கிறோம். 2024 மக்களவை தேர்தலில்
பாஜக கூட்டணியை விட்டு அதிமுக விலகினாலும் நாங்கள் அதிமுக கூட்டணியில் போட்டியிட்டோம்.
இப்போது அதிமுக-வும் பாஜக-வும் மீண்டும் இணைந்திருக்கிறார்கள். இனி, மீண்டும்
அனைவரும் ஒன்றிணைய வேண்டும். தேமுதிக அக்கூட்டணியில் தொடர்வதா வேண்டாமா
என்பதை எங்களது பொதுச்செயலாளர் உரிய நேரத்தில் முடிவு செய்வார்.
ஜனவரி 9-ல் கடலூரில் தேமுதிக மாநாடு நடைபெற உள்ளது. அதில்,
தேமுதிக யாருடன் கூட்டணி என்பதை கட்சியின் பொதுச்செயலாளர் முறைப்படி அறிவிப்பார்.
தேமுதிக-வுக்கு ராஜ்ய சபா சீட் தருவதாக முன்னமே வாக்குக் கொடுத்திருந்ததா அதிமுக? உறுதியாகக்
கொடுத்தார்கள். முழுக்க முழுக்க உண்மை இது. நேரம் வரும்போது அனைத்தையும் வெளிப்படையாகச்
சொல்வேன்.
அதிமுக அளித்த உத்தரவாதத்தால் தான் நான் 2024 மக்களவைத்
தேர்தலில் போட்டியிடவில்லை. இதற்கு முன் நான் 2009-ல் கள்ளக்குறிச்சியிலும்
2014-ல் சேலத்திலும் போட்டியிட்டேன். சேலத்தில் எனக்காக மோடி பிரச்சாரம் செய்தார்.
2019-ல் மீண்டும் பாஜக கூட்டணியில் கள்ளக்குறிச்சியில் போட்டியிட்டேன்.
2026 சட்டப் பேரவைத் தேர்தலில் போட்டியிடுவது குறித்தும் யோசிக்கிறேன். அதேநேரம்,
மாநிலங்களவை உறுப்பினர் பதவியை பெறுவதில் எங்களுக்கும் விருப்பம் உண்டு. உகந்த
வாய்ப்பு கிடைக்கும் போது அதைப் பற்றி கண்டிப்பாகப் பேசுவோம். அதற்கான தகுதியும்
எங்கள் கட்சிக்கு உள்ளது’’ என்று கூறியிருக்கிறார்.
விஜய்யுடன் கூட்டணிக்கு வாய்ப்பு உண்டா என்ற கேள்விக்கு, ‘’தலைவர்
கேப்டன் மீது நடிகர் விஜய்க்கு நல்ல கருத்து இருந்தது. அதேபோல், கேப்டனுக்கும்
விஜய்யுடன் நல்ல நட்பு தொடர்ந்தது. திரைத்துறையில் நடிகர் விஜய்யின் வளர்ச்சியில்
கேப்டனுக்கு பெரும்பங்கு உண்டு. ஆனாலும், நட்பும் அரசியலும் வேறு வேறு. ஆகவே,
தவெக உடன் கூட்டணி வைப்பது உள்ளிட்ட அனைத்து விஷயங்கள் குறித்தும் கடலூர் மாநாட்டில்தான்
முடிவு செய்வோம்…’’ என்று பதில் கூறியிருக்கிறார்.
ஆக, தேர்தல் பேரம் ஆரம்பம்.