Share via:

பிரபல யூடியூபர் சவுக்கு சங்கர் வீட்டில் கழிவுகள் கொட்டப்பட்ட
விவகாரத்தில் செல்வப்பெருந்தகை மீது குற்றச்சாட்டு எழுப்பினார். ஆனால், இதுவரை அவர்
மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதையொட்டி சிபிஐ வழக்கு கேட்டு வழக்கு தொடர்ந்திருக்கிறார்
சவுக்கு சங்கர்.
சென்னை மாநகராட்சியில் தூய்மைப் பணியாளர்களை தொழில்முனைவர்களாக
மாற்றும் திட்டத்தில் முறைகேடு நடந்திருப்பதாக சவுக்கு சங்கர் பேசியிருந்தார். அதில்
தூய்மைப் பணியாளர்கள் வேலை செய்யாமல் பணம் பார்ப்பதாக ஒரு குற்றச்சாட்டு கூறியிருந்தார்.
இந்த நிலையில் தூய்மை பணியாளர்களை அவதூறாக பேசியதாகக் கூறி அவரது வீட்டில் கழிவுகள்
கொட்டப்பட்டன.
இந்த சம்பவத்துக்கு செல்வப்பெருந்தகை தான் காரணம் என சவுக்கு சங்கர்
குற்றம்சாட்டினார். ஆனால், அதனை செல்வப்பெருந்தகை மறுத்துவிட்டார். இதையடுத்து சென்னை உயர் நீதிமன்றத்தில் சவுக்கு சங்கர், “தூய்மைப்
பணியாளர்களுக்கு அதிகாரம் வழங்கக் கூடிய வகையில், அவர்களை தொழில் முனைவோர்களாக மாற்றுவதற்கு
அண்ணல் அம்பேத்கர் தொழில் முன்னோடி திட்டத்தை தமிழக அரசு அறிவித்திருந்தது. அதுபோலவே
துாய்மை பணியாளர்களுக்கு 50 % மானியத்துடன் நவீன கழிவுநீர் அகற்றும் ஊர்திகள், உபகரணங்கள்
வழங்கும் மத்திய அரசின் நமஸ்தே திட்டமும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த திட்டங்களை செயல்படுத்தும் பணிகள் சட்ட விரோதமாக தலித் இந்திய
வர்த்தக மற்றும் தொழில் சபை என்ற தனியார் அமைப்புக்கு வழங்கப்பட்டு உள்ளது. இதன்மூலமாக
கோடிக்கணக்கான ரூபாய் முறைகேடுகள் நடைபெற்றுள்ளது. இந்த முறைகேட்டில் செல்வப்பெருந்தகை
முக்கிய பங்கு வகித்துள்ளார்.
தூய்மைப் பணியாளர்களுக்கு அதிகாரம் வழங்க ஒதுக்கப்பட்ட தொகை என்பது
பயனாளிகளுக்கு சென்று சேரவில்லை. இதுபற்றி பேசியதற்காக தூய்மை பணியாளர் உடையில் வந்த
சமூக விரோதிகள் எனது வீட்டில் கழிவு நீரைக் கொட்டியதோடு வன்முறையிலும் ஈடுபட்டனர்.
முறைகேடு குறித்து புகார் அளித்தும், இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஆகவே,
எனது புகாரின் மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்த சிபிஐக்கு உத்தரவிட வேண்டும்”
என்று வலியுறுத்தியுள்ளார்..’’
இந்த வழக்கு நீதிபதிகள் ஜி.ஆர்.சுவாமிநாதன், லட்சுமி நாராயணன்
அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வருகிறது. செல்வப்பெருந்தகைக்கு சிக்கல் வருமா என்பது
தெரிந்துவிடும்.