Share via:

நடிகர் விஜய் கட்சி தொடங்கி ஒரு வருடம் ஆகிவிட்டாலும் இன்னமும்
எந்த தேர்தலிலும் போட்டியிட்டு தன்னுடைய வாக்கு வங்கியை நிரூபித்தது இல்லை. ஆனால்,
தொடர்ச்சியாக விஜய்க்கு ஆதரவாக பல சர்வேக்கள் வலம் வருகின்றன. விஜய்க்கு 100 சீட் கிடைக்கும்
என்று வெளியாகியிருக்கும் சர்வே தமிழக அரசியலைப் புரட்டிப் போட்டிருக்கிறது.
ஒரு நாளிதளில் மும்பை தனியார் நிறுவனம் நடத்திய சர்வேயில் விஜய்
கட்சியான தமிழக வெற்றிக் கழகத்திற்கு 95 -105 சீட் கிடைக்கும் என்றும் முதல்வர் வேட்பாளர்
அடிப்படையில் விஜய்க்கு 39.4% ஆதரவு இருப்பதாகவும்
கூறப்பட்டுள்ளது. அதேநேரம் ஸ்டாலினுக்கு 18.6% செல்வாக்கும் எடப்பாடி – 18.6% செல்வாக்கும்
மட்டுமே இருக்கிறது.
மேலும் அந்த சர்வேயில் தி.மு.க.வுக்கு 75 முதல் 85 சீட்களும் அதிமுகவுக்கு
55 முதல் 65 சீட்களும் கிடைக்கும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அதோடு ஜாதி அடிப்படையில்
எடுக்கப்பட்ட சர்வேயில் முக்குலத்தோர் மத்தியில் அதிமுகவுக்கு 44.21 வாக்குகளும் விஜய்க்கு
34.5 சதவீதமும் திமுகவுக்கு 17.3 சதவீத ஆதரவும் இருக்கிறது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இது குறித்து பேசும் தி.மு.க.வினர், ‘’நிறுவனத்தின் பெயர் கூட
போடாமல் நாளிதழ் சர்வே வெளியிட்டிருப்பதைப் பார்க்கும்போதே இது ஒரு போலி சர்வே என்பதும்
விஜய்யிடம் பணம் வாங்கிக்கொண்டு வெளியாகியிருப்பதும் தெரிகிறது’’ என்கிறார்கள்.
அதேநேரம் த.வெ.க.வினர், ‘’விஜய்க்கு இதை விட அதிக செல்வாக்கு இருக்கிறது
என்பதை தேர்தல் நேரத்தில் நிரூபிப்போம். இந்த சர்வேயில் இருக்கும் அளவுக்கு வெற்றி
கிடைத்தாலும் கூட்டணி ஆட்சியே அமையும்’’ என்று குதூகலப்படுகிறார்கள். அதேநேரம், விரைவில்
சகாயம் எங்கள் கட்சியில் சேரப்போகிறார். அவருக்கு துணை முதல்வர் பதவி கொடுக்கப்படும்
என்றும் சொல்கிறார்கள்.
இதெல்லாம் விஜய்க்கும் சகாயத்துக்கும் தெரியுமா என்பது புரியவில்லை.